ADVERTISEMENT

மாணவர் வழிகாட்டி: தொலைதூர கல்வி முறையிலும் இன்ஜினியரிங் படிக்கலாம்! #6

10:42 AM Aug 22, 2020 | tarivazhagan

ADVERTISEMENT

தொழிற்படிப்புகள் மட்டுமின்றி, எந்த ஒரு கல்வியையும் நேரடியாக வகுப்பறை பயிற்சி பெறுவதுதான் சிறந்தது. அங்கே, பல மாணவர்களின் சிந்தனைகளும் பகிர்ந்து கொள்ளவும், துறை சார்ந்த அறிவை விசாலாமாக்கி கொள்ளவும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது. உரையாடலுக்கு வழிவகுக்கிறது. எனினும், பணிக்கு சென்றுகொண்டே உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்காகவே இந்திய பல்கலைகளில் தொலைதூர கல்வித்திட்டமும் நடைமுறையில் இருக்கின்றன. கலைப்பாடப்பிரிவுகளை தொலைதூர கல்வித்திட்டத்தில் பயிலும் பலருக்கும் கூட, இன்ஜினியரிங் படிப்பையும் தொலைதூரக் கல்வி முறையில் படிக்க முடியும் என்ற தகவலை அறிந்து வைத்திருப்பதில்லை.

ADVERTISEMENT

நேரடியாக கல்லூரி, பல்கலைகளில் சேர்ந்து படிக்கும்போது பி.இ., பி.டெக்., பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில முடிகிறது. அதுவே தொலைதூரக் கல்வித்திட்டத்தில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படிப்போருக்கு ஏஎம்ஐஇ (AMIE - Associate Member of the Institution of Engineers) என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. உண்மையில், ஏஎம்ஐஇ படிப்பு என்பது பி.இ., பி.டெக்., படிப்புக்கு 100 சதவீதம் இணையானது. ஏஎம்ஐஇ பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கவும், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.

ஏஎம்ஐஇ படிப்பில் கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டீரியல்ஸ் அண்டு மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங், மைனிங் இன்ஜினியரிங், புரடக்ஷன் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் ஆகிய பத்து வகையான துறைகள் உள்ளன.

அடிப்படை கல்வித்தகுதி:

12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

படிப்பின் கால அளவு:

ஏஎம்ஐஇ படிப்பு என்பது 6 ஆண்டுகள் படிக்கக் கூடியதாகும். கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., படிப்புகள் நான்கு ஆண்டுகள் கொண்டவை எனில், தொலைதூரக் கல்வித்திட்டத்தில் வழங்கப்படும் ஏஎம்ஐஇ படிப்பு கூடுதலாக 2 ஆண்டுகள் சேர்த்து படிக்க வேண்டிய சூழல் உள்ளது. தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெற அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

தேர்வு முறை:

+2 கல்வித்தகுதியுடன் ஏஎம்ஐஇ படிப்பில் சேருவோர் பகுதி-அ பிரிவில் 10 தாள்களும், பகுதி-ஆ பிரிவில் 9 தாள்களும் என 6 ஆண்டுகளில் மொத்தம் 19 தாள்கள் தேர்வு எழுத வேண்டும். அதுவே, டிப்ளமோ கல்வித்தகுதியுடன் இப்படிப்பில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் பகுதி-அ பிரிவில் 4 தாள்களும், பகுதி-ஆ பிரிவில் 9 தாள்களும் என ஆறு ஆண்டுகளில் மொத்தம் 13 தாள்களும் தேர்வு எழுத வேண்டும். இது தவிர ஆய்வுக்கூடம் மற்றும் புராஜக்ட் தேர்வுகளும் இருசாராருக்கும் உண்டு.

வேலைவாய்ப்பு:

நாம் முன்பே சொன்னதுபோல பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு எந்த வகையிலும் ஏஎம்ஐஇ படிப்பும் குறைந்தது இல்லை. ஆகையால் இப்படிக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. வெளிநாடுகளிலும் ஏஎம்ஐஇ படிப்பு செல்லத்தக்கது என்பதால், எந்த நாட்டிலும் வேலைவாய்ப்பை பெற முடியும். மேலும் விவரங்களை www.ieindia.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT