Skip to main content

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி அவசியம் - விளக்குகிறார் டாக்டர் ஸ்ரீகலா

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

cervical cancer cure Vaccination

 

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயும் ஒன்று. இது எதனால் ஏற்படுகிறது, இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் என்ன என்பது குறித்து டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்.

 

தடுப்பூசிகள் மூலம் ஆரம்பக்காலம் முதலே அம்மை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை நாம் குணப்படுத்தி வந்திருக்கிறோம். பல புற்றுநோய்களுக்குக் காரணம் தெரியாது. ஆனால் கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான காரணம் மற்றும் அதை குணப்படுத்துவதற்கான தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இன்று உள்ளது. இந்த நோய் வராமல் தடுப்பதற்கு, பெண்களை மிகக் குறைந்த வயதில் திருமணம் செய்து கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்க நடைமுறையை நாம் கடைப்பிடிப்பதன் மூலமும் நோய்த் தொற்றுகளிலிருந்து விடுபடலாம்.

 

இந்த நோய்க்கான தடுப்பூசிகள் தற்போது அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை குழந்தைப் பருவத்திலேயே செலுத்த வேண்டும். அந்த வயதில் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உருவாகும். வைரஸ் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு முன்பே தடுப்பூசி செலுத்த வேண்டும். அதன் பிறகு செலுத்துவது தவறு. மூன்று தவணைகளாக இந்தத் தடுப்பூசி செலுத்தப்படும். 

 

இதன் அதிக விலை மற்றும் இதுகுறித்த புரிதல் இல்லாத காரணத்தினாலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மறக்காமல் பெண் குழந்தைகளுக்கு 9 முதல் 14 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் தடுப்பூசி போடாத கர்ப்பிணிப் பெண்ணே இல்லை என்று சொல்லலாம். ஏனெனில் அது குறித்த புரிதல் இங்கு அனைவருக்கும் உள்ளது. அதுபோலவே கர்ப்பப்பைவாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்த புரிதலும் வரவேண்டும். 

 

இந்தத் தடுப்பூசி மூலம் பல உயிர்களை நாம் காப்பாற்ற முடியும். போலியோ, அம்மை போன்ற நோய்களைத் தடுப்பூசி மூலம் நாம் எப்படி ஒழித்தோமோ, அதுபோலவே அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் எதிர்கால சமுதாயம் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இல்லாத சமுதாயமாக நிச்சயம் உருவாகும். இந்தத் தடுப்பூசியின் விலையைக் குறைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. பள்ளிகளிலேயே இந்தத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.