ADVERTISEMENT

தண்ணீரோடு தொடர்புடைய சொல். ‘மி’ என்ற எழுத்தில் தொடங்க வேண்டும். அது என்ன??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 16

04:37 PM Aug 09, 2018 | poetmagudeswaran

ADVERTISEMENT

தொலைக்காட்சியில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் பார்த்திருப்பீர்கள். இரு தரப்பினரோ பல தரப்பினரோ கலந்துகொள்ளும் அந்நிகழ்ச்சியில் ஒருவர் விட்ட இடத்திலிருந்து இன்னொருவர் தமது பாட்டைத் தொடங்க வேண்டும். அவர் விட்ட இடத்திலிருந்து எடுத்துக்கொள்வது ஒரு சொல்லாக இருக்கலாம், அசையாக இருக்கலாம், ஓர் எழுத்தாககூட இருக்கலாம். கண்ணே என்று ஒருவர் தம் பாட்டை முடித்தால், அதிலிருந்து தொடங்குபவர் தம் பாட்டைக் கண்ணே என்றும் தொடங்கலாம், ஏ என்றும் தொடங்கலாம், நே என்றும் தொடங்கலாம். அப்போட்டிக்கு நடுவர் இருப்பின் ‘விட்ட சொல்லிலிருந்து தொடங்குவதா, எழுத்திலிருந்து தொடங்குவதா’ என்று கூறுவார். அவரே எடுத்துக்கொடுப்பார். ஒருமுறை பாடிய பாடலை மறுமுறை பாடக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருக்கும். பாடலின் பெயரால் இயங்கும் சொல்லறிவு நிகழ்ச்சிகளில் அஃதும் ஒன்று. ஓரெழுத்தில் தொடங்கும் சொல்லை நினைவில் கொணர்ந்து அதற்குரிய பாடலையும் கண்டறிந்து பாடுவது மூளைக்கு நல்ல வேலை.

ADVERTISEMENT

பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியைப் போலவே “சொல்லுக்குச் சொல்” என்ற நிகழ்ச்சியை வடிவமைத்தால் நம்மில் யாரேனும் தேர்ச்சியடைவோமா ? “தண்ணீரோடு தொடர்புடைய சொல். மி என்ற எழுத்தில் தொடங்க வேண்டும்…” என்று சொற்புதிர் நிகழ்ச்சியை உருவாக்கினால் நம்மில் யாரேனும் தேர்வோமா ? ‘மிதவை’ என்று நமக்குச் சொல்லத் தெரியுமா ? ஐயம்தான். ஓரளவு நல்ல சொற்பயிற்சியுடையோம் என்று நம்மை நாமே கருதிக்கொண்டிருந்தாலும் ஏதேனும் தேர்வு நடத்தினால் நாம் தோற்றுப் போய்விடுவோம் என்பதே உண்மை. அவ்வளவுக்கே நாம் சொல்லறிவில் திறமுடையோராய் இருக்கிறோம்.

எழுத்திலும் பேச்சிலும் படிப்பிலும் சிறப்படைய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு சொல்லை நினைவில் கொண்டு வர முடியுமா என்ற தன்னாய்வில் அடிக்கடி ஈடுபடுங்கள்.

எடுத்துக்காட்டாக, மா என்ற நெடிலில் தொடங்கும் வினைச்சொற்கள் என்னென்ன என்று கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் நினைவில் வருகின்ற சொற்கள் என்னென்ன ? மாட்டிக்கொண்டான், மாறினான், மாற்றினான், மாண்டான் என்று சில சொற்கள் தோன்றும். அச்சொல் தனித்த வினைச்சொல்லாக இருக்க வேண்டும். மாட்டிவிடு, மாட்டிக்கொள் போன்று துணைவினையோடு வருபவற்றையும் “மாட்டுதல்” என்னும் ஒரே வினைச்சொல்லாகத்தான் கருத வேண்டும்.

மா என்ற நெடிலில் தொடங்கும் வினைச்சொற்கள் எத்தனை நினைவுக்கு வந்தன ? மூன்று நான்கு சொற்கள் நினைவுக்கு வந்தன. மூன்று இலட்சம் சொற்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படும் தமிழ் மொழியில் மா என்ற எழுத்தில் தொடங்கும் வினைச்சொற்கள் எத்தனை இருக்க வேண்டும் ? ஒவ்வோர் எழுத்திலும் ஆயிரம் சொற்களேனும் தொடங்கவேண்டுமில்லையா ? அப்போதுதான் இரண்டு இலட்சத்து நாற்பத்தேழாயிரம் சொற்கள் என்னும் கணக்கு வருகிறது. அவற்றில் பெரும்பாலான எழுத்துகள் சொல்லுக்கு முதலாகத் தோன்ற மாட்டா என்றாலும் ஆயிரம் சொற்களையேனும் நாம் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

ஆயிரம் பக்கங்கள் கொண்ட அகராதியில் க என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்களே மிகுதியாக இருக்கின்றன. க என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்கள் எழுபத்து ஐந்து பக்கங்களுக்கு விரிகின்றன. இது ஓர் அகராதியில் இடம்பெற்ற சொற்களின் எண்ணிக்கையில் ஏறத்தாழ ஏழு விழுக்காடு. ககரத்தைப் போலவே மகர எழுத்துகளில் தொடங்கும் சொற்களும் எண்ணிக்கையில் மிகுதி. ஆனால், மகர எழுத்துகளின் நெடில் ஒன்றுக்கு நம்மால் பத்து வினைச்சொற்களைக்கூடச் சொல்ல முடியவில்லை.

நம்மால்தான் சொல்ல முடியவில்லை. இயலாமையை ஏற்றுக்கொள்கிறோம். ஓர் அகராதியினை எடுத்து வைத்துக்கொண்டு மா என்னும் நெடில் வரிசையில் தொடங்கும் வினைச்சொற்களைப் பட்டியலிட்டே பார்த்துவிடுவோம். மா என்ற எழுத்தில் தொடங்கும் வினைச்சொற்கள் நூற்றுக்கணக்கில் இருக்க வேண்டும்தானே ? இருக்கின்றனவா என்று பார்த்து விடுவோம். அப்போதுதான் இந்தக் காட்சி முழுமையாய் விளங்கும்.

மாசறு – குற்றம் நீங்கு

மாசுறு – குற்றம் ஆகு

இவ்வரிசையில் மாசு அடை, மாசு தீர், மாசு களை போன்று பல சொற்களை உருவாக்கலாம் என்றாலும் மாசு என்ற முன்னொட்டோடு தோன்றுவதை ஒரே வரிசையில் வைத்துக்கொள்ளலாம்.

மாட்டுதல் – இணைத்தல் உள்ளிட்ட பல பொருள்கள். அதிலிருந்து மாட்டுவித்தல் என்னும் பிறவினைச்சொல்.

மாண்டல் , மாளுதல் – சாதல்

மாந்துதல் – ஊக்கமழிதல் உள்ளிட்ட பல பொருள்கள்

மாய்தல், மாய்த்தல் – அழிதல், அழித்தல் உள்ளிட்ட பல பொருள்கள்

மார்தட்டுதல் – போட்டி போடுதல்

மார்புயர்த்தல், மார்நிமிர்த்தல் போன்று பல சொற்கள்

மாலைகட்டுதல், மாலைசூட்டுதல், மாலை சாத்துதல், மாலைமாற்றுதல் உள்ளிட்ட பல சொற்கள்

மாழ்குதல் – மயங்குதல்

மாழாத்தல் – ஒளிமங்குதல்

மாற்றுதல் – வேறுபடுத்தல் உள்ளிட்ட பல பொருள்கள்

மாறுதல் – வேறுபடல் உள்ளிட்ட பல பொருள்கள். (மாறுபடு போன்ற முன்னொட்டுகளில் பல சொற்கள்)

மானம்போதல், மானம்மூடுதல், மானம்பார்த்தல் உள்ளிட்ட பல சொற்கள்

மானித்தல் – செருக்கடைதல் உள்ளிட்ட பல பொருள்கள்.

மானுதல் – ஒத்தல், ஒன்றுபோலாதல்.

எண்ணிப் பார்த்தால் பதினைந்து வினைச்சொற்கள்தாம் மா என்ற நெடிலில் தொடங்குகின்றன. அவற்றைக்கூட அறியாமல் நாம் திருதிருவென்று விழித்தோம். இந்தப் பன்னிரண்டு சொற்களை நாம் நன்கு அறிந்திருப்பின் அவற்றிலிருந்து தோன்றிய இருநூறு சொற்களின் பொருள்களையும் நாம் அறிந்தவர்கள் ஆவோம். நம் அணுகுமுறையைத் தரைமட்டத்திற்கு இறக்கிக்கொண்டால் கற்பது எளிதே.

முந்தைய பகுதி:


"ஒரு உடல் ஓராயிரம் சொற்கள்" கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு #15

அடுத்த பகுதி:


தென்னை இலையா? தென்னை ஓலையா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT