கலைஞரின் மறைவு குறித்து அவரது மகளும் தி.மு.க.வின் மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கவிஞர் கனிமொழியிடம் பேசினோம். உணர்வுப்பூர்வமாக தனது எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் கனிமொழி....எதைச் சொல்வது என்று தெரியவில்லை. நெஞ்சமெங்கும் நினைவின் அலைகள் எழுந்து எழுந்து அடங்குகின்றன. ஒரு துயரச் சூறாவளியை எதிர்கொண்ட நிலையில் பல்வேறு உணர்வுக் கலவைகளோடு நிற்கிறேன். அன்புமிகும் அப்பாவாய், நாடறிந்த கலைஞராய், மாபெரும் இயக்கத்தின் தலைவராய், சுயமரியாதைச் சுடரொளியாய், பெரியார், அண்ணாவின் மறுவடிவாய், மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கிறது அந்த மகத்தான உருவம்.
அப்பா இல்லை என்பதையே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கு சென்றாலும் என் அருகில் அவர் இருப்பதுபோல, அவரிடம் நான் விவாதிப்பதுபோல, ஒரு உணர்வு எனக்குள் இருந்துகொண்டே கிறது. அவர் இல்லை என்பதை முழுமையாக நான் உணர்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம் எனத் தோன்றுகிறது. ஒருவித வெறுமை சூழ்ந்திருந்தாலும், ’"அதை எல்லாம் வீழ்த்தும் வலிமை உன்னிடம் இருக்கிறது.உனக்குள் நான் இருக்கிறேன்' என அப்பா எனக்குள் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில், ஒரு மகளாகவும் கட்சியின் ஒரு தொண்டராகவும் அப்பாவின் மறைவு எனக்குப் பெரிய இழப்புதான்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="1282094959" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எண்பதாண்டு காலம் தமிழக அரசியலின் மையப் புள்ளியாகவும், அச்சாணியாகவும் இருந்த அப்பாவின் அரசியலில், பேச்சும் எழுத்தும் முதன்மையாக இருந்தன. அப்படிப்பட்டவர் கடந்த ஒன்றரை ஆண்டு காலம் மௌனத்தை கடைப்பிடித்தது மிகப் பெரிய வலி. ஒருவேளை அவருடைய மௌனத்தை நாங்களெல்லாம் பழகிக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில் அவர் அப்படி இருந்தாரோ தெரியவில்லை. இருப்பினும் அவரது முதுமையை வைத்து அவரது நிசப்தத்தை எதார்த்தமாக ஏற்றுக்கொண்டாலும் மனது என்னவோ ஏற்கமறுத்தது. அந்த விரலாலும் குரலாலும் அவர் எவ்வளவு சாதித்திருக்கிறார். நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
அவரது பேசா நாட்களில் அவரது அருகில் அமர்ந்துகொண்டு பேசுவோம். அதைக் கேட்டு அவரால் பதில் சொல்ல முடியாமல் போனாலும் கூட, அவரது உதடுகள் அசையும். பதில் சொல்வதுபோல வார்த்தைகளை உதிர்ப்பார். கைகளை நீட்டி எங்களது கரங்களைப் பற்றிக்கொள்வார். மகிழ்வையும் நெகிழ்வையும் அதிலேயே உணர்த்துவார். பேசமுடியாத நேரத்திலும் 2 ஜி வழக்கில் விடுதலையானதை அப்பாவிடம் சொன்னபோது, "ரொம்ப சந்தோஷம்மா! பேராசிரியர் எங்கே?' எனக் கேட்டார். அந்த 4 வார்த்தைகளை தொடர்ச்சியாக அவர் சொன்னபோது எங்களுக்கேற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. அப்பாவின் முதுமை, அவரது சிந்தனையை, பாதித்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள ஒருமுறை அவரிடம், "அப்பா, கடவுள் இருக்கிறாரா?' என்று கேட்டேன். பேசமுடியாத அந்த நிலையிலும், இல்லை என்று தலையை அசைத்து மறுத்தார். அவர் மௌனம் கூட பகுத்தறிவு பேசியதைக் கண்டு வியந்தேன்.