Skip to main content

மாட்டேனும், மாண்டேனும் ஒன்றா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #14

soller ulavu 


பேச்சுத் தமிழில் நிறையவே சொற்கள் இருக்கின்றன. அவை அகராதிகளின் படியேறாமல் தேங்கிக் கிடக்கின்றன. பொதுமக்களின் பேச்சு மட்டத்தில் அவை நற்பொருள் தருகின்றவையாகவும் பேசத் தகுந்தவையாகவும் இருக்கையில் எப்படி அகராதிகள் அவற்றைப் புறக்கணித்தன ? வேண்டுமென்றே அவை புறக்கணிப்பட்டன என்று கூற இயலாதுதான். ஆனால், மக்கள் வாய்மொழியைக் கருத்தில் கொள்ளாமல் விட்டனர் என்று உறுதியாகக் கூற முடியும்.

 

கோவைப் பகுதிகளில் ‘மாட்டேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘மாண்டேன்’ என்று சொல்வார்கள்.

 

 

 

“நீ கேட்டதுக்கு நான் மாண்டேன்னா சொன்னேன் ?” என்பார்கள். “அவன் வரமாண்டேங்கிறான்…” என்பார்கள். “எடத்தைக் கொடுக்கச் சொல்லி எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்… எல்லாரும் மாண்டேன்னுட்டே இருக்கறாங்கொ…” என்று கூறுவார்கள்.

 

இந்த “மாண்டேன்” என்ற சொல் ஆராய்ச்சிக்குரியது. மாட்டேன் என்பதன் பேச்சு வழக்காக மாண்டேன் என்ற சொல் பயில்வதாகத் தோன்றும்.

 

இலக்கணத்தில் மெலித்தல் விகாரம் என்று ஒன்று இருக்கிறது. வல்லின மெய் தோன்றவேண்டிய இடங்களில் மெல்லின மெய் தோன்றி வன்மை ஒலிப்பை மென்மையாக்குவது. இத்தகைய விகாரங்கள் செய்யுள்களில்தாம் தோன்றும் என்று இலக்கணத்தை அடியொற்றியே நிற்க வேண்டுவதில்லை. பேச்சுப் பயன்பாடு வரைக்கும் இறங்கி வராத இலக்கணக் கூறுகளே இல்லை.

 

மெலித்தல் விகாரத்தில் தட்டை என்பது தண்டை என்றாகிவிடும். தொப்பி என்பது தொம்பி என்றாகும். புத்தி புந்தியாகும். கலப்பு அகம் என்ற இரு சொற்சேர்க்கையே கலப்பகமாகி மெலித்தல் விகாரமடைந்து கலம்பகம் ஆயிற்று. ஆக, கலம்பகம் என்று தனிச்சொல் பயிலும்போதும்கூட மெலிந்து விகாரமடையும் என்பதை ஏற்பர். சொற்களில் தோன்றிய வல்லின மெய் மெல்லின மெய்யாகி அச்சொல்லின் வன்மையை நீக்கி மென்மையாக்கித் தருவது மெலித்தல் விகாரத்தின் பணி. அதன்படி மாட்டேன் என்பது மாண்டேன் ஆகிற்றா என்று ஆராய்வது ஒரு பார்வை.

 

அடுத்து தன்வினை, பிறவினை என்று இருகூறுகள் இருக்கின்றன. மாண்டேன் என்ற சொற்பயன்பாட்டை மாட்டேன் என்பதோடு தொடர்புபடுத்தி நோக்கினால் தன்வினை, பிறவினைப் பொருட்பாட்டுக்கு வாய்ப்பிருக்கிறது.

 

மீண்டான், மீட்டான் என்கிறோம். தானே மீள்வது மீண்டான் என்னும் தன்வினை. தான் பிறிதொன்றை மீளூம்படி செய்வித்தால் மீட்டான் என்று பிறவினை ஆகும்.

 

வெள்ளத்திலிருந்து எப்படியோ நீந்தி மீண்டான். வெள்ளத்தில் விழுந்தவர்களைத் துணிந்து நீரில் இறங்கி மீட்டான். இரண்டு ஒரே செயல்தான். தனக்குச் செய்துகொண்டது, பிறர்க்குச் செய்வித்தது என்னும் இருவகையால் வேறுபடுகிறது. அதுதான் தன்வினை, பிறவினை எனப் பயிலும் வினைச்சொற்களின் பொருள் வேறுபாடு.

 

 

 

தன்வினை பிறவினை வேறுபாடுகளோடு பயிலும் எண்ணற்ற சொற்கள் கொங்குத் தமிழில் கலந்திருக்கின்றன. நான் முன்பே சொன்னதுதான், தாட்டி விடுவது என்ற சொல்லை இங்கே பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.

 

“பையனை வீடு வரைக்கும் அனுப்பி விடுங்க.. வேலை முடிஞ்சதும் உடனே தாட்டி விட்டுர்ரேன்..”  

 

“பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ள அமைஞ்சதும் காலா காலத்துல தாட்டி விட்டுர்ர வேண்டியதுதான்…”

 

 “கிணத்துல தண்ணி கம்மியாத்தான் இருக்குது… இன்னும் இரண்டு பாத்திக்குத் தாட்டுமான்னு தெரியில…”

 

இவை தாட்டுதல் என்ற வினைச்சொற்பயன்பாட்டில் அமைந்த பேச்சு வழக்குகள். தாண்டு என்னும் தன்வினைக்குரிய பிறவினைச்சொல் தாட்டு என்பதாகும்.

 

பையனின் வேலை முடிந்ததும் இருக்குமிடத்திலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. பெண்ணுக்கு மாப்பிள்ளை அமைந்ததும் பிறந்த வீட்டிலிருந்து தாண்டிச் செல்ல வைப்பது. இரண்டாம் பாத்தி வரைக்கும் தண்ணீரைத் தாண்டச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.

 

மாளுதல் அல்லது மாண்டுதல், தாட்டுதல் ஆகிய சொற்கள் அகராதிகளில் இல்லை. மாளுதல் என்ற சொல் இருப்பினும் மக்கள் வழங்கும் நுண்ணிய பொருளில் காணப்படவில்லை. சங்கச் சொல்லடைவு அகராதியில் மட்டும்  சாதல், அழிதல், கழிதல், இயலுதல் ஆகிய நான்கு பொருள்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

 

 

 

அச்சொற்கள் யாவும் சொற்கள் இல்லையா ? பேச்சுத் தமிழின் வினைச்சொல் வளம் அகராதிப் பெருமக்களின் பார்வையில் படாதது ஏன் ? அச்சொற்கள் தாமாகவே இலக்கணத் தன்மைகளோடு வெளிப்பட்டுத் துல்லியமாகப் பொருளுணர்த்திப் பயன்பட்டு வருவதை யாரேனும் கண்டுணர்த்தினார்களா ? ஆயிரம் கேள்விகள் எழுகின்றன. விடையில்லை.


முந்தைய பகுதி:

 

பெயர் பெரிதா? வினை பெரிதா? தமிழ் கூறுவது என்ன... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #13
 

அடுத்த பகுதி:


"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்