உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் நம்மிடையே பகிர்ந்துகொண்ட ஒரு கவுன்சிலிங் குறித்து பார்ப்போம்.
கணவன் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொண்ட குடும்பம் அது. கணவன் மனைவி இருவருமே மென்பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். நல்லவருமானம், எந்த கடனும் இல்லாத மகிழ்ச்சியான குடும்பம். வெளியில் செல்லும் போது கூட நால்வரும் ஒன்றாகவே செல்வார்கள் அவ்வளவு ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தனர். இப்படியான குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது தெரியாது ஆனால் அவ்வாறு அமையும் போது அதனை இருகப்பற்றிக் கொள்ளவேண்டியது அவசியம்.
இப்படியாக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கும் அந்த குடும்ப வாழ்க்கையின் இடையில் ஒருவர் வருகிறார். அதன் விளைவாக முதல் முறையாக கணவர் மனைவியிடம் நான் நண்பர்களுடன் வெளியே சென்று வருகிறேன் என்று கூறுவிட்டு வெளியே செல்கிறார். அந்த ஒரு நபருடன் சேர்ந்து உடன் இரண்டு பேர் என மொத்தம் மூன்று நண்பர்களுடன் வெளியே செல்கிறார். அப்போது அங்கே நடைபெற்ற உரையாடலில் நண்பர் ஒருவர், ஒரு முதலீடு குறித்து பேசும் பொழுது நாம் ஆளுக்கு ஐந்து லட்சம் என இருபது லட்சம் போட்டால் இரண்டு ஆண்டுகளில் அது ஒரு கோடியாக மாறும் என ஒரு ஐடியா சொல்கிறார். இதற்கு பதிலளித்த அவர், தன்னால் அவ்வளவு பணம் தர முடியாத நிலையில் இருப்பதாகவும், இருந்தாலும் நீங்கள் சொல்வதால் எப்படியாவது அந்த பணத்தை தருகிறேன் எனவும் அவர் கூறிவிடுகிறார். பணத்தைக் கொடுத்த ஆறு மாதத்திற்குள் அவருக்கு மூன்று லட்சம் பணமும் கிடைக்கிறது. ஆனால் அந்த பணம் எங்கு முதலீடு செய்யப்பட்டது, இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கூட அப்போது அவருக்குத் தெரியாது.
மறுபடியும் அந்த நண்பர் நாம் 15 லட்சம் போட்டால் 4 கோடி வரும் என கூறியதையடுத்து, இவர் எதுவும் யோசிக்காமல் 15 லட்சத்தைத் தருகிறார். மீண்டும் அவருக்கு 10 லட்சம் வந்ததால், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அவருக்கு மேலும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. இவ்வாறாக இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் அந்த நண்பர் தற்போது நாம் ஆளுக்கு 50 லட்சம் போட்டால் நாம் மிகப் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியும் என்று கூறியதைக்கேட்டு இவர் 50 லட்சம் தானா அல்லது அதற்கு மேலும் முதலீடு செய்யலாமா என ஆர்வமாகக் கேட்டார். அந்த நண்பர் 50 லட்சம் போதும் வேறு எதாவது மாறுதல் இருந்தால் அப்புறம் சொல்கிறேன் எனக் கூறிவிட்டார். சிறுது நாளில் நாம் 50 லட்சம் போடுவதை விட ஆளுக்கு 75 லட்சம் போட்டால் அதைவிட மிகப் பெரிய லாபம் பெறமுடியும் என்று கூறியதைக்கேட்டு, இவரும் 75 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுக்கிறார். இதனையடுத்து ஓரிரு மாதத்திற்குள் 15 முதல் 20 லட்சம் வரையிலான பணம் இவர்களுக்கு வருகிறது. இவர்கள் மேலும் பெரு மகிழ்ச்சியடைகிறார்கள் அதோடு இன்னும் பெரிய அளவிலான தொகை வரும் என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இவரை சந்தித்த அந்த நண்பர் முன்புபோல தற்போது பணம் வருவது கொஞ்சம் கஷ்டம் தான் எனக் கூறுகிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரிடம், மீண்டும் அந்த நண்பர் சொல்கிறார் இந்த முறை மீண்டும் ஆளுக்கு 75 லட்சம் போட்டால் ஒரு மாதத்திற்குள் ஒரு கோடி கிடைக்கும் என கூறுகிறார். இதைக்கேட்டு மனைவிக்குத் தெரியாமல் வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடகு வைத்து மீண்டும் நண்பரிடம் 75 லட்சம் பணத்தை கொடுக்கிறார். பிறகு சிறிது நாட்கள் கழித்து வந்த நண்பர் மீண்டும் அவரிடம் 25 லட்சத்தைக் கொடுக்கிறார். 25 லட்சத்தைக்கொடுத்த நண்பர் மீண்டும் ஒரு கோடி முதலீடு செய்தால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் எனக்கூற எல்லோரும் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுக்கிறார்கள்.
நண்பர்கள் மூன்று பேரிடமும் ஆளுக்கு ஒரு கோடி என பணத்தை பெற்றுக்கொண்ட நண்பர் காணாமல் போய்விட்டார் என்ற தகவல் கேட்டு நண்பர்கள் மூவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். என்ன செய்வதென்று அறியாத அவர்கள் புகார் அளிக்கலாம் என யோசித்தபோது அவர்களிடம் பெரிய அளவிலான ஆதாரங்கள் ஒன்றும் இல்லை. எனவே என்ன செய்வது என புரியாமல் கலங்கி நின்றனர். இவரும் இதில் தன்னுடைய வீடு, கிராமத்திலிருந்த நிலம், மனைவியின் நகை என அனைத்தையும் இழந்துவிட்டார். இந்த மோசமான நிலையினால், இவரை வெறுத்த மனைவி இவரிடமிருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியே சென்றுவிட்டார்.
தற்போது உடன் யாருமில்லாமல் தனிமையில் இருக்கிறார் இவர். மேலும் கடன் தொல்லையால் யாரிடமும் பேச்சுவார்த்தை இல்லாமல் தலைமறைவு வாழ்க்கை போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் அவர் என்னை சந்தித்தார். அவருடைய பிரச்சனைகளை கேட்டறிந்த பிறகு, அவர் மிகப் பெரிய அளவிலான இழப்பை சந்தித்துள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு, "நீங்கள் இழந்ததை எல்லாம் பெற்று விட முடியுமா என்பதை என்னால் கூற முடியாது, ஆனால் உங்களது முக்கியமான பிரச்சனைகளை ஓரளவு சரி செய்து நல்ல நிலைமைக்கு வர வாய்ப்பிருக்கிறது, நீங்கள் சரியான பாதையில் அணுகினால்" என்று கூறினேன். பின்னர் உங்களின் தற்போதைய முக்கியப் பிரச்சனை கடன், அதை எதிர்கொள்ள நீங்கள் செய்யவேண்டியது ஒன்று தான். அது "உங்களின் வருமானத்தை அதிகப்படுத்துவது தான், அதுவும் நல்ல வழியில்" என்று கூறினேன். அதனால் உங்களின் திறமைகளைக் கண்டறிந்து, இந்த வேலையில் வரும் வருமானத்தைத் தவிர்த்து வேறு ஏதுனும் கூடுதல் வேலை செய்து வருமானத்தைப் பெருக்குவதற்கான வழி இருந்தால் அதற்கான முயற்சியில் ஈடுபடுமாறு கூறினேன்.
மேலும், நாம் மனதில் வைத்து செயல்பட்டால் எந்த விதமான பேராசைக்கும், பேராபத்திற்கும் நாம் ஆளாகத் தேவையில்லை என்றும் கூறினார். எனவே நாம் நம்மால் முடிந்த அளவிற்கான உழைப்பை சரியான முறையில் முதலீடு செய்யும் போது, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அது நமக்கு ஒரு பெரு வெற்றியைத் தேடித் தரும் என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/jay-90-2026-01-10-10-47-03.jpeg)