Skip to main content

மாமியார் கூட சண்டையா..? அம்மாயி அம்மா குழம்பு செய்யுங்க, வயிறு முட்ட சாப்பிடுங்க...!

பேய்க்கு வாக்கப் பட்டால் சுடுகாட்டுலதான் படுக்க வேண்டும்  என்பது போல ஆகி விட்டது மஞ்சுவுக்கு. எவ்வளவு பக்குவமா  நடந்து கிட்டாலும் மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்கவே முடியவில்லை. ஆகாத மருமகள் கை பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம் என்பது போல இவள் மூச்சு காத்து கூட  ஆகாமல் போய் விட்டது. உதட்டுல  உறவு உள்ளத்துல  பகையாக இருந்த குணம் மாறி , ஈர நாக்குக்கு எலும்பில்லை என்பது போல மாமியார் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் 'கொரோனா வைரஸை விட' மோசமான பாதிப்புகளை மஞ்சுவின் மனசுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இளமையில் தன் மாமியார்க் காரியிடம்  அனுபவித்த கொடுமைக்கெல்லாம் இப்போது மஞ்சுவை பழிவாங்கும் வேலையை மிக சிறப்பாக செய்து கொண்டிருந்தாள்.

 

jkமகளை  பெற்ற தாய் மருமகனை மகன் போல பாவிக்கும் போது மகனை பெற்ற தாய் மருமகளை ஏன் மகள் போல் பாவிப்பதில்லை என்ற சந்தேகம் மஞ்சுவின் அடிமனதில் நீண்ட நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது.  அம்மாவின் நினைவு வந்தது அவளுக்கு . கேரளா மாப்பிள்ளை, கை நிறைய சம்பாதிக்கிறார் என அப்பா சொன்ன போது அவ்வளவு தூரத்தில் எல்லாம் பொண்ணை கட்டிக் குடுக்க வேணாம் என மறுத்தவள் மஞ்சுவின் அம்மா. நீலிக்கு கண்ணீர் இமையிலேங்கிற மாதிரி  ''உங்க பொண்ண நான் நல்லா பாத்துக்குவேன் என்று அம்மாவின் கை பிடித்து கெஞ்சிய''  அதே மாமியார்தான்  தனக்கு குழந்தை உண்டாவதில் தாமதம் ஆவது தெரிந்ததும் இப்படி அரக்கி குணமாக மாறிப் போய் விட்டதை எண்ணி வருந்தினாள். 

நேத்து நடந்த  குழம்பு கூத்தை நினைக்கையில் சிரிப்புதான் வந்தது. மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். கிணற்றடியில் ஒரு வார துணியையும் சேர்த்து துவைத்து அலசி காயப் போட்டு அடுப்படிக்கு சாப்பிட வந்தா  ஒரு சொட்டு குழம்பு கூட மிச்சம் வைக்காம குழம்பு சட்டி காலியாக இருந்தது. திங்கிறத தின்னு முடிச்சிட்டு நல்லா தூங்கிகிட்டு இருந்தாள் மாமியார்காரி. மஞ்சுவுக்கு பசி தாங்கவில்லை. ஏதாவது குழம்பு வைத்தாலும் மாமியார் மூக்கு வேர்த்துடும். அவ்வப்போது வந்து இங்கு குழம்பு வாங்கும் பக்கத்து வீட்டு கோமதி நினைவு வந்தது. தோட்டத்து வழியாக போய் கோமதியிடம் , குழம்பு இருக்கா என கேட்டாள். இப்பதான் எல்லாம் காலி பண்ணுனோம். சரி, இதுக்கா கவலை படுற . உனக்கு ''அம்மாயி அம்மா குழம்பு''  தெரியுமா தெரியாதா? ரெண்டு நிமிஷம் அப்டியே நில்லு. குழம்பு ரெடி பண்ணி தர்றேன் என்ற கோமதி , தோட்டத்தில் அவள் பக்கத்தில் இருந்த  நாலு மிளகாய பிடுங்கி வீட்டுக்குள்ள போய் ரெண்டு உப்புக் கல்லு சின்ன உருண்டையா புளியும் தேங்காய் எண்ணெயும்  எடுத்து வந்தவள் அங்கிருந்த கல்லில் வைத்து நல்லா இடிச்சு நசுக்கி  எண்ணெய  ஊத்தி சின்ன  கிண்ணத்தில் வைத்து கொடுத்தாள். இதுதான் இங்க கேரளாவுல அம்மாயி அம்மா குழம்பு. 

உங்க தமிழ்ல சொல்லனும்னா மாமியார் குழம்பு . இதுக்கு ஒரு கதையும் உண்டு . ரொம்ப காலத்துக்கு முன்ன, இங்க கேரளாவுல ஒரு மாமியார்காரி மருமகள சரியா சாப்பாடு போடாம கொடுமை செஞ்சப்ப ஒரு வனதேவதை வந்து இந்த குழம்பு வைக்க சொல்லி குடுத்ததா கதை ஒன்னு உண்டு. சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும் என்று சொல்லி விட்டு சென்றாள் பக்கத்து வீட்டு கோமதி. உண்மையிலயே அபார ருசியாக இருந்தது அம்மாயி அம்மா குழம்பு. எப்பவுமே ரெண்டாவது சாதம்  போட்டுக் கொள்ளாத மஞ்சு,  சாயந்திரம் தூங்கி எந்திரிச்ச உடனே நேரம் காலம் பாக்காம சோறு திண்னும்  மாமியாருக்கு ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்காம சோத்து சட்டிய  காலி பண்ணி சுத்தமா கழுவியும் வச்சுட்டா.  அப்பவே இன்னொரு முடிவும் எடுத்தா மஞ்சு. நான்தான் படிச்சு இருக்கனே... வேலைக்கு போயி சுயமா சம்பாதிச்சு சொந்தக் காசுல சாப்பிட்டாகணும் என்று..!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...