Skip to main content

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்கக்கூடாது!!! ஏன்... வழியெல்லாம் வாழ்வோம் #16

பேதைப்பருவ குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவு முறைகள்:

 

vazhiyellam vaazhvom
குழந்தை பிறந்தவுடன் முதல் இரெண்டு நாட்களில் சுரக்கும் தாய்ப்பால். மஞ்சள் நிறத்துடன் காணப்படும். அதிலுள்ள ‘கொலஸ்ட்ரம்’ எனப்படும் பொருள் குழந்தையின் நோயெதிர்ப்புத்தன்மையை பன்மடங்கு அதிகரிக்கும். எனவே, கட்டாயமாக இதை குழந்தைக்குப் புகட்ட வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதை விடவும், இன்று புட்டிப்பால் கொடுப்பது சர்வ சாதாரணமாகிவிட்டதை முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் அத்தியாயத்தில் பேசியிருந்தோம். இன்று பல பெயர்களில் குழந்தைகளுக்கான போசாக்கு உணவுகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துவிட்டன. அவற்றுக்கான விளம்பரங்களில் வரும் குழந்தைகள் போன்று நம் குழந்தைகளும் புஷ்டியாக வளரவேண்டும் என்பது பல இளம் தாய்மார்களின் ஆசையாகவே உள்ளது. ஆரோக்கியமான குழந்தையாய் வளரவேண்டும் என்ற எண்ணம் போய், அழகான குழந்தையாய் தம் குழந்தை வளரவேண்டும் என்ற பெற்றோரின் எண்ணம்தான் இத்தகைய பால்பொருட்கள் கடைவீதியெங்கும் கண்ணில்படக் காரணம்.

 

 


புட்டிப்பால் கொடுப்பது குழந்தையின் உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நல்லது அல்ல. தாய்ப்பால் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயின் மீது அதீத பாசமும், ஒட்டுதலும் இருப்பதாய் மனநல மருத்துவம் சொல்கிறது.  என் உறவுக்காரக் குடும்பத்துப்பிள்ளை ஒன்று. அதிக விலையுள்ள புட்டிப்பால் கொடுத்து வளர்த்தோம் என்று அடிக்கடி அவளது பெற்றோர்கள் அவளிடம் சொல்வார்கள். வளர்ந்தபின் அவர்கள் வீட்டில் நடந்த ஒரு விவாதத்தில் அவளது அப்பா, "தாய்ப்பாலுக்கு கணக்குப்போட்டா தாலி மிஞ்சுமா" என்று கேட்டார். அவள் உடனடியாகப் பதில் சொன்னாள்: "நீங்க புட்டிப்பால் தான கொடுத்து வளர்த்தீங்க. அதுக்கு கணக்குப் போட்டுடலாம் அப்பா" என்று. இதெல்லாம் குழந்தைகளின் மனநலம் சார்ந்த காரணிகள். குழந்தைகளே தாம் புட்டிப்பால் குடித்து வளர்ந்தோம் என்பதை விரும்புவதில்லை.  தினையில் கூழ் செய்து, பிரசவமான பெண்ணுக்கு கொடுப்பது அன்றைய வழக்கம். தினை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். ஆனால், இப்போதோ மதர்ஸ் ஹார்லிக்ஸ், ரஸ்க் என்று பல உணவுகளை அறிமுகப்படுத்துகிறது உணவு மார்க்கெட். ஆனால், அன்றைய  தினை கூழ், கருவாடு, வெள்ளைப்பூண்டு போன்றவற்றில் கிடைத்த பலன்கள் இத்தகைய பானங்கள், உணவுகளில் இல்லை. தவிர்க்க இயலா சூழ்நிலைகளில் மட்டுமே ஆயத்தப்பால் ஆகிய புட்டிப்பாலை கொடுக்கவேண்டும்.

 

 

 

குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் கொடுக்கக்கூடாது?


குழந்தைகள் பிறந்து ஒரு வயதைக் கடக்கும் வரை அவர்களுக்குப் பசும்பால் கொடுக்கக்கூடாது என்பதே நிபுணர்களின் கருத்து. ஒரு வயதுக்கு முன்பாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசும்பால், குழந்தைகளின் செரிமான அமைப்பை கடினமாக்குகிறது. பாலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் குளோரைடு ஆகியவை குழந்தைகளின் சிறுநீரகத்தைப் பாதிக்கின்றன. பாலில் குறைந்த அளவில் இருக்கும் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்துக்கள் குழந்தைகளிடம் ரத்த சோகையை உண்டாக்குகின்றன. "ஒரு மாட்டுப்பால்" என்று ஒரே ஒரு நாட்டு மாட்டுப்பால் (வேறு வேறு மாடுகளில் இருந்து கறந்த பால்களைக் கலக்காமல்) கொடுக்கும்போதே இத்தகைய பிரச்சனைகள் உருவாகும் என்றால், இப்போதைய மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலின் தன்மைகள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை எப்படிப் பாதிக்கும் என்பதை நாம் சொல்லத்தேவையில்லை. எனவே, ஒரு வயதுவரை குழந்தைகளுக்கு பசும்பால் கொடுக்காமல் இருப்பதே சிறந்தது.

 

அதேபோல், குழந்தைகளுக்கு 4 வயது ஆகும் வரை நட்ஸ்கள் எனப்படும் கொட்டைகளைத் தவிர்ப்பது நல்லது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஏனெனில், இவ்வகையான கொட்டைகளை உண்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கெட்டியான வெண்ணெய் போன்றவையும் குழந்தைகளின் உடல்நலத்துக்கு எதிரிகளே. நன்கு உருக்கிய வெண்ணெயை நெய்யாக மாற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

 

 


இரண்டு-மூன்று வயது வரை கூட குழந்தைகள் மேல் நாம் காட்டும் அக்கறை ஏதோ ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கும். அதன்பின் கிரச்கள் அல்லது விளையாட்டுப்பள்ளிகளில் அவர்களை விட்டபின், மொத்தமாய் அவர்கள் மேல் அக்கறை கொள்ளும் அளவு நம் வாழ்க்கை முறையும் அனுமதிப்பதில்லை. அதனால்தான் அந்த வயது முதல் துரித உணவுகளுக்குப் பிள்ளைகள் அடிமையாகிவிடுகின்றனர். குளிர்பானங்களும், ஐஸ்கிரீம்களும் அவர்களது பிடித்த உணவாகின்றன. பொதுவாகவே குழந்தைகளின் நாக்கில் சுவையுணர் மொட்டுக்கள் வயது வந்தவர்களைவிட அதிகம் இருக்கும். அதனால்தான் அவர்கள் சாக்லேட்களை விரும்பி உண்கின்றனர். இனிப்புகள் மூளையின் செயல்திறனை தூண்டும் காரணிகளாக இருப்பினும் ஓர் அளவுக்கு மேல் இனிப்புகளை உட்கொள்வது குழந்தைகளின் வயிறையும், பற்களையும் வெகுவாகப் பாதிக்கும். இந்த வயதில் குழந்தைகளுக்கு நம் பாரம்பர்ய சிறுதானிய உணவுகளை ருசியாக செய்து கொடுத்துப் பழகினால் அது அவர்களின் உணவு வழக்கத்தை சரியான பாதைக்கு மாற்றிவிடும்.

 

குளிர்சாதப்பெட்டியில் வைத்து பயன்படுத்தப்படும் பொருட்களின் அபாயங்கள்:


"மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்" என தேரன் சித்தர் என்ற தமிழ் மருத்துவர் பாடியதாக தமிழ் மருத்துவம் கூறுகிறது.  அதாவது முந்தைய நாள் சமைக்கப்பட்ட உணவை, அது அமிர்தம் போன்ற சுவை உடையதாய் இருந்தாலும்கூட சாப்பிடக் கூடாது . ஆனால் இன்று, ஒரு முறை குழம்பு வைத்து அதை மூன்று நாள் பயன்படுத்தும் வழக்கம் பல வீடுகளில் உள்ளது. இதுவும் குழந்தைகளின் செரிமான பாகங்களை பாதிக்கும். மேலும் உணவுடன் சேரும் வேதிப்பொருட்கள் சிறுகக்கொல்லும்(Slow Poison) நச்சாய் மாறுகின்றன. உடனடியாய் சமைத்து உண்ணும் வாய்ப்பு இல்லை என்றாலும், ஏதாவது தாமிர, வெண்கல அல்லது சில்வர் பாத்திரங்களில் வைத்தாவது குழந்தைகளுக்கு உணவு கொடுப்போம்.

 

vazhiyellam vaazhvom
இதுவரை பேதைப்பருவத்துப் பிள்ளைகள் பற்றி மட்டுமே பேசினோம். இந்தப்பருவம் வரை ஆண்பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளுக்கும் பெரிதாய் எந்த வேறுபாடும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஆனால், அடுத்த பெண் பருவங்கள் அனைத்திலும் உடல் மற்றும் மனரீதியில்   பெண்பிள்ளைகள், ஆண்பிள்ளைகளிடமிருந்து அனைத்திலும் வேறுபடுகின்றனர். அவற்றை வரும் வாரங்களில் காண்போம்.

(தொடரும்)

 

 

முந்தைய பதிவு:

பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் ஜீரோ சைஸ் மிஸ் ஆகிறதா? வழியெல்லாம் வாழ்வோம் #15

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்