Skip to main content

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்!

ia-Desktop ia-mobile

கடந்த இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும், பிஜேபியும் இந்தியாவை மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன. இரண்டு கட்சிகளுக்கும் கொடிகள் வேறு, நிறங்கள் வேறு, கோஷங்கள் வேறு வேறு. என்றாலும் பொருளாதாரக் கொள்கை ஒன்றுதான். பெரிய தொழில் நிறுவனங்களிடம் கட்சிக்கான நிதியாக பெரிய தொகையை பெற்றுக்கொள்வது. பதிலுக்கு நிறுவனங்களின் நலனுக்கேற்ப பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பது. மற்றப்படி ஓட்டு வங்கிக்கேற்ப மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வருவது. 


 

price hike


 

 

இந்த பெட்ரோல், டீசல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். இரண்டு கட்சிகளும் செய்த குளறுபடிகள் மிக அதிகம். இதற்கு முன் சர்வதேச கச்சா எண்ணெய் பற்றி  கொஞ்சம் பார்த்துவிடுவோம். 1960 இல் தொடங்கப்பட்ட ஓபெக் எனப்படும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு தான் சர்வதேச அளவில் முதன்மையாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை முடிவு செய்துவருகிறது. இந்த கூட்டமைப்பு 14 முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு. என்னதான் ஓபெக் எண்ணெய் உற்பத்தி அளவையும் விலையையும் நிர்ணயித்து வந்தாலும். உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் சச்சரவும், வளைகுடா போரும் விலையில் பல ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிட்டன. பின்னர் உலகப் பெருளாதாரம் மிக பெரும் மாறுதலை அடைந்தது. அதில் மிக முக்கியமானது கம்மாடிட்டி மார்கெட். உலக பங்கு சந்தைகளில் தங்கம், வெள்ளி, பணம், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், கோதுமை உட்பட அனைத்து பண்டங்களும் கம்மாடிட்டி மார்கெட்டில் அதாவது ஊக வணிகத்தில் வர்த்தகம் செய்வது. இப்போது சர்வதேச அளவில் இந்த பண்டங்களின் விலை ஊக வாணிகத்தின் பிடியில் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நாடோ அல்லது அமைப்போ விலையை கட்டுப்படுத்துவது கடினமான காரியம். 2008- 2009 ஆம் ஆண்டு சர்வதேச கச்சா எண்ணெய் கம்மாடிட்டி மார்கெட்டில் ஒரு வரலாற்று அதிசயம் நடந்தது. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் இறங்கிவிட்டது. எந்த அளவில் என்றால் 2008 ஜூன் மாதத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 147 டாலருக்கு விற்பனையானது. 2009 ஜனவரி மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலருக்கு விற்பனையானது. அப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்த வரலாறு காணாத கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் நேர்மையாக பெட்ரோல் விலையை  நிர்ணயம் செய்திருந்தால் லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தது காங்கிரஸ் கட்சி. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு பல  கோடி ரூபாய் மானியமாக அள்ளிக்கொடுத்தது. எரிப்பொருள் மானியம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது மானியம் பெருமளவில் குறைக்கப்பட்டதாகவோ எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதை பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை. 
 

அடுத்து வந்த பிஜேபி அரசு 2017 ஜூன் மாதம் 16 முதல் மாறும் எரிபொருள் விலை என்ற புதிய முறையை அமல்படுத்தியது. இதன்படி தினமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகேற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் ஏற்படும். நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல், டீசல் விலை மாறுதலடையும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது எண்ணெய் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி சேர்ந்தே நிர்ணயிக்கப்படுகின்றது. இந்த புதிய விலை கொள்கையை கொண்டுவந்து எரிபொருள் மானியத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டது பி.ஜே.பி அரசு . பி.ஜே.பி அரசு மாறும் எரிப்பொருள் விலை கொள்கையை அமல்படுத்தி இருந்தாலும் அவ்வப்போது அண்மையில் நடந்த கர்நாடக தேர்தல் போல பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் தலையிட்டு மாற்றி விடுகிறது. ஆனால் இதே அரசு 2014 நவம்பர் முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஒன்பது முறை மத்திய கலால் வரியை உயர்த்தியுள்ளது. இப்படி கடந்த காலங்களில் நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளில் இரண்டு கட்சிகளும் பல அதிரடி மாற்றங்களை செய்துவந்துள்ளன. என்றாலும்  எரிபொருள் விலை சுமை என்னமோ பொதுமக்கள் மீது தான்.
 

 

 

இப்போது இரண்டு நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. ஒன்று தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏறிக்கொண்டே செல்கின்றது. இன்னும் ஏற வாய்ப்புள்ளது. இரண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகின்றது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிகளவில் செலவிட வேண்டியதாகிறது. இது நாட்டின் பொருளாதாரத்தில் வருவாய் பற்றாக்குறையை அதிகரிக்கும். இன்னொருபுறம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக செலவு ஏற்பட்டு, வர்த்தக பற்றக்குறை ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வினால் போக்குவரத்துக்கான செலவு தொடர்ந்து அதிகமாகும். பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து கட்டணம், கப்பல் சரக்கு கட்டணம் என அனைத்தும் அதிக செலவாகும். குறிப்பாக சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பதால் அனைத்து உணவுப் பொருள்களும் கடுமையாக விலை ஏறும். இது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும். 

 

price hike


 

 

 

பண வீக்கம் என்பதனை சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஒர் வருடமாக ரூபாய் 100 என்ற பொருள், இன்று ரூபாய் 120 என்ற நிலைக்கு உயர்ந்தால் அது பணவீக்கம். அன்றும் அதே 100 ரூபாய் மதிப்புதான். இன்றும் அதே ரூ.100 மதிப்புதான். ஆனால் பொருளின் விலை மட்டும் 20 அதிகரித்துவிடும். பொருள் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டின் மதிப்பும் சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை, அதில் ஏற்றமோ இறக்கமோ என எது ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் பிரச்சனையாகும். 


பணவீக்கத்தால் பொருளின் மதிப்பு கூடி மக்களின் வாங்கும் சக்தி குறையும். இதன் விளைவு மக்கள் பொருளை பயன்படுத்துவதைத்தான் குறைப்பார்கள். பொருளின் பயன்பாடு குறைந்தால், உற்பத்தி குறையும், வேலை வாய்ப்பு குறைந்து போகும். ஆக பணவீக்கம் அதிகரிப்பதால் அத்தியாவசிய பொருட்கள் அதிகளவில் விலை ஏற ஆரம்பிக்கும். அதேபோல சிறிய தொழில் நிறுவனங்களின் உற்பத்திக்கான மூலதன செலவு அதிகமாகும். இதனால் கடந்த ஆண்டில் அனுபவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் கொடுமை மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுதொழில்கள் முடங்குவதால் வேலையின்மை ஏற்படும். இன்னொருபுறம் விவசாயிகளுக்கான டீசல் விலை உயர்வு, உரம், யூரியா விலை உயர்வு அதிகரித்து விவசாயம் குறைந்து போகும். இதனால் உணவு பொருள்கள் அனைத்தும் தாறுமாறாக விலை ஏறும். ஆக பெட்ரோல், டீசல் உயர்வால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி அதிகரித்து நாட்டின் தொழில் வளர்ச்சியும் விவசாய உற்பத்தியும் குறைந்து போகும். அப்புறம் டிஜிட்டல் இந்தியா பற்றி பேசி பேசி என்ன செய்வது. பணமதிப்பு நீக்கத்தால் ஏற்கனவே சரிந்துபோன பொருளாதார வளர்ச்சி எரிபொருள் பணவீக்கத்தால் பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

  

 

