Skip to main content

தமிழ் ஹைக்கூவை ஈன்ற  ஆண் தாய்! - கவிஞர் மு.முருகேஷ்

 

Poet Abdul Raguman Memorial Day


 
நமக்குப் பிