/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_58.jpg)
தமிழகத்தில் உள்ள இலங்கைத்தமிழர் மறு வாழ்வு முகாம்களில் உள்ள மாணவர்களுக்கு குடியரசு தினத்தன்று கவிதை, கட்டுரை உள்ளிட்ட படைப்பாற்றல் போட்டிகள் நடத்தப்பட்டன. அமைச்சர் செஞ்சி மஸ்தான் இணைய வழியில் இதனைத் தொடங்கி வைத்திருந்தார். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை நந்தனம் ymca அரங்கில் நடைபெறும் புத்தக காட்சியின் சிற்றரங்கில் நேற்று (பிப். 24) அன்று மாலை கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் பொறுப்பாசிரியரும், இலங்கைத்தமிழர் நலன் ஆலோசனைக் குழு உறுப்பினருமான கோவி. லெனின், கவிஞர் ஜெயபாஸ்கரன், எழுத்தாளர்கள் பாமரன், விஜயலட்சுமி, இனியன், நாகப்பன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் மனுஷ்யபுத்திரன், “பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் வெவ்வேறு நாடுகளில் தங்கள் வேர்களை விட்டு பிரிந்திருந்தாலும், தமிழ் அவர்களை அனைவரையும் ஒன்றிணைக்கிறது. நம்முடைய உண்மையான நிலம் என்பது நிலப்பரப்பு அல்ல; தமிழ் இலக்கியமும், பண்பாடும்தான் நம் நிலம். தமிழ் இலக்கியம் என்பது இன்று சர்வதேச இலக்கியமாக மாறிவிட்டது. காரணம், தமிழ் இலக்கிய தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெவ்வேறு நாடுகளிலிருந்தும் எழுதுகிறார்கள். இன்று தமிழர்கள் போல் உலகில் பரந்துவாழும் சமூகம் என்பது அரிதிலும் அரிது. தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழை வளர்க்கிறார்கள். தமிழகம் என்பது ஈழத்தமிழர்களுக்கு இரண்டாம் தாயகம். உங்களை எல்லாம் பாதுகாக்கக் கூடிய, நீட்சியையும் பெரும் மாண்பையும் கொண்டுவரக்கூடிய ஒரு அரசும் முதல்வரும் இங்கு இருக்கிறார்.
உங்களின் ஒவ்வொரு தேவையையும், குறைகளையும் நிவர்த்தி செய்ய இங்கு ஒரு குழு இருக்கிறது. அதில், கோவி. லெனின் உள்ளிட்டோர்கள் இருக்கின்றனர். இவர், உங்கள் தேவைகளை எல்லாம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லக்கூடியவர். தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் இலக்கிய பிரிவு ஒன்று உருவாகுவதற்கான மிகப் பெரிய அடித்தளமாகத் தான் இந்த நிகழ்ச்சியை நான் காண்கிறேன்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)