Skip to main content

விண்வெளியில் பிரவசம் சாத்தியமா? வாலன்டியர் கேட்கும் நிறுவனம்!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
Baby

 

 

 

பல நூறு நட்சத்திரங்களும், நிலவும், வானமும் மட்டுமே நம்மளவுக்குத் தெரிந்த இந்த வானத்தில், நம் கண்ணுக்கு எட்டாத ஏராளமான அதிசயங்கள் இருக்கின்றன. இதுபற்றித் தீவிரமாக மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் புதுப்புது கோள்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
 

அவைபற்றி வெளியாகும் செய்திகளில் முக்கியமாக எழும் கேள்வி - அந்தக் கோளில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பதுதான். அப்படி விண்வெளியில் வாழ்க்கை நடத்த மனிதர்கள் தயாராகி வரும் இந்தக் காலகட்டத்தில், விண்வெளியில் பிரசவம்பெற முடிந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை முன்னிறுத்தி, அதைச் சாத்தியமாக்குவதற்கான வேலையிலும் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். 
 

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்க்கக்கூடிய இதுபோன்ற அரிதான சம்பவங்களை, இன்னும் ஆறு ஆண்டுகளில் சாத்தியப்படுத்திக் காட்டுகிறோம் என்கிறது ஸ்பேஸ் லைஃப் எனும் விண்வெளி ஆராய்ச்சிக்கான நிறுவனம். ‘மனிதன் பலகோள்களில் வாழக்கூடிய ஒரு உயிரினமாக மாறவேண்டும் என்றால், அவனால் விண்வெளியில் குழந்தை பெற்றுக்கொள்ளவும் இயலவேண்டும்தானே?’ என்ற கேள்வியுடன் இந்த ஆராய்ச்சியை ஸ்பேஸ் லைஃப் நிறுவனம் தொடர்ந்து வருகிறது. 
 

Baby

 

 

 

இதுகுறித்து தெரிவிக்கையில், “முதலில் விந்து மற்றும் கருமுட்டைகளை இணைத்து உருவாக்கப்பட்ட கருவை, ஸ்பேஸ் - எம்பிரியோ - இன்குபேட்டர் என்ற கருவியின் மூலம் வருகிற 2021-ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்புவோம். நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த இன்குபேட்டர் மீண்டும் பூமி திரும்பியதும் அதில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்துவோம். 
 

அதன்பிறகு, 2024-ஆம் ஆண்டு பிரசவத்திற்குத் தயாராகி வரும் பெண்ணைத் தேர்ந்தெடுத்து விண்ணில் 500 கிலோமீட்டருக்கு மேல் விண்கலத்தில் குழந்தைப் பெற வைக்கப்போகிறோம். 24 - 36 மணிநேரம் வரை விண்ணில் நடக்க இருக்கும் இந்த நடைமுறையின் போது உலகத்தரம் வாய்ந்த மருத்துவக்குழு உடனிருக்கும். அங்கு சிறிய தவறுகூட நடக்காமல் இதைப் பார்த்துக்கொள்வோம். இதற்கு நிறைய செலவாகும் என கணக்கிட்டிருக்கிறோம். குறிப்பாக இந்த முயற்சிக்கு தன்னார்வலர்களாக பெண்கள் முன்வரவேண்டும். இதற்கான தேர்வு வருகிற 2022ஆம் ஆண்டு முதல் தொடங்கும்” என தெரிவித்துள்ளது.  

 

Next Story

'உங்கள் குழந்தை செர்லாக் பேபியா?' -எச்சரிக்கை மணி அடித்த உலக சுகாதார அமைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Is your child a Cerelac baby?'-World Health Organization has sounded the alarm

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான செர்லாக் என்பது ஊட்டச்சத்து உணவு எனப் பொதுவாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் இந்தியாவில் நீண்ட நெடும் காலமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 'நெஸ்லே' நிறுவனம் இந்தியாவில் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், நெஸ்லேவின் குறிப்பிடத் தகுந்தத் தயாரிப்பில் ஒன்றாக உள்ளது செர்லாக்.

இந்தநிலையில் IBFAN எனப்படும் Baby Food Action Network என்ற ஐரோப்பிய அமைப்பு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்கப்படும் செர்லாக் எனும் குழந்தைகளுக்கான  ஊட்டச்சத்து உணவை ஆய்வு செய்தது. ஊட்டச்சத்து பொருள் என்று கூறப்படும் செர்லாக்கில் சுவைக்கு அடிமையாக்கி அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் என்பது சேர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது நெஸ்லேவின் முக்கிய சந்தையாக கருதப்படும் பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில் மட்டும் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் செர்லாக்கை  குழந்தைக்கு ஒரு முறை ஊட்டுகையில் 2.2 சதவீதம் அடிக்டிவ் சுகர் குழந்தையின் உடலுக்கு செல்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தியாவை விட எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விற்கப்படும் செர்லாக்கில்  அடிக்டிவ் சுகரின் அளவு 5.2 கிராமாக உள்ளது. நெஸ்லேவின் இந்தச் செயல்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கும், குழந்தைகள் பார்ப்பதற்கு அளவுக்கு மீறி குண்டாக இருப்பதற்கும் இவையே காரணம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனையில் நடந்த அவலம்; மருத்துவர்கள் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Incident for pregnant woman at Hospital in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் கர்ப்பிணி பெண். இவருக்கு, கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால்,  கன்வாடியா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த கர்ப்பிணி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு, மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே, அந்த பெண்ணுக்கு தீராத பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம் மீதும், மருத்துவர்கள் மீதும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்துவதற்காக உயர்மட்ட குழுவை அமைத்து மாநில மருத்துவ கல்வி துணை செயலாளர் உத்தரவிட்டார். 

அந்த குழுவினர், சம்பந்தபட்ட மருத்துவமனைக்கு சென்று, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர். அவர்கள் அளித்த அந்த அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனையைச் சேர்ந்த 3 மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்ட காரணத்திற்காக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை வாசலிலே குழந்தை பிறந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.