Skip to main content

மன அழுத்தம் கண்களைப் பாதிக்குமா? - விளக்குகிறார் கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Can stress affect the eyes? - explains Ophthalmologist Sasikumar

 

மன அழுத்தத்தால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்குகிறார்.

 

தினமும் நாம் நிச்சயமாக பின்பற்ற வேண்டிய விஷயங்களில் ஒன்று உடற்பயிற்சி. அதற்காக தினமும் நேரம் ஒதுக்க வேண்டியது நம்முடைய கடமை. உங்களுக்கு எந்த நேரம் ஏதுவாக இருக்கிறதோ அந்த நேரத்தில் அதைச் செய்யலாம். நீச்சல் பயிற்சி என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. உணவு, உடற்பயிற்சி, தண்ணீர், தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான வாழ்வுக்கு நிச்சயம் தேவை. பெரிதாக இல்லையென்றாலும் சைக்கிளில் செல்வது போன்ற சின்னச் சின்ன பயிற்சிகளை நாம் மேற்கொள்ளலாம். 

 

இதனால் மன அழுத்தம் நிச்சயம் குறையும். சாப்பிடும் உணவுகள் நன்றாக செரிமானமாகும். நன்றாக தாகம் எடுக்கும். மன அழுத்தம் என்பது கண்களையும் பாதிக்கும். கண்ணுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கும்போது அதன் பவர் அதிகமாகும். கண் விழித்திரையில் ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்புண்டு. மூளையில் இருக்கும் முதல் ரத்தக்குழாய் கண்களுக்கு தான் செல்கிறது. எனவே கண்களுக்கு நிறைய ரத்த ஓட்டம் தேவை. சரியான ரத்த ஓட்டம் இல்லாவிட்டால் பார்வையையே இழக்கும் வாய்ப்பும் இருக்கிறது. 

 

கண்புரை நோய் ஏற்படுவதற்கும் மன அழுத்தம் காரணமாக இருக்கிறது. உடற்பயிற்சி மட்டுமல்லாமல் கண் பயிற்சியும் அவசியம். இதன் மூலம் கண் பார்வைத்திறன் அதிகமாகும். யோகாசனத்தில் நம்முடைய முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் தான் அவை. கண்ணுக்கு அதிகம் பயிற்சி கொடுப்பதால் பரதநாட்டியக் கலைஞர்களுக்கு கண்பார்வை நன்றாக இருக்கும். கண் பயிற்சியின் மூலம் கண்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எலும்புகளுக்கு நம்மால் வலு சேர்க்க முடியும். 

 

பிராணாயாமம் செய்வது மிகவும் நல்லது. கண்ணுக்கும் மூளைக்கும் நிறைய ஆக்ஸிஜன் தேவை. பிராணாயாமம் செய்வது மிகுந்த பலனளிக்கும். மருந்துகளை விட வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் பயிற்சிகளின் மூலமே கண்களின் ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்ய முடியும்.