இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கியது.

Advertisment

இந்த தொடரின் நேற்று (28-09-25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி, 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்து இந்த ஆண்டுக்கான தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

Advertisment

வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, இந்திய அணி வீரர்களை மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி) தலைவருமான மோஹ்சின் நக்வி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த இந்திய அணி வீரர்கள், மோஹ்சின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர். மாறாக அவர்கள், கோப்பையை கையில் கொண்டு வந்தது போல் சைகை காட்டி தங்களது வெற்றியை கொண்டாடினர். இதில் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அமைச்சர் மோஹ்சின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார். மேலும், இந்திய அணி வீரர்கள் ஆசியக் கோப்பையை பெற்றுக்கொள்ளததால் அந்த கோப்பையை ஆசியக் கோப்பை நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்றது.

பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்ததால் கோப்பையை நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து நாங்கள் கோப்பையை வாங்குவதில்லை என முடிவு செய்துள்ளோம். அதற்காக ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் எடுத்து செல்லலாம் என அர்த்தமல்ல. விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.

Advertisment

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அலி ஆகா கூறுகையில், “இந்தியா எங்களுக்கு கை குலுக்கவில்லை, மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை வாங்கவில்லை. அவர்கள் எங்களை அவமதிப்பது மட்டுமல்லாமல், கிரிக்கெட் விளையாட்டையும் அவமதிக்கிறார்கள். இதைப் பார்த்து, ​​மற்ற அணிகளும் இதைச் செய்யத் தொடங்கினால் என்ன செய்வது?. இது எங்கே நிற்கும்? கிரிக்கெட் வீரர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். மைதானத்தில் இதுபோன்ற நடத்தையைப் பார்த்து குழந்தைகள் என்ன கற்றுக்கொள்வார்கள்? இந்த போட்டியில் நடந்தது என்பது மிகவும் மோசமாக இருந்தது” என்று கூறினார்.

முன்னதாக, செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி மோதியது. அப்போது, இந்திய கேப்டனும், பாகிஸ்தான் கேப்டனும் கை குலுக்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்காக கை குலுக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து சூப்பர் 4 சுற்று கடந்த 21ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. கடந்த லீக் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய அணியின் ரசிகர்களை பார்த்து ‘6-0’ என்று சைகை காட்டி கேலி செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் போது 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவதை பிரதிபலிக்கும் விதமாக ஹாரிஸ் ரவூப் 6-0 என்று சைகை காட்டி கேலி செய்ததாக கூறப்பட்டது.

மேலும், விமானம் பறப்பது போல் காட்டியும் அதனை சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை காட்டி இந்திய அணி ரசிகர்களை அவர் கேலி செய்தார். அதே போல், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்த போது துப்பாக்கி போன்று பிடித்து சுடுவதை போல் சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த இரண்டு காட்சிகளும் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் அசெளகரியத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்தது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் நேற்றைய இறுதிப்போட்டியில் வென்ற இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்த விவகாரம் மேலும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.