Blood in urine can be a sign of cancer - explains Dr Srikala Prasad

Advertisment

சிறுநீரில் ரத்தம் வருவது என்பது நாம் சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய பிரச்சனை அல்ல. நம்மில் பலருக்கு சிறுநீரில் ஏன் ரத்தம் வருகிறது என்பது தெரியாது. அதற்கான காரணம் குறித்தும் தீர்வுகள் குறித்தும் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விரிவாக விளக்குகிறார்.

சிறுநீரில் ரத்தம் என்பது அலட்சியப்படுத்தக்கூடாத ஒரு விஷயம். ஏனெனில் இது புற்றுநோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். சிறுநீரில் ரத்தம் என்பது ஏதேனும் ஒரு தொற்றால் நிகழலாம்.சிறுநீரில் கற்கள் ஏற்படுவதால் நிகழலாம்.ஏதாவது அடிபட்ட காரணத்தினாலோ, சிறுநீரில் கட்டி ஏற்பட்டதினாலோ நிகழலாம். சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளாலும் சிறுநீரில் ரத்தம் வெளியேறலாம். இதை நாம் ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. பீட்ரூட் போன்ற உணவுகளை நாம் சாப்பிடும்போது அதனால் சிறுநீரின் நிறம் சிறிது மாறலாம். ஆனால் அது ரத்தமல்ல. 50, 60 வயதுடைய பெண்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். சிறுநீரில் ரத்தம் வருமானால் அது சிறுநீர் கழிக்கும்போது மட்டுமே ஏற்படும்.

மாதவிடாய் காரணமாக ரத்தம் வெளியேறினால் உள்ளாடைகளில் கசிவு ஏற்பட்டிருக்கும். இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சிறுநீரில் ரத்தம் வெளியேறும் பிரச்சனையோடு எங்களிடம் வந்தால் முதலில் முழுமையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்வோம். எதனால் இது ஏற்பட்டது என்பது பரிசோதனைகளின் மூலம் கண்டுபிடிக்கப்படும். தொற்றுகளினால் ஏற்பட்டிருந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்தி விடலாம். சில நேரங்களில் சிறுநீர்ப்பையையே அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுபோன்று பல்வேறு வகையான சிகிச்சைகள் இருக்கின்றன.

Advertisment

எதனால் சிறுநீரில் ரத்தம் வருகிறது என்பதை முழுமையாக ஆராய்ந்த பிறகு தான் சிகிச்சையை முடிவு செய்வோம். காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு வருபவர்கள் இங்கு பலர் உண்டு. ஒருமுறை சிறுநீரில் ரத்தம் வந்தால் கூட உடனே மருத்துவரிடம் நீங்கள் வர வேண்டும். அதுவே உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.