ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கர்ப்பிணிகளைப் பாதிக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன..?

10:25 AM Feb 12, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்குப் பிறகு, நீங்கள் கர்ப்பத்திற்கு முயற்சி செய்பவரா? ஆம் எனில், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசிகளின் மூலம் கரோனா வைரஸ் பரவும் வீரியத்தைப் பெரும்பகுதி நாம் குறைக்க முடிகிறது. இந்தியாவில், தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவாக்ஸின்’ ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனகா ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்சின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியாவில் முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. எல்லாத் தேவையான காரணிகளையும் பூர்த்தி செய்யும் நிலையில், இந்த தடுப்பூசிகள் இனி வரும் நாட்களில் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும்.

இருப்பினும், இந்த தடுப்பூசியானது குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே சிலரால் பார்க்கப்படுகிறது. உலக சுகாதார மையம் கருவுற்ற பெண்களிடம், இந்த கரோனா வைரஸ் தடுப்பூசியைச் செலுத்துவதற்கு ஆரம்ப காலத்தில் ஆதரிக்கவில்லை. தற்போது, இந்த நிலைப்பாட்டினை மாற்றி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வழி வகை செய்துள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு இந்த கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானதா?

இதற்கு ஆதராகவும், எதிராகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் உலாவி வருகின்றன.

கரோனா தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டதிலிருந்து, குறைந்தது 8 வார காலத்திற்குக் கருவுறுதலைத் தவிர்க்குமாறும், கரோனா தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்கு வழங்கக் கூடாது என்றும் ஒரு தரப்பு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் மற்றொரு தரப்பினர், கரோனா தடுப்பூசிகள் போடுவதற்கும் கருச்சிதைவிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறி வருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்த ஒரு ஆராய்ச்சியிலும் இந்த தகவல்கள் எதுவும் சரி என நிரூபிக்கப்படவில்லை.

கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் ஏதேனும் உள்ளதா?

உலகின் பல்வேறு நாடுகளும் அவர்கள் கண்டுபிடித்த தடுப்பூசிகளை மக்களுக்குப் போடத் துவங்கியுள்ள நிலையில், இவற்றுள் கர்ப்பிணிகளுக்கு என்று தனிப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த 2020ஆம் ஆண்டில் பத்திற்கும் அதிகமான மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஒரு சில நிறுவனங்களே இந்த முயற்சியில் வெற்றி அடைந்துள்ளன. அவற்றில், பயன்பாட்டில் இருக்கும் முக்கிய தடுப்பூசிகளில், ‘ஃபைசர் - பயோஎன்டெக்’ தடுப்பூசி, ‘கோவாக்சின்’, ‘மாடர்னா’ தடுப்பூசி, ‘சினோபார்ம்’ தடுப்பூசி மற்றும் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவை அடங்கும். இந்த தடுப்பூசிகளின் செயல்தன்மை மற்றும் செயல்வீரியம் போன்றவை வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். இவற்றுள், ‘கோவாக்சின்’ மற்றும் ‘கோவிஷீல்ட்’ பாரம்பரிய தடுப்பூசிகளாக இருந்தாலும், இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிகளைப் போலவே தயாரிக்கப்பட்டவை. ‘மாடர்னா’ மற்றும் ‘ஃபைசர் - பயோஎன்டெக்’ போன்றவை mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. இருப்பினும், இந்த இரு நிறுவனங்களும் தற்போது, தங்கள் தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கும் உகந்ததா என்று சோதனையை நடத்தி வருகின்றன.

எனவே, இந்தத் தடுப்பூசிகள் கர்ப்பிணிகளுக்குப் பாதுகாப்பானதா? அல்லது இல்லையா? என்பதை முடிவு செய்ய மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.

கரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றனவா?

கருவுற்ற பெண்களுக்கு கரோனாவிற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதில் ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை? கரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை உருவாக்குகின்றனவா? என்பது குறித்தும் பல்வேறு தரப்பட்ட கேள்விகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இருப்பினும், இந்த கரோனா தடுப்பூசிகள் மலட்டுத்தன்மை மற்றும் கருக்கலைப்பை உருவாக்குகின்றன என இதுவரை எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை.

இனி வரும் நாட்களில் கருவுற்ற பெண்களுக்கும் தடுப்பூசி சிறந்தது!

கர்ப்பிணிகள் கரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட பிறகு, தலை வலி, தசை வலி, காய்ச்சல், சோர்வு போன்ற சில ஆரம்பக் கட்ட உடல் உபாதைகளை எதிர்கொள்ளலாம். இவை, கர்ப்பிணிகள் மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவரும் எதிர்கொள்ளும் உடல் உபாதைகள் ஆகும். இதுவரை தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் எந்த ஒன்றும் கர்ப்பிணிகளுக்கு உகந்ததல்ல என்று நிரூபிக்கப்படவில்லை.

எனவே, முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடத் துவங்கியுள்ள நிலையில், இனி வரும் நாட்களில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கருவுற்ற பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்ததாக அமையும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் வேறு சில உடல் உபாதைகள் சந்திக்க நேர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று உரிய மருந்தினை எடுத்துக்கொள்வது நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT