ADVERTISEMENT

அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? - மனதை பாதித்த உண்மை சம்பவம்!

07:23 PM Apr 16, 2020 | suthakar@nakkh…

அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன சமைப்பது? என்று நம்மில் பலரும் யோசனை செய்து கொண்டிருக்கும் சமயம் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? என்ற ஏக்கத்தில் பலர் பரிதவிக்கிறார்கள். முகத்துக்கு மாஸ்க் அணிந்துகொண்டு ஆர்.சி.புக்., டிரைவிங் லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் பேப்பர், புகை சான்றிதழ் அனைத்தையும் சரிபார்த்து கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன். கையிலும்,வீட்டிலும் சுத்தமாக பணம் இல்லை. அக்கா வீட்டுக்கு போனால் பணம் வாங்கிக்கொண்டு வரலாம். ''கரோனா காவல்துறை!'' போகும் வழியில் தடுத்து நிறுத்தலாம். நான் வாடகைக்கு இருந்த வீட்டு ஓனர் 'பார்மஸி' வைத்திருப்பதால் வந்து திருப்பி தருகிறேன் என்ற ''ஜென்டில்மேன் ஒப்பந்தப்படி'' மருத்துவம் சார்ந்த சிறு, சிறு பொருள்கள் ''இரவல் வாங்கி'' வண்டியின் முன் பக்கம் எல்லோருக்கும் தெரியும்படி வைத்துக்கொண்டேன்.

ADVERTISEMENT




வழியெங்கும் மடக்கிய காவலர்களை பணிவு கலந்த புன்முறுவலுடன் வணங்கி கடந்து அக்காவிடம் பணமும் வாங்கிக் கொண்டு திரும்பினேன். வரும்போது சுமார் 30 வயதுடையவர் கை காட்டி 'லிப்ட்' கேட்டார். மாஸ்க் அணிந்திருப்பதை பார்த்தபின் ஏற்றிக் கொண்டேன். வரும் வழியில் அவர் வீட்டில் இறங்கிக் கொண்டவர் என்னையே உற்று பரிதாபமாக பார்த்தார். அவர் கண்களில் ''பசிக்கலையும் இயலாமையும்'' தெரிந்தது. என்னங்க என்றேன் நான். இதுதான் சார் என் வீடு.... எங்க சொந்த ஊர்ல எல்லோருமே எனக்கு இருந்தாலும் இந்த நிமிஷம் கரோனாவால நான் ஒரு அநாதை. உங்களால முடிஞ்சா ஏதாவது பணம் குடுங்க. தலை குனிந்து கேட்டார்.

நான் ''சர்க்''...கென்று வண்டி எடுத்து வந்து விட்டேன். இரவு முழுவதும் அந்த மனிதர் நினைவாகவே இருந்தது. கூச்சமே இல்லாமல் கேட்டாரே, அவர் கண்களில் பொய்மை இல்லை. ஏதாவது கொடுத்துவிட்டு வந்திருக்கலாமோ என்று என் ''அடி மனசு'' சொல்லிக் கொண்டே இருந்தது. எனக்கு அக்காவீடு இருந்ததுபோல அவருக்கு இல்லாமல்கூட இருந்திருக்கலாம். அதிகாலையிலேயே அவரைப் பார்த்து கொஞ்சமாவது செலவுக்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தபின்னரே என்னால் நிம்மதியாக தூங்க முடிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT