Skip to main content

தினசரி பல் துலக்குவதால் என்ன பயன்? - விளக்குகிறார் டாக்டர் அருண் கனிஷ்கர்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

Dental hygiene tips

 

தினமும் காலை எழுந்தவுடன் முக்கியமாக நாம் செய்யும் வேலைகளில் ஒன்று பல் துலக்குதல். சரியான முறையில் பல் துலக்குவது எப்படி, பல் துலக்குவதால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பது குறித்து பல் மருத்துவர் டாக்டர் அருண் கனிஷ்கர் விளக்குகிறார்.

 

வாய் சுத்தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது பல் துலக்குதல் தான். நாம் பல் துலக்கவில்லை என்றால் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பல் சொத்தை, ஈறுகள் சேதம், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். நம்முடைய உடலில் நல்ல பாக்டீரியா, கெட்ட பாக்டீரியா என்று இருவகையான பாக்டீரியாக்கள் இருக்கும். அவை எப்போதும் சரிசமமான அளவில் தான் இருக்கும். கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமானாலோ, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ அதனால் பல நோய்கள் ஏற்படும். இது வாய்ப் பகுதிக்கும் பொருந்தும்.

 

பல் துலக்குதலில் டூத்பேஸ்ட், மவுத்வாஷ் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் நன்று. காலையில் குறைந்தபட்சம் இரண்டு நிமிடங்கள் பல் துலக்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் அதேபோல் இரண்டு நிமிடங்கள் பல் துலக்க வேண்டும். உங்களுக்கு அதிக நேரம் இருந்தால் ஒவ்வொரு முறை உணவு உண்ட பிறகும் பல் துலக்குவது நல்லது. சாஃப்டான டூத்பிரஷை பயன்படுத்துவது நல்லது. டூத்பிரஷில் எடுத்தவுடன் பேஸ்ட் தடவி விடாமல் முதலில் அதை நன்கு கழுவ வேண்டும். இல்லையெனில் ஏற்கனவே உள்ள கிருமிகள் வாய்க்குள் சென்றுவிடும். 

 

பல் துலக்கி முடித்த பிறகும் பிரஷை நன்கு கழுவ வேண்டும். டூத்பேஸ்ட் மற்றும் மவுத்வாஷைப் பொறுத்தவரை உங்களுக்கு எது தேவையோ அதை மருத்துவரின் பரிந்துரையோடு தேர்ந்தெடுப்பது நல்லது. பல் மருத்துவரை அணுகி வாயை சுத்தப்படுத்தலாம். பல் சுத்தப்படுத்துதலைப் பொறுத்தவரை எதையுமே வேகமாக அல்லாமல் பொறுமையாகச் செய்ய வேண்டும். இல்லையெனில் ரத்தக் கசிவு ஏற்படும். நாக்கையும் தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும். இதை தினமும் செய்ய வேண்டும். இல்லையென்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.