Skip to main content

குழந்தைகளின் கூகுள்

Published on 12/03/2018 | Edited on 13/03/2018

இன்றைய தலைமுறை இணையம் இல்லாமல் இருக்க முடியாது. உலகம் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்தில் நாமும் சரி, நம் குழந்தைகளும் சரி ஈடுகொடுக்க வேண்டுமென்றால் அதற்கு இணையம் அவசியம். இதில் மாற்றுக்கருத்து இருக்காது. குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் அவர்களின் அறிவை வளர்க்க நாம்தான் உதவி செய்ய வேண்டும். "நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுவீங்க, குழந்தை பாக்கக் கூடாதத பாத்துருச்சுனா, தப்பா எதாவது வந்துருச்சுனா, இந்த வயசுலேயே பேஸ்புக் பாக்க ஆரம்பிச்சா என்ன பண்றது" என்று  கேட்பவர்களுக்கு, "நாங்க இருக்கோம்" என்று கூகுள் கொண்டுவந்ததுதான் கிடில் (kidle.com). இது பலநாட்களுக்கு முன்பிருந்தே இருந்தாலும், இந்தியாவில்  இதை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை.  

kidle.com

நீங்கள் இதில் தலைகீழாக நின்று தேடினாலும் ஆபாசம் சார்ந்த எதுவும் (sexual contents) பார்க்க முடியாது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்தவிதமான சமூக ஊடங்களுக்கும், கூகிள், யூடூயூப் போன்ற பிரபலமான பக்கங்களுக்கும் இந்த வலைத்தளத்திலிருந்து செல்ல முடியாது. இதனால் குழந்தைகள் தங்களுக்கு தேவை இல்லாதவற்றை பார்க்க இயலாது. இதில்வரும் விவரங்கள் யாவும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.  கடினமான ஆங்கில வார்த்தைகள் இதில் இல்லாமலும், மிகநீளமாக, பத்தி பத்தியாக இல்லாமல் குழந்தைகள் படிக்கும் அளவிற்கு சுருக்கமாகவும் இதில் தரவுகள் தரப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் தேவையில்லாத, அதிகளவு  கருத்துக்களை தவிர்த்துவிடுகின்றனர்.

குழந்தைகளை தைரியமாக இதில் உலாவ விடலாம் அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நீங்கள் அருகிலிருக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை என்றாலும், அவர்களுக்கு அருகில் நீங்கள் இருக்கும்போதுதான் குழந்தைகள் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும், அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.

 

Next Story

புறாவைப் பிடிக்கக் கிணற்றுக்குள் இறங்கிய சிறார்கள்; அலறி துடித்த பொதுமக்கள்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
children went down into the well to catch the pigeon

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது முனிவாழை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் கணேஷ்(14) மற்றும் செந்தில் மகன் கிருபா(13). இருவரும் அவர்களது விவசாய நிலத்தின் அருகாமையில் உள்ள பாசார் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் புறாக்கள் இருப்பதைக் கண்டு அதனைப் பிடிப்பதற்காகக் கிணற்றில் இருந்த கயிறு மூலமாகக் கீழே இறங்கிச் சென்று உள்ளனர்.

சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கிய பின்னர், மீண்டும் மேலே ஏற முடியாமல் இருவரும் கிணற்றுக்குள் குதித்துள்ளனர். கிணற்றில் தண்ணீர் இருந்த காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. பின்னர், கிணற்றுக்குள் இருந்த படியே இருவரும் நீண்ட நேரம் கத்தி கூச்சலிட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதைப்பார்த்து கிணற்றில் எட்டிப்பார்க்க இரண்டு சிறுவர்கள் உள்ளே இருப்பதைப் பார்த்துக் கத்தி கூச்சலிட்டனர். அருகாமையில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து பார்த்தனர்.

அதன்பின்  ரிஷிவந்தியம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் இருவரையும் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். புறாவைப் பிடிக்க சென்ற இரண்டு சிறார்கள் கிணற்றுக்குள் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

துணிக்கடையில் திருட்டு; அதிர்ச்சி கொடுத்த சிசிடிவி காட்சி

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Theft at a clothing store; CCTV footage goes viral

மதுரையில் துணிக்கடை ஒன்றில் கல்லாப்பெட்டியில் இருந்து  சிறுவன் ஒருவன் 62,000 ரூபாய் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் நரிமேடு பகுதியில் அஜித் என்பவர் துணிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் கடையில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து சிறுவன் ஒருவன் பணப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் சென்றான். கடையில் பணம் திருடப்பட்டதாக காவல்துறையில் கடை நிர்வாகத்தினர் புகார் அளித்திருந்தனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது சிறுவன் ஒருவன் திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் ஒருவன் பணப் பெட்டியில் இருந்து பணத்தை திருடிச் செல்லும் அந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.