/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/online-learning-1_0.jpg)
கடலூர் அருகே ஆன்லைனில் கல்வி கற்க வசதியில்லாததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் கல்வி முறை என்பது மாணவர்கள் இடையே பாகுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் முறையானதாக இருக்காது என்றும் கல்வியாளர்களும் எதிர்கட்சியினரும் தொடர்ந்து எச்சரித்தும் கூட அரசு செவிமடுக்கவில்லை.
ஆன்லைன் கல்வியை முறைப்படுத்தும் நோக்கிலோ, மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கிலோ அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் கல்வி எதிர்பாராத பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்புப் பயிலும் விக்னேஷ் என்னும் மாணவன் இணையதளம் மூலமாக கல்வி கற்க உபகரணங்கள் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், அரசுதொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்களை நடத்தி வருகின்றன. இதனால் ஆன்லைன் பாடங்களைக் கற்க, விக்னேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செல்போன் வாங்கக்கூடிய அளவிற்கு பணம் இல்லை என்பதால் அவரது பெற்றோரால் வாங்கித்தர இயலவில்லை.
கடந்த ஜூன் 29 அன்று அவரது தந்தை விஜயகுமார் முந்திரிக்கொட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் செல்போன் வாங்கித் தருவதாகக்கூறி என்று சாந்தப்படுத்தி உள்ளார். இருந்தும் அன்று இரவு 8:30 மணி அளவில் விக்னேஷ் தன் அறையில் அம்மாவின் சேலையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, பின் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஏழை நடுத்தர குடும்ப பெற்றோர்கள் இப்போதுள்ள சூழ்நிலையில்விலை உயர்ந்த செல்போன்களையும் தொலைக்காட்சிகளையும் வாங்கி கொடுக்க முடியுமாஅல்லது அரசாங்கமாவது மக்களுக்கு அந்த வசதிகளை வழங்கியுள்ளதாஎதையுமே செய்யாமல் மாணவர்களை ஏற்றத்தாழ்வுடன் ஆன்லைன் கல்விக்குதள்ளுவது சரியா என்பதை அரசு பரிசீலக்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை.
மேலும் அரசு திமுக ஆட்சியின்போது விலையில்லாமல் வழங்குவதற்கு வாங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்காமல் இன்னும் முடக்கி வைத்துள்ளது. அப்படி வழங்கப்படாமல் வைத்துள்ள இந்த தொலைக்காட்சி பெட்டிகளை தொலைக்காட்சி இல்லாத ஏழை, எளிய படிக்கும் மாணவ மாணவிகள் உள்ள குடும்பத்தினருக்கு வழங்க முன்வர வேண்டும். அதன் மூலம் அவர்கள் அரசு நடத்தும் கல்வியை சுலபமாக படிக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)