Skip to main content

மாணவர் வழிகாட்டி: விண்வெளி ஆராய்ச்சி பற்றி படிக்கணுமா? இருக்கவே இருக்கிறது ஐஐஎஸ்டி! #9

Published on 22/08/2020 | Edited on 27/08/2020
Institutes for Aero space

 

 

விண்வெளி, புவியமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்காகவே இருக்கிறது ஐஐஎஸ்டி எனப்படும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (Indian Institute of Space Science and Technology - IIST) பல்கலைக்கழகம். இது, இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சித்துறையால் நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். 

 

பிளஸ்-2 முடித்த மாணவர்கள் ஆராய்ச்சித்துறையில் சாதிக்க வேண்டும், தனித்துவமான படிப்பை தொடர வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் மாணவர்களுக்கு ஐஐஎஸ்டி சரியான இடம். இந்த பல்கலையின் முதல் வேந்தர் வேறு யாருமில்லீங்க, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள்தான், முதன்முதலாக வேந்தர் பதவி வகித்தவர். இங்கு என்னென்ன படிக்கலாம்? அதற்கான வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம். 

 

படிப்பின் விவரம்: 

பி.டெக்., ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங் (B.Tech., Aero Space Engineering)

பி.டெக்., ஏவியானிக்ஸ் (B.Tech., Avionics)

 


5 ஆண்டுகள் கொண்ட பி.டெக்., + எம்.எஸ்., / எம்.டெக்., (இவற்றில், பி.டெக்., பிசிக்ஸ் மற்றும் எம்.எஸ்., அல்லது எம்.டெக்., படிப்பில் எம்.எஸ்., அஸ்ட்ரோனமி மற்றும் அஸ்ட்ரோபிசிக்ஸ், எம்.எஸ்., எர்த் சிஸ்டம் சயின்ஸ், எம்.எஸ்., சாலிட் ஸ்டேட் பிசிக்ஸ், எம்.டெக்., ஆப்டிகல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை படிக்கலாம்.

 

அடிப்படைக் கல்வித்தகுதி: 

12ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருக்க வேண்டும். 


படிப்பின் கால அளவு: 

பி.டெக்., - 4 ஆண்டுகள். 

இரட்டை பட்டப்படிப்புகள் - 5 ஆண்டுகள்.

 

எழுத வேண்டிய நுழைவுத்தேர்வு: 

ஐஐஎஸ்டி நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதுகுறித்த மேலதிக விவரங்களை www.iist.ac.in என்ற இணையதள பக்கத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

 

கல்லூரி விவரம்: 

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், மேற்கு மலைச்சாரலில் ஐஐஎஸ்டி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இளநிலை பட்டப்படிப்பில் 560 மாணவர்களும், முதுநிலையில் 160 மாணவர்களும் படிக்கின்றனர்.

 

கல்வியின் பயன்பாடு: 

எம்.டெக்., எம்.எஸ்., எம்.பி.ஏ., உள்ளிட்ட உயர்கல்வி பயிலலாம். ஐ.ஐ.டி.,க்களைப் போலவே ஐ.ஐ.எஸ்.டி.,யில் படித்தாலும், படிப்பு முடிந்து வெளியேறுவதற்கு உள்ளாகவே ஏதாவது ஒரு தனியார் துறை அல்லது இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையில் வேலை கிடைத்து விட வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஐஐஎஸ்டியில் படித்த மாணவர்களுக்கு இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எடுத்த எடுப்பிலேயே மாதம் லட்ச ரூபாய் ஊதியம் பெறும் வாய்ப்புகளும் அதிகம்.

 

 

 

Next Story

“தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்படும்” - தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உறுதி!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
Tamil Putulavan Project Will Be Launched  Chief Secretary Sivadas Meena Confirms

பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு என்ற நிகழ்வானது கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி (25.06.2022) அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கப்பட்டது. கடந்த 2022-23 கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 லட்சத்து 30 ஆயிரத்து 628 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உயர்கல்வி வழிகாட்டுதலின் மூலமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர் நிகழ்வாக விளையாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினால் கோயம்புத்தூரில் 2024 ஆண்டுக்கான ‘கல்லூரிக் கனவு 2024’ நிகழ்வானது கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி (29.02.2024) தொடங்கி வைக்கப்பட்டது.

Tamil Putulavan Project Will Be Launched  Chief Secretary Sivadas Meena Confirms

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று (08.05.2024) தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு - 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து உரையற்றினார். இந்நிகழ்ச்சியில் வளர்ச்சி ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஜெ.குமரகுருபரன், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, உயர்கல்வித் துறை இயக்குநர் செ.கார்மேகம், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tamil Putulavan Project Will Be Launched  Chief Secretary Sivadas Meena Confirms

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசுகையில், “புதுமைப் பெண் திட்டத்திற்கு பின் 20 சதவிகிதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் கட்டாயம் சேர வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் கல்லூரி கனவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 100 % உயர்கல்வியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பது தான் நோக்கம். கடந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் இந்த முயற்சியால் கூடுதலாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். எத்தனை மாணவர்கள் உயர்கல்வியில் சேராமல் உள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அனைவரையும் கல்லூரியில் சேர்க்க என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து எடுத்துரைக்கபடும்” எனத் தெரிவித்தார்.

Tamil Putulavan Project Will Be Launched  Chief Secretary Sivadas Meena Confirms

அதனைத் தொடர்ந்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உயர்கல்விக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமானது 2024-25 ஆம் கல்வியாண்டில் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்குவது தமிழ்ப் புதல்வன் திட்டத்தித்தின் நோக்கம் ஆகும்.

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கலின் போது அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பெரியார் பல்கலை. பதிவாளர் விவகாரம்; உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Periyar University. Registrar Matters; Higher Education Action Order

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் பொறுப்பு வகித்த தங்கவேல், இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம் கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணை வேந்தராகப் பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்குத் தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன் மேம்பாட்டு பாடத் திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கைக் குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் தங்கவேல் ஈடுபட்டது நிரூபணமானது.

அதன்பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தமிழக அரசு கடந்த 7 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக் பிறப்பித்திருந்தார். இருப்பினும் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்யாமல் இருந்து வந்தார். இதற்கு ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

Periyar University Registrar Matters Higher Education Action Order

இதனையடுத்து பதிவாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கணினி அறிவியல் துறை தலைவராக உள்ளார். அதே சமயம் தங்கவேல் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் கேட்டு துணைவேந்தர் ஜெகநாதன் உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திக், துணை வேந்தருக்கு மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், “பதிவாளராக இருந்த தங்கவேலு மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தங்கவேல் மீது 8 புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தங்கவேலுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கும் நிலையில், தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.