Skip to main content

பழங்குடி மாணவர்களின் மற்றொரு தாய் மகாலெட்சுமி டீச்சர் !

ஆசிரியர் வேலை கிடைத்தால் போதும் வாழ்க்கையே செட்டில் ஆகிடும் என்று நினைக்கும் பல பேருக்கு மத்தியில் மலைவாழ் மக்களின் தலையெழுத்தை மாற்றியேத் தீருவேன் என களம் இறங்கியிருக்கும் துடிப்பான பெண்தான் மகாலெட்சுமி டீச்சர். திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் தான் இவரது கிராமம். கண்பார்வை குறைபாடுள்ள அப்பா, மனநலம் பாதிக்கப்பட்ட அம்மா, தங்கையை டீச்சராக்குவதற்காக திருமணம் செய்து கொள்ளாத அக்கா ரமணி. களை பறித்தல், கரும்பு சுமத்தல் போன்ற கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் ரமணி அக்கா. அக்காவின் உழைப்பில் ஆசிரியர் பயிற்சி முடித்து, அரசு ஆசிரியையாக வேலையும் கிடைத்துள்ளது மகாலெட்சுமிக்கு. மலைக்கு சென்று வேலைக்கு போக வேண்டாம் என கூறிய அக்காவிடம் “படிப்பே இல்லாத ஊருக்கு படிப்பு சொல்லிக் கொடுக்குறது பெரிய புண்ணியம்” என்று கூறி சம்மதிக்க வைத்து வேலையில் சேர்ந்திருக்கிறார். 

mahalakshmi teacher

மரங்கள் நிறைந்த இடம் நமக்கு காடுகள் என்றால், அவர்களுக்கு அது கடவுள். அப்படி காடுகளை நேசிக்கும் உண்ணதமான மனிதர்கள்தான் மலைவாழ் மக்கள். படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்கிற விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கென தனி உலகத்தையே கட்டமைத்தவர்களும் கூட. அப்படி 99.9 சதவீதம் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிதான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை. இங்கு அறுவடை முடிந்ததும் டிசம்பர் மாதம் கேரளாவிற்கு மிளகு எடுக்க செல்பவர்கள் ஏப்ரல் மாதம்தான் ஊருக்கே திரும்புகிறார்கள் மக்கள். இவர்களோடு தங்களது பிள்ளைகளை கூலி வேலைக்காகவும், மாடு மேய்க்கவும், மரம் வெட்டவும் அழைத்து செல்கிறார்கள். இந்த ஐந்து மாதங்களில் சம்பாதிப்பதை வைத்துதான் ஓராண்டு முழுவதும் சாப்பிடுகிறார்கள். இந்த நிலையில் இருப்பதுதான் அரசவெளி கிராமம். இங்கு “அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி” ஒன்று உள்ளது. எல்லா பள்ளிகளிலும் மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் இந்தப் பள்ளி மட்டும் பன்றிகள் படிக்கும் கூடாறமாக 2006-ல் இருந்துள்ளது. 

tribes teacher

இப்பள்ளியில்தான் மகாலெட்சுமிக்கு ஆசிரியராக வேலை கிடைத்துள்ளது. சாக்லேட், பென்சில், பேனா என பல பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு பல கனவுகளோடு முதல் நாள் பள்ளிக்கு வருகிறார். துள்ளி விளையாடும் மாணவர்கள் இருக்க வேண்டிய பள்ளியில் இரண்டு பன்றிகள் மட்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு வகுப்பறையில் உட்கார்ந்து கண்ணீர் வடித்திருக்கிறார் மகாலெட்சுமி. மதியம் 12.30-க்கு சாப்பாட்டுக்காக மணி அடித்தவுடன் சத்துணவை வாங்கிக் கொண்டு சிட்டாக பறந்திருக்கிறார்கள் சில குழந்தைகள். எப்படியாவது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிட வேண்டுமென காடு, மலை, ஏரி, குளம் வயல் என சகதியில் விழுந்து புரண்டு தூக்கி வந்திருக்கிறார் இந்த ஆசிரியை. இவர் வருவதைப் பார்த்த குழந்தைகள் காடுகளில் ஒழிந்து கொண்டு பல நாட்கள் ஆட்டம் காண்பித்திருக்கிறார்கள். பின்பு இவர்கள் பெற்றோர்களிடம் பேசி கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்திருக்கிறார். குளிக்காமல் பள்ளிக்கு வருபவர்களை பள்ளியிலேயெ குளிப்பாட்டி விட்டு, பரட்டை தலையோடு வரும் மாணவர்களுக்காக சலூன் கடையில் சென்று பயிற்சி எடுத்து முடியும் வெட்டி விடுகிறார் மாகலெட்சுமி டீச்சர்.
 

family photo

பள்ளிநேரம் முழுவதும் பாடம் எடுப்பதைப் பார்த்து கடுப்பான குழந்தைகளுக்காக காலையில் பாடம், மதியத்துக்கு மேல் கதை சொல்வது, நடிப்பது, ஆட்டம் பாட்டம் என குழந்தைகளை குதூகலப்படுத்தி இருக்கிறார். இதனால் மற்ற குழந்தைகளும் ஜாலியாக பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இரண்டு மாணவர்கள் இருந்த இப்பள்ளியில் இப்போது 56 கிராமங்களில் இருந்து 320 மாணவர்கள் படித்து வருவது என்பது பிரம்மிக்க வைக்க கூடியதாக இருக்கிறது. நம்பித்தான் ஆக வேண்டும், தொடக்கப்பள்ளியில் இருந்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு பல கலைகள் மூலம் கல்வியளித்துக் கொண்டிருக்கிறார் இவர். இது மட்டுமில்லாமல் பறையிசை, ஒயிலாட்டம் என பல்வேறு கலைகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். பொதுமக்கள் உதவியுடன் பள்ளிக் கட்டிட்த்தையும் கட்டி முடித்திருக்கிறார். மேலும் பள்ளிக்குத் தேவையான உதவிகளை முகநூல் நண்பர்கள் மூலம் பெற்று பள்ளியை தரம் உயர்த்துக் கொண்டிருக்கிறார். இதைப்பற்றி கேள்விபட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவர்களும் பள்ளிக்கு வந்து வாழ்த்து சொல்லியிருக்கிறார். மேலும் இவரின் மகத்தான கல்வி சேவையை பாராட்டி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் விருது வழங்கி பெருமைபடுத்துகிறது.

இப்படி பல சாதனைகளை செய்த ஆசிரியை வாழ்க்கையில் கசப்பான சம்பவங்களும் நடந்திருக்கிறது. சாப்பாட்டுக்கு வழியில்லாமல், வாடகைக்கு வீடு கிடைக்காமல் நடுத்தெருவில் அனாதையாக தனது கைக்குழந்தையுடன் கதறிக் கொண்டிருந்திருக்கிறார். அந்நிலையில் இந்த மலையை விட்டேப் போய்ருவோம், வா என்று அக்கா ரமணி அழைத்திருக்கிறார். “என்ன ஆனாலும் சரி இந்த குழந்தைகளை விட்டு விட்டு செல்லக்கூடாது என்கிற தீர்மானத்தோடு சேரன் என்பவரின் வீட்டின் ஒரு அறையில் பல இரவுகளை பட்டினியோடு கழித்திருக்கிறார். தாய்ப்பால் கொடுப்பதற்காக உப்பை வாயில் போட்டு தண்ணி குடித்துக் கொண்டு கைக்குழந்தையை காப்பாற்றியிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.சத்தமில்லாமல் சாதனை செய்யும் ஆசிரியை மகாலெட்சுமியிடம் பேசினோம், “பள்ளிக்கூடம் பக்கமே போகாத அப்பா, அம்மாவுக்கு பிறந்த பொண்ணுதான் நான். சின்ன வயசுல அம்மா கூட கூலி வேலைக்கு போவேன். அப்புறம் அம்மாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட பிறகு, எங்களை ரொம்ப அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.
 

mahalakshmi teacher

எப்பவாதுதான் பாசத்தோடு யம்மா’னு கூப்பிடுவாங்க, ஓடிப் போய் பக்கத்துல உக்காந்துப்பேன். அம்மாவுக்கு ஈச்சம் பழம், கொடுக்கா புளி பிடிக்கும்குறதால காட்டுல போய் பறிச்சி கொண்டு கொடுப்பேன். மனநிலை சரியில்லாததுனால திடீர்னு பக்கத்து வீட்டுக்காரங்கள திட்ட ஆரம்பிச்சிருவாங்க, அதனால அம்மாவ ரொம்ப அடிச்சிருவாங்க. கெஞ்சி கேட்டா கூட விட மாட்டாங்க. அப்புறம் குடும்பத்தை அக்காதான் பாத்துக்கிட்டாங்க. இரண்டு வருசத்துக்கு ஒரு யுனிபார்ம்தான் இருக்கும். வயல்ல கெடக்குற துவரையை வித்துதான் பொங்கலுக்கோ, தீபாவளிக்கோ கலர் டிரெஸ் எடுத்து குடுப்பாங்க. கோலி விளையாண்டு கிடைக்குற கோலிக்காய்களை வித்து பரிச்சை பேப்பர் வாங்கிக்குவேன். இது தெரிஞ்ச லூர்துசாமி சார், பரிச்சை பேப்பர் வாங்குறதுக்கு ஒரு ரூபாய் கொடுப்பாங்க. அந்த வறுமையிலயும் நல்ல படிச்சி நல்ல மார்க் வாங்குனதாலதான், இன்னிக்கு டீச்சரா இருக்கேன். “எல்லாத்தையும் திருடிற முடியும், படிச்ச படிப்பை மட்டும் யாராலயும் திருட முடியாது, என்னால முடிஞ்ச அளவுக்கு படிக்க வச்சிட்டேன். நீ புழைச்சிக்கோ’னு அப்பா அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. “அப்பா நீ ஆசைப்பட்ட மாதிரி நான் நல்ல படிச்சி முன்னேறியிருக்கேன், ஒரே ஒருமுறை வந்து பாருப்பா’னு அடிக்கடி சொல்லிட்டுருக்கேன்” என்று கடந்த கால அனுபவங்களை கண்ணீரோடு நம்மிடம் சொல்கிறார். “காக்கா, குருவிகளைக் குறிபார்த்து வேட்டையாடக் கையில் வில்லோடு சுற்றித் திறிந்த சிறுவர்களின் கையில் பேனா பிடித்து எழுத வைத்து, டெல்லி வரை அனுப்பியிருப்பதுதான் மகாலெட்சுமி டீச்சரின் மகத்தான சாதனை. “பழங்குடியின மாணவர்களின் மற்றொரு தாய்” என்று சொல்ல முழுத்தகுதியும் உடையவரே இந்த நல்லாசிரியர் என மகளிர் தினத்தில் கூறுவது மிகப் பொருத்தமானது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்