Skip to main content

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா??? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #12

Published on 12/07/2018 | Edited on 16/08/2018

ஒரு சொல்லின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பகுதியில் தொடங்கும் அனைத்துச் சொற்களையும் அறிந்தது எளிமையாக இருந்தது. அகராதியைத் தொட்டு சொல்லாற்றல் பெறுவதற்கு அது நல்ல வழி. அவ்வாறே இன்னோர் எளிய முறையும் இருக்கிறது. இது இன்னும் வலிமையாய் நம் சொல்லாட்சித் திறத்தைப் பெருக்கும் வழிமுறையாகும். 

 

soller uzhavu


 

தமிழில் உள்ள நான்கு வகைச் சொற்கள் எவை ? பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவை அவை. அந்நான்குவகைச் சொற்களில் பெரும்பான்மையாக இருப்பவை எவை ? அகராதியை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் உள்ள சொற்களை ஆராய்ந்து பாருங்கள். பெயர் வினை இடை உரி என்னும் நான்கு வகைச்சொற்களில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருக்கின்றன.

 

 

 

ஒரு மொழியின் சொற்கள் என்பவை வெறும் பெயர்ச்சொற்கள்தாமா? வேறு சொற்களே இல்லையா ? வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் ஆகியன எங்கே ? அவையும் இருக்கின்றன. ஆனால், பெயர்ச்சொற்களே பெரும்பான்மையானவையாய் இருக்கின்றன. 

 

பெயர்ச்சொற்களிலும் ஆட்பெயர்ச்சொற்கள், ஊர்ப்பெயர்ச்சொற்கள் போன்றவற்றை ஓர் அகராதியில் தேடிக் கண்டடைய முடியுமா ? ஆட்பெயர்ச்சொற்களின் அகராதியாய் அபிதான சிந்தாமணி போன்ற பெயர்ச்சொற்களஞ்சிய நூல்கள் விளங்குகின்றன. அதிலும்கூட வள்ளுவர் என்ற சொல்லின் பொருள் காண முடியாது. வள்ளுவர் என்பவர் யார் என்பதைத்தான் பெயர்ச்சொற்களஞ்சியங்கள் விளக்கும். ஆக, ஒரு சொல்லின் பொருளை அறிவதேகூட சொல்லாராய்ச்சியின் தலைவாயிலில் அடியெடுத்து வைத்ததைப்போல்தான். திருக்குறளுக்கு உரையெழுதுவதற்காக நான் பல்வேறு அகராதிகளுக்குள் குடியிருந்தபோதுதான் எனக்குச்  சொல்லாய்வு வேட்கை பெருகியது. 

 

 

 

அகராதிகளில் பெயர்ச்சொற்களே மிகுதியாக இருப்பின் வினைச்சொற்களை அறிவது எப்போது? இடைச்சொற்களையும் உரிச்சொற்களையும் இனங்கண்டு பொருள் காண்பது எவ்வாறு? பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்தபடியிருந்தால் ஒரு வினைச்சொல்லைப் புதிதாய் அறிந்து பயன்படுத்துவது எப்போது? பெயர்ச்சொல்லறிவு பெருகிக்கொண்டே போகையில் வினைச்சொற்கள் எவற்றையும் அறியாமல் இருப்பின் அது முறையாகுமா? 

 

இங்கேதான் நமக்குத் தமிழ்மொழியைப் பற்றிய “அடிப்படை இலக்கண அறிவு” வேண்டுவதாகிறது. அகராதியை அணுகும்போது எல்லாச் சொற்களும் ஒரே வகைமையில் இருந்தால் நம் சொல்லறிவு பெருகிவிடாது. ஒவ்வொரு அகராதியும் ஒவ்வொரு வகைமைச் சொற்களைச் சேர்த்திருக்கின்றன. வட்டார வழக்கு அகராதி ஒரு வட்டாரத்து மக்களின் பேச்சுமொழியைக் குறிப்பிட்டு நிற்கும் ஆவணமே தவிர, அதில் பொதுநிலைச் சொல்லாட்சியைப் பெற்றுக்கொள்ள இயலாது. ஆனால், சொல்லாய்விலும் அகழ்விலும் ஈடுபட்டுள்ளவர்க்கு ஒரு வட்டார வழக்கு அகராதியானது இல்லான் கண்ட புதையலாகும். தற்காலத் தமிழகராதி இன்றைய பயன்பாட்டில் வழங்கப்படும் சொற்களைத்தான் தொகுத்துத் தருமேயன்றி, திருக்குறளில் பயிலும் ஒரு நற்சொல்லைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடும். ஈர்ங்கை, ஒறுத்தல் போன்ற சொற்களைத் தற்கால அகராதி கொண்டிருக்காது. அதனால்தான் அகராதியைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்துத் தலைப்பாடாக அடித்துச் சொன்னேன். முறையாய்த் தொகுக்கப்பட்ட நல்ல அகராதியைக் கைக்கொண்டவர்தான் சொல்லறிவுடையவராகத் தழைத்தெழல் இயலும்.  

 

 

 

பெயர்ச்சொற்களை மட்டுமே அறிந்து செல்லல் என்ற தடையினை எப்படித் தாண்டுவது? எல்லாவகைச் சொற்களையும் அங்கே கண்டடைவது இயலாதா? இயலும். பெயரைக் குறிப்பவை பெயர்ச்சொற்கள். வினையைக் குறிப்பவை வினைச்சொற்கள். இவ்விரண்டுக்கும் இடையில் தோன்றுபவை இடைச்சொற்கள். பெயர்க்கும் வினைக்கும் உரியனவாய் அமைந்து சிறப்பித்துக் கூறுபவை உரிச்சொற்கள். ஆக, இடைச்சொற்களும் உரிச்சொற்களும் பெயரையும் வினையையும் சார்ந்தே வரும். தனித்து வரமாட்டா. அவற்றின் எண்ணிக்கையும் அளவில் குறைவே. எண்ணிக்கையில் குறைவு என்பதால் அவற்றை எளிதில் அறிந்து முடித்துவிடலாம். பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களுமே பெருங்கடலாய்த் திரண்டிருக்கின்றன என்கின்ற முடிவுக்கு வருகிறோம்.  

 

முந்தைய பகுதி:

மனமும், நெஞ்சும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #11
 

அடுத்த பகுதி:

பெயர் பெரிதா? வினை பெரிதா? தமிழ் கூறுவது என்ன... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #13

 


 

Next Story

“இனி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு தடை” - பஞ்சாயத்துகளில் தீர்மானம் நிறைவேற்றம்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

"No more use of these words" - Resolution passed in the panchayats

 

அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் அங்கிருக்கும் அதிகாாிகள் மற்றும் ஊழியா்களைப் பாா்த்து "சாா்" என்றும் "மேடம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளன. அதேபோல் அந்த அதிகாாிகளிடம் கோாிக்கை மனு கொடுக்கும்போதும் மனுவிலும் சாா் என்றும் மேடம் என்றுதான் குறிப்பிடுகிறாா்கள். மேலும், அங்கு பணிபுாியும் ஊழியா்களும் தங்களுக்குள் இந்த வாா்த்தையைத்தான் பயன்படுத்துகிறாா்கள். இது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளாகியும் தொடா்ந்து நடைமுறையில் மக்கள் பின்பற்றிவருகிறாா்கள்.

 

இந்நிலையில்தான் கேரளாவில் பாலக்காடு மாத்தூா் கிராம பஞ்சாயத்தில் நேற்று (02.09.2021) வழக்கத்தில் இருக்கும் "சாா்", "மேடம்" வாா்த்தைகளுக்குப் பதில் "சேட்டன்" (அண்ணன்), "சேச்சி" (அக்கா) என்றோ அல்லது அவா்களின் பெயரையோ, அந்தப் பதவியின் பெயரையோ வைத்து அழைக்க வேண்டும்  என தீா்மானம் போடப்பட்டது. இது கேரளாவில் அனைத்து தரப்பினாிடமும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று, கோட்டயம் உழவூா் பஞ்சாயத்திலும் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த உழவூா் பஞ்சாயத்துதான் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி கே.ஆா். நாராயணனின் சொந்த பஞ்சாயத்து என்பது குறிப்பிடத்தக்கது.

 

"No more use of these words" - Resolution passed in the panchayats

 

இந்தப் பஞ்சாயத்தின் தலைவராக ஜோணீஸ் பி. ஸ்டீபன் உள்ளாா். இதுகுறித்து மாத்தூா் பஞ்சாயத்து தலைவி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பிரவிதா முரளிதரன் கூறும்போது, “பிரிட்டிஷ்காரா் காலத்தில் இருந்தும் அவா்கள் விட்டுச் சென்ற பிறகும் சாா், மேடம் என்ற வாா்த்தையை இன்றுவரை பயன்படுத்திவருகிறோம். இதற்கு ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டித்தான் இந்த தீா்மானம் எடுக்கபட்டது. எங்களைப் பொறுத்தவரை இது அடிமை வாா்த்தை. மக்களின் தேவையையும் அவா்களின் உாிமையையும் கொடுப்பதுதான் பஞ்சாயத்தாரும் அதிகாாிகளுக்கும் உள்ள கடமை. பஞ்சாயத்தில் உள்ள மக்களின் உாிமைகள் அனைத்தையும் சேவையாக கருத வேண்டும். இதற்காகத்தான் இந்த தீா்மானத்தைக் கொண்டுவந்தபோது அனைத்து உறுப்பினா்களும் (காங்கிரஸ் - 8, கம்யூனிஸ்ட் - 7, பாஜக - 1) ஒருமனதாக ஆதாித்தனா்.

 

மேலும், அலுவலகத்தில் உாிமையைக் கேட்டு மனு கொடுக்கும்போது 'விண்ணப்ப படிவம்' எனபதற்குப் பதில் 'அவகாச பத்திாிகா' (உாிமை சான்றிதழ்) என மாற்றம் செய்யபட உள்ளது என்றாா். ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன் பனச்சிகாடு பஞ்சாயத்தில் அலுவலகத்தில் உாிமை கேட்டு மனு கொடுக்கும்போது பணிவுடன், தாழ்மையுடன் என்ற வாா்த்தைக்குப் பதில் உாிமையுடன் என்ற வாா்த்தையைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அப்படி பயன்படுத்தும்போது அந்த உாிமை மனுவை தள்ளுபடி செய்தால் அந்த அதிகாாி மற்றும் ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீா்மானம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேரள சட்டமன்ற சபாநாயகா் ராஜேஷ், மாத்தூா் கிராம பஞ்சாயத்தில் கொண்டுவந்த தீா்மானத்தைப் போன்று கேரள சட்டசபையிலும் கொண்டுவர வேண்டுமென்று தனது கருத்தை கூறியுள்ளாா்.

 

 

Next Story

பத்திரமாக பார்த்துக் ‘கொல்லவும்’!- சிதம்பரம் காவல்நிலைய அவலம்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸின் இரட்டைப் படுகொலையால் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் கடலூர் மாவட்ட சிதம்பரம் நகர காவல்நிலைய சுவற்றில் எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகங்களால் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.  

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

அதாவது, “பெண்கள் அணிந்து இருக்கும் அணிகலன்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்” என்று எழுதுவதற்குப் பதில், பெண்கள் அணிந்து இருக்கும் அணிகலன்களைப் பத்திரமாக பார்த்துக் ‘கொல்லவும்’ என்று எழுதப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். அதுமட்டுமல்ல, “பெண்கள் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளவேண்டும்” என்பதற்குப் பதிலாக பெண்கள் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுக் “கொல்ல” வேண்டும் எழுதப்பட்டிருப்பது தமிழை இப்படியா கொல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். 

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

இப்படி, பல்வேறு எழுத்துப்பிழைகளுடன் இடம் பெற்றிருக்கின்றன சிதம்பரம் நகர காவல்நிலைய சுவற்றில் எழுதப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் காவல் நிலையங்களுக்கு வருவதால் இந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் கூட போலீஸிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கத்துடன் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால், அங்குபணிபுரியும் காவலர்கள் ஒருமுறை கூடவா சுவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று கவனிக்கவில்லை? ஏற்கனவே காவல்நிலையங்களில் அழைத்துச் செல்லும் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவது சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட பிழைகளைத் திருத்திவிட வேண்டுமல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிதம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

எத்தனையோ கொலைகளைக் கண்டுபிடிக்கும் சிதம்பரம் நகர காவல்நிலைய எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., எஸ்.பி உள்ளிட்ட காவல்துறையினர் காவல்நிலையத்தின் சுவற்றில் தமிழைப் படுகொலை செய்த பின்னணியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்களா?