/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Erium Veettil kadai virikkum kaadhal - Copy.jpg)
அவள்
தீக்கொழுந்து சிரிப்பில்
நான்
விளக்காக
எரிந்து கொண்டிருக்கிறேன்!
சிலந்தி வலை
அவள் நெஞ்சம்
சிக்கிக்கொண்டது
என் காதல்
நீர்த்துளிகள் !
தாவிக் குதித்துக்கொண்டு
இருக்கிறோம்
நாம்
இன்னும் நிரம்பாமல்
கிடக்கிறது
காதல்
பள்ளத்தாக்கு!
படித்துக்கொண்டிருந்த
புத்தகத்தின்
பக்கத்தை மடித்து வைத்துவிட்டு
மீண்டும் எடுத்து படிப்பது போல்
இருக்கிறது
நேற்று பார்த்த இடத்திலேயே
இன்றும் அவளைப்
பார்க்கும்போது.!
அவள் விட சொல்லும் வரை
என் உயிரைப்
பிடித்துக்கொண்டிருப்பேன்.
அவள் விடை
சொல்லும் வரை
என் காதலைச்
சொல்லிக்கொண்டிருப்பேன் !
அவளுக்கு
பூ வாங்கிக்கொடுத்த
தெருவோரக் கடையும்
அவளோடு சேர்ந்து
உணவருந்திய
உயர்தர விடுதியும்
இன்னும் எந்தச் சுவடும்
மாறாமலிருக்க
எங்களை மாற்றியிருக்கிறது
காதல் !
பரமண்டலத்திருந்து வர
நேரம் பிடிக்கும் என்பதால்தான்
காதலை அறிமுகப்படுத்தினான்
சிலரோ காதலர்களை
பரமண்டலம்
அனுப்புவதில்
குறியாக இருக்கிறார்கள் !
அவள்
பின்னலிலிருந்து
கழட்டிப்போட்ட
தாழம்பூ கொத்தினை
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது
என் கவிதை நூல் !
கரகர குரலானாலும்
கசகச குரலானாலும்
புல்லாங்குழல் மூலம்
இனிமையாகிறது.
கலகங்கள்
ஏற்பட்டாலும்
குடிசைகள்
கொழுத்தப்பட்டாலும்
காதலென்பது கடையை
விரிக்கிறது !
பள்ளி நாட்கள்
ஏன்
அவ்வளவு வேகங்கொண்டோடியது?
காதலில் விழதான்.
காதல் ஏன்
அத்தனை
வலையைப் பின்னியது?
உன்னை என்னை
சிக்க வைக்கத்தான்!
Follow Us