Advertisment

"மரணத்தைப் பற்றி இளம் வயதில் சிந்திக்க வேண்டியதில்லையே..." - யுகபாரதியின் அணிந்துரை! 

Yugabharathi

Advertisment

கவிஞர் சாக்லா எழுதியுள்ள 'உயிராடல்' என்ற கவிதைத் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது. அத்தொகுப்பிற்கு பாடலாசிரியர் யுகபாராதி வழங்கியுள்ள அணிந்துரை...

"வாழ்வின் அழகே மரணமும்"

வளரும் இளங்கவிஞர் வாழ்த்துக்கேட்டிருக்கிறார் என்னும் எண்ணத்துடன்தான் சாக்லாவின் `உயிராடல்’ கவிதைநூலை வாசிக்க ஆரம்பித்தேன். தெரிந்த முகமாக நானிருப்பதால் அப்படிப் பலரும் கேட்டு வாழ்த்துரையோ அணிந்துரையோ பெற்றுக்கொள்வது வழக்கம்.

எழுதவேண்டும் எனும் உத்வேகத்துடன் கவிதைகளில் காலோ கையோ வைக்கும் அவர்களில் பலர், ஒருகட்டத்திற்குப் பிறகு அம்முயற்சிகளிலிருந்து வெளியேறிவிடுவர். அப்போது எனக்குள் நானே, ஆசையாய் எழுதிக்கொடுத்த வாழ்த்தும் நம்பிக்கையும் பொய்த்துவிட்டதேஎன வருத்தமுறுவேன். சம்பந்தப்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் எழுத முனைந்தாலும் வாழ்க்கை அவர்களை அத்துறையில் மேலெழுந்து முகிழ்க்கும் சந்தர்ப்பங்களைக் கொடுப்பதில்லை.

Advertisment

ஒருதுறையில் தொடர்ந்து செயலாற்ற வாய்ப்பும் வசதிகளும் கூடிவரவேண்டும். அதைவிட, அதை கைவிடாத வைராக்கியம் முக்கியம். தம்பி சாக்லாவின் கவிதைகள், அவர் இத்துறையில் நீடித்து நிலைப்பார் என்கிற அடர்ந்த அபிமானத்தை அளிக்கின்றன. சின்னச்சின்ன கவிதைகளே ஆயினும் அவர் சொல்லவருவதில் ஒருவிதத் தெளிவு தென்படுகிறது. வாழ்விற்கான தேடல்களை மரணத்தின் குவியலிலிருந்து ஆரம்பித்திருக்கிறார். உதிர்ந்துவிழும் ஒற்றை மலர் குறித்து எழுதும் அவர், பூக்களைக் கொடிகள் சொல்லிக்கொண்டு உதிர்ப்பதில்லை என்கிறார். தயக்கத்தையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்ளும்படியான மனோநிலைக்கு சாக்லா தம்மை தயார்படுத்தியிருக்கிறார். இது எல்லோருக்கும் கிடைத்துவிடக்கூடிய பக்குவம் அல்ல.

மரணத்தைப் பற்றி இந்த இளம் வயதில் இத்தனைதூரம் சிந்திக்கவேண்டியதில்லையே என முதல் வாசிப்பில் எனக்குமே தோன்றிற்று. ஆனால், இரண்டாவது மூன்றாவது வாசிப்பில்தான் அவர் மரணம் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள்கொள்ளவில்லை என்பது புரிந்தது. உதாரணமாக, `மரணித்ததும் ஏன் குழிக்குள் இறக்குகிறார்கள் என்றான் / துயரத்தை இறக்கிவைத்திட வேண்டுமல்லவா’ என்று எழுதியிருக்கிறார். மரணம் துயரம் தரக்கூடியது என்பதில் சாக்லாவிற்குச் சந்தேகமில்லை. ஆனால், அதைக்கூட கடந்துவாழ்வது பற்றியே அதிகமும் யோசித்திருக்கிறார்.

எப்பவும் என் இதயத்திற்கு நெருக்கமான வள்ளலார் மரணமிலா பெருவாழ்வுக் குறித்து சொல்லியும் எழுதியும் இருக்கிறார். ஒருவரின் வாழ்வென்பது பூதவுடலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. இவ்வாழ்வைத் தாண்டி அகவாழ்வே வாழ்வென்று வள்ளலார் உள்ளிட்ட பல இறைநேசர்கள் கற்பித்திருக்கிறார்கள். தம்பி சாக்லாவின் எழுத்துகளில் தெறிக்கும் மரணம் குறித்த சிந்தனைகளை நான்வேறொரு புரிதலில் இருந்தே விளங்கிக்கொள்கிறேன். ஒரு கவிதையோ நூலோ மேலதிக யோசனைக்கு வழிவகுக்க வேண்டும் அந்தவிதத்தில் `உயிராடல்’ என்னுள்ளத்தில் தனி இடம் பெற்றிருக்கிறது.

இன்னொரு கவிதையில் `உயிர்ப் பிடிலை வாசிக்கிறார் / ராகப் பிழையில் முகாரி இசைக்கிறது’ என்று சொல்கிறார். பிழையாகவிட்டாலே அது ராகத்தில் சேர்த்தியில்லை. அபசுரம் என்று அதைச் சொல்லலாமே அன்றி ராகமென்றோ அராகமென்றோ சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் ராகத்தை அராகமென்றே அழைத்த மரபும் நம்மிடம் உண்டு. அப்படியிருக்கையில் அழகான சொற்சேர்க்கையில் பிடில், ராகம், முகாரி போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு மிக அற்புதமான சிந்தனையைச் சித்திரமாக வரைந்திருக்கிறார். இப்படி எண்ணி எண்ணி ரசிக்கத்தக்க வாக்கிய அமைப்புகள் இந்நூலில் நிறைய உள்ளன.

`என் மரணம் / என்னைவிட அழகானது / அதில் மட்டுமே என் ஆயுள் நிறைந்திருக்கிறது’ என்றொரு கவிதை. நிறைவு என்பது முடிவையும் முழுமையையும் குறிக்கும். சாக்லா ஆயுள் நிறைந்திருக்கிறது என்று சொல்ல வருவது முழுமையையே. ஆயுள் நிறைவடைகிறது எனச் சொல்லாமல் நிறைந்திருக்கிறது என்கிறார். அதிலும், என்னைவிட என் மரணம் அழகானது என்கிறார். நான் அற்றுவிட்ட மரணமே அது.

cnc

உயிரின் ஓய்வல்ல. உடம்பின் தேய்வல்ல. என்னைவிட அழகானது மரணமென்கிறார். அதைவிடஅழகான வாழ்வாக அவருக்குக் கவிதைகள் வாய்க்கட்டுமாக. ஒவ்வொரு மதமும் மரணத்தை ஒவ்வொரு மாதிரி பார்க்கின்றன. இகவாழ்விலிருந்து விடுதலை என்பதாகவும் ஏக இறைவனின் திருவடியை நோக்கிய பயணமாகவும்எனக்கு இக்கவிதைகள் எல்லாமாதிரியான அனுபவங்களையும் வழங்கின. சிந்திக்கவும் இக்கவிதைகளுடன் பரந்துவிரிந்த வெளிகளை தரிசிக்கவும் முடிந்தன.

உயிராடல் என்று தலைப்பிட்டுள்ள சாக்லா மேலும் தன்னை கவிதைத்துறையில் புடம் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த ஒரு தொகுப்புடன் நில்லாமல் அதிக அதிகமாகக் கவிதைத்துறையில் சாதிக்க வாழ்த்துகிறேன். படைப்பாளனுக்கு மரணமே இல்லை. அவன் படைப்புகளுக்கும் அப்படியே. எனினும், நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவை. சாக்லா தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஊக்கத்துடன் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தால் விரைவில் சிகரம்நோக்கிய பயணத்தில் சிறப்பை எய்தலாம். வாரியணைக்கும் அன்புடனும் முத்தங்களுடனும்

நிறைய பிரியமுடன்,

யுகபாரதி

poetry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe