Skip to main content

சைதை காந்தி!!! -இவரைப் போன்றவர்களால்தான் மழை பொழிகிறது...

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
saidhai gandhi 1


"சைதை காந்தி" சைதைக்கும் காந்திக்கும் என்ன  சம்மந்தம் எனும் கேள்வி உங்களுக்கு வரலாம் எனக்கும் முதலில் வந்தது. எங்கு வந்தது என்றால் ஒரு மாலைவேளையில் நான் அவசரமாக ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. நான் அந்த விழா மேடையை கடந்து செல்லும் போது தான் "சைதை காந்தி " திரு.கு. மகாலிங்கம் என்று  ஒருவரின் பெயர் பேனர்ல பார்த்தேன்.  அந்த அவசர நிலையிலும் அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. அங்கு  உள்ளவர்களிடம் விசாரித்தேன். அப்போது தான் அங்கு உள்ள ஒருவரை காட்டி, "இவர்  பெயர் மகாலிங்கம், இவரு இந்த காந்தி நூலகத்த அறுவத்தஞ்சு வருசமா நடத்திட்டு வராரு' என்று சொன்னார். அப்பொழுதுதான்  தான் எனக்கு புரிந்தது,  இவரை ஏன்  "சைதை காந்தி" என அழைக்கிறார்கள் என்று. எனக்கு அப்பொழுதே  இவரை சந்திக்க வேண்டும் எனும் எண்ணம். மறுநாளே அவரின் நூலகத்திற்கு சென்று கேட்டவுடன் மகாலிங்கம் ஐயா, 'சரி' என்றார் ஒரு உற்சாகத்தோடு . மறுநாள் சில கேள்விகளோடு அங்கு சென்றேன். கேட்கும் முன்பே என் கேள்விகளுக்கான பதிலை அவரே தந்தார். 

"என் பெயர் கு.மகாலிங்கம். எனக்கு மூணு பசங்க, என் துணைவியார் இறந்துட்டாங்க. எனக்கு இப்ப எம்பத்தேழு  வயசாச்சு. அறுபத்தஞ்சு வருஷமா இந்த  காந்தி நூலகத்த நடத்திட்டுவரேன். ஆனா நான் அஞ்சாங்கிளாஸ் வரைக்கும் தான் படிச்சிருக்கேன்.  இந்த மாந்தோப்பு ஸ்கூல்ல  தான் படிச்சேன். அப்புறம்   தி .நகர்  வெங்கட்ராமன் ரோட்ல இருக்குற தக்கர் பாபாக்கு  மகாத்மா காந்தி வந்தாங்க. நானும் ஒரு பத்து பசங்களும் போனோம். ஒரு ஆறு நாள் பஜன நடந்துச்சு. நாங்க கலந்துக்கிட்டோம். அப்ப தான் எல்லாரும் யோசன பண்ணி கொஞ்சம் கொஞ்சமா புத்தகம் சேகரிச்சோம். ஒரு அம்பது, அறுபது புத்தகமா இருந்தது. இப்ப இருபதாயிரம் புத்தகமா இருக்கு. நூலகம்  2.11.1952ல அப்போதைய  எம்.எல்.ஏ  ராஜம் ராமஸ்வாமி  தலைமையில பாரதியோட தம்பினு சொல்லப்பட்ட பரலி சு.நெல்லையப்பரால  ஞான விநாயகர் ஆலயத்துல திறந்து வைக்கப்பட்டுச்சு.
 

saidhai gandhi 3

 

எனக்கு உறுதுணையா இருந்தது சக்தி. டி .கே. கிருஷ்ணசாமிதான். இனொருத்தரு இந்த நூலகத்துக்கு இடம் கொடுத்த ராஜரத்தினம். சக்தி. டி .கே. கிருஷ்ணசாமி சொன்னாரு, 'மகாலிங்கம் நீ காமராஜரோட தொண்டனென்று  சொல்றாங்க.  நான் உனக்கு  உதவி பண்றேன்'னு சொன்னாரு. அதே போல வருஷா வருஷம் ஒரு சினிமா படம் வந்தா ஒரு ஷோ வாங்கிக்கொடுத்துவிடுவார்.  அதுல வரும்  காச வச்சு புத்தகம் வாங்குவேன். அதுமட்டுமில்லாம நூலகத்தோட ஆண்டு விழா நடக்கும். அதுக்கு நடிகர்கள கூப்பிட்டு வருவாரு. நாகேஷ் ,சிவாஜி ,கே.ஆர்.விஜயா எல்லாம் வந்திருக்காங்க . கிருஷ்ணசாமி  இறந்த பிற்பாடு நடிகர்களையெல்லாம்  கூப்பிடல . எழுத்தாளர்களை  கூப்பிட்டு ஆண்டு விழாவில் 'சக்தி.டி.கே.கிருஷ்ணசாமி விருது'னு கொடுத்து வருகிறேன். இதுவரைக்கும் ஐநூறு பேருக்கு கொடுத்திருக்கேன். அவர் பெயரில்  கொடுப்பதால்  அவர்களின்  குடும்பத்தாரும் வருவாங்க.

இந்த நூலகத்தை பொறுத்தவரை ஆண்களை  விட பெண் உறுப்பினர்கள்  தான் அதிகம்.  இந்த நூலகத்தில் உள்ள புத்தகம் எல்லாம் ஒவ்வொருத்தரா வாங்கித்தந்தது. அதனால புத்தகத்துல அவுங்க பெயர் எழுதி வைப்பேன். இங்கு பல எழுத்தாளர்கள் வந்திருக்காங்க. அவுங்க புத்தகங்கள் எல்லாம் இருக்கு. இங்க  நூறு ஆண்டு பழமையான புத்தகமெல்லாம்  இருக்கு. இங்கு இருக்குற காந்தி சிலைய காமராஜர் தான் திறந்து வச்சாரு" என்று தான் செய்யும் பெரிய  சமூக பணியை சாதாரணமாக சொன்னார். 

saidhai gandhi 2


"எனக்குக்  கூட  விருதெல்லாம் கொடுத்திருக்காங்க"னு சொல்லி சுற்றி இருந்த புகைப்படத்தையெல்லாம் சிறு புன்னகையுடன் காண்பித்தார். நான் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே  மீண்டும் பேசத்  தொடங்கினார் . "வருஷா வருஷம், படிக்குற பசங்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்போம். அதுவும் இங்க உள்ளவுங்கள்ட்டதான் வாங்கிக் கொடுப்பேன்.  ஸ்கூல் பசங்களுக்கு ஆயிரம் ரூபாய், காலேஜ் பசங்களுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயும் கொடுப்போம். இந்த வருஷம் கூட ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கொடுத்தோம் . நான்  நெசவு  செய்ற குடும்பத்தில பொறந்தவன். அவுங்கள ஆதரிக்கிறதுக்காகவும் காந்திக்காகவும் நான் எப்பவுமே கதர் துணி தான் போடுவேன். அதுமாதிரி  செருப்பும் போடமாட்டேன்.  முடிஞ்ச வரைக்கும்  எங்க போனாலும்  நடந்தே போவேன்" என்றவர், சந்திப்பு முடியும் தருணம், என்னுடன் சிறிது தூரம் நடந்து வந்தபோது  சொன்னார், "நாம் இருக்குற வரைக்கும் எல்லாரிடமும் மனிதாபிமானத்துடனும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்". 

அறுபத்தைந்து ஆண்டுகளாக அந்த நூலகத்தை நடத்திவரும்  மகாலிங்கம் ஐயா அவர்களை " சைதை காந்தி" என்று அழைக்கிறார்கள்.  நான் எந்த ஒரு கேள்வியையும் கேட்காமலேயே, என் மனதிலிருந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தார் அந்த எம்பத்தி ஏழு வயது இளைஞர்.  இத்தனை வருடங்களாக நேர்காணல்கள் பழகிவிட்டன போல. வந்து சென்றவர்கள் யாரும் அவரைப் போல நூலகம் அமைத்தார்களா தெரியவில்லை, நூல்கள் அளித்தார்களா தெரியவில்லை. "மழை நல்லவர்களால் தான் பொழிகிறது" என்று யார் (வள்ளுவரும் தான்)  சொன்னாலும் சிரிப்பவன் நான். ஆனால், அப்பொழுது நம்பினேன், மழை இவரைப் போன்றவர்களால் தான் பொழிகிறது.
 

Next Story

68 ஆண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த நூலகத்திற்கு புதிய கட்டடம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
68 years old library in Chidambaram gets new building at Rs 48 lakh
கோப்புப்படம்

சிதம்பரம் நகரத்தின் 68 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த  காசு சிதம்பரம் கிளை நூலகம் முதலில் காசுகடைத்தெரு, பின்னர் சின்ன காஜியார் தெருவில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பல லட்ச எண்ணிக்கையில் இருக்கும் புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும், நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடந்து 2014-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போது மாநில செயலாளராக இருக்கும் கே. பாலகிருஷ்ணன் அதே நேரத்தில் சிதம்பரம் நகர மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பெளஜியா பேகம் இருந்த போது, நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான  4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் அப்போதிருந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தின் பெயரில் 2014- ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்பட்ட நூலகம், வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில்  நூலகம் கட்ட அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், நூலகம் கட்டமுடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம் நிதி திரட்டினார் .பின்னர் அவர் பணி உயர்வு பெற்று மதுரைக்கு சென்றுவிட்டார். 

இதனை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நூலகம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் ரூ 32  லட்சம் மாணியமாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்தார். இதனையொட்டி நூலகத்திற்கான சாவியை சம்பந்தபட்ட நூலகத்துறை ஆலுவலர்கள் அருள் மற்றும் ரகுநந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதிய நூலக கட்டிடத்தில் ஜன 12-ந்தேதி மாலை நடைபெற்றது.

இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் கலந்து கொண்டு நூலக சாவியை வழங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜன், கல்பனா மற்றும் திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  

Next Story

“தொகுதிக்கு ஒரு நூலகம்”  - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

A library for the constituency says Minister Udhayanidhi Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நூலகம் உருவாக்கும் செயல் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது திமுக அரசு. இது குறித்து எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் தனது பதிவைப் பதிவு செய்திருக்கிறார் அமைச்சர் உதயநிதி. அதில், "தி.மு.கழகத்தை தன் எழுத்தாலும், பேச்சாலும் அறிவியக்கமாக உருவாக்கிய கலைஞரின் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில், திமுகவின் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு பொறுப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்துள்ளார். அந்த வகையில், திமுகவின் இளைஞரணிக்கு, 'தொகுதிக்கு ஒரு நூலகம் அமைக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளார்.

 

எனவே, தமிழ்நாட்டிலேயே முதல் தொகுதியாக, கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று திறந்து வைத்தோம். கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

A library for the constituency says Minister Udhayanidhi Stalin

 

இந்த நூலகத் திறப்பு விழாவில், அமைச்சர் சக்கரபாணி உடனிருந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற வகையில், நூலகத்தை உருவாக்கும் பணியை  அமைச்சர் சக்கரபாணி முழுமையாகக் கவனித்துக் கொண்டார் .