 

இப்படி எரிப்பொருள் விலை உயர்வால் நாட்டின் பொருளாதாரம் சரிவடையும் நிலையிலிருப்பதற்கு மத்திய அரசோ, மாநில அரசோ சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இரண்டு அரசுகளின் அண்மைக்கால அறிவிப்புகளில் நம்பிக்கை இழந்து போய்விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வு என்ற பெயரில் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. பொதுவாக ஒரு பொருளை உற்பத்தி செய்பவர்கள் மீது வரி விதித்தால் என்ன நடக்கும். அந்நிறுவனம் தனது உற்பத்தி பொருளின் விலையை உயர்த்திவிடும். அதாவது மத்திய அரசு விதிக்கும் வரி அந்த பொருளின் உற்பத்தி விலையில் சேர்ந்துவிடும். இப்போது அந்த பொருளை பயன்படுத்தும் நுகர்வோர்தான் அந்த வரியை மறைமுகமாக செலுத்துவார். கதை இப்படி இருக்க இந்த முடிவை ஏன் மத்திய அரசு எடுக்கிறது. அதுவும் கைவசம் இருக்கவே இருக்கிறது ஜி.எஸ்.டி அதில் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வந்தால் விலை கணிசமாக குறைந்துவிடுமே. இதைத்தானே பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை செய்து வருகின்றன. அந்நாட்டு மக்களுக்கு நம்மைவிட குறைந்த விலையில் பெட்ரோலும், டீசலும் கிடைக்கின்றன. இந்த நாடுகளும் சர்வதேச கச்சா எண்ணெய் இந்தியா போலதான் இறக்குமதி செய்கின்றன. பெட்ரோல், டீசல் மீது குறைந்த அளவில் வரி விதிக்கின்றன அவ்வளவுதான்.  
 

மத்திய அரசுதான் இப்படியான அறிவிப்பை வெளியிடுகிறது என்றால், தமிழக அரசு வெளிப்படையாகவே பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கமாட்டோம் என்கிறது. அதுவும் அமைச்சர் ஜெயக்குமார் வரியை குறைத்தால் அரசுக்கான வருவாய் குறைந்துவிடும் என்று காமெடி செய்கிறார். சரி பெட்ரோல், டீசல் மீது 10 சதவீதம் வரியை குறைப்பதால் இப்போது தமிழக அரசு விதிக்கும் 34 சதவீத வாட் வரியில் என்ன குடியா மூழ்கி போய்விடும். இப்படி வைத்துக்கொள்வோம் தொடர் டீசல் விலை உயர்வால் விலைவாசி அதிகமாகும். அரசுக்கான போக்குவரத்து செலவு அதிகமாகும். சமீபத்தில் தான் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதால் மீண்டும் உயர்த்த முடியாது, அதனால் போக்குவரத்து துறையில் வருவாய் இழப்பு ஏற்படும். பால் விலையை உயர்த்த முடியாது, டாஸ்மாக் சரக்கு வினியோக போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது. அரசு கட்டுமானம் மற்றும் முதலீடு செலவுகள் அதிகமாகும். இவையெல்லாம் டீசல் விலை உயர்வை பொறுத்து செலவு அதிகரித்து தமிழக அரசில் 20 சதவீத நிதி பற்றாக்குறையை ஏற்படுத்துமே. இது ஏன் புரியவில்லை. அதைவிட டீசல், பெட்ரோல் மீதான 10 சதவீத மதிப்புக்கூட்டு வரியை குறைப்பதுதானே புத்திசாலித்தனம். பொருளாதாரம் என்பது ஒரு சுழற்சி. அந்த சுழற்சியில் எங்கு ஓட்டை விழுந்தாலும் மொத்த பொருளாதார நிலையும் சரிவுக்கு சென்றுவிடும். ஆக இனி பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவருவதை விட மத்திய, மாநில அரசுக்கு வழியே இல்லை.
  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...