உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டிக்கு, உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த ஐபிஎல் போட்டி, 18 சீசன்களோடு கடந்த 18 வருடமாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டுக்கான 19வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ளது. இந்த ஐபிஎஸ் போட்டிக்கான மெகா ஏலம், விரைவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய சூழலில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா, ராஜஸ்தான் அணிக்கு மாறவுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அளித்துவிட்டு, அதற்கு பதிலாக ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனை வாங்க சி.எஸ்.கே. நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரான தோனி, தொடர்ந்து விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்து வரும் நிலையில், அவரது இடத்தில் சஞ்சு சாம்சனை சேர்க்க சிஎஸ்கே அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், சிஎஸ்கே அணி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரவிந்தர ஜடேஜா மற்றும் சாம் கரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழங்கியுள்ளது. அதே சமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இரு அணிகளும் அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், “ஒரு அணியின் பயணத்தில் மாற்றம் என்பது ஒருபோதும் எளிதானது அல்ல. பத்து வருடங்களுக்கும் மேலாக அணியின் ஒருவராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றியது, சாம் கரனை அணிக்கு எடுத்த முடிவு, அணியின் வரலாற்றில் நாங்கள் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும்.
ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இருவருடனும் பரஸ்பர புரிதலுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜடேஜாவின் அசாதாரண பங்களிப்புகளுக்கும் அவர் விட்டுச் சென்ற சாதனைகளுக்கும் நாங்கள் (சி.எஸ்.கே.) மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஜடேஜா மற்றும் கரன் ஆகிய இருவருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். எங்கள் லட்சியங்களை பூர்த்தி செய்யும் திறமை மற்றும் சாதனைகளைக் கொண்ட சஞ்சு சாம்சனையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த முடிவு மிகுந்த சிந்தனை, மரியாதை மற்றும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/15/csk-dhoni-sanju-saamson-2025-11-15-11-35-58.jpg)
ரவீந்திர ஜடேஜா 2012முதல் சூப்பர் கிங்ஸின் முக்கிய ஆல்ரவுண்டர் வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 2018, 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் என 3 ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே. அணிகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். ஜடேஜா சூப்பர் கிங்ஸ் அணிக்காக 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளார். மேலும் அணிக்காக 2300 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். சஞ்சு சாம்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 4500 ரன்களுக்கு மேல் அடித்த அனுபவச் செல்வத்தைக் கொண்டு வருகிறார். சாம்சன் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐபிஎல்லில் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.
மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். சாம்சன் ஐந்து ஐபிஎல் சீசன்களில் (2021 முதல் 2025 வரை) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அவரது தலைமையில், ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது. 2021ஆம் ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்ற சி.எஸ்.கே. அணியில் சாம் கரண் ஒரு பகுதியாக இருந்தார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஐபிஎல் 2020, 2021 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸ் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடியுள்ள கரன், 356 ரன்கள் எடுத்து 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/15/sanju-samson-csk-2025-11-15-11-35-18.jpg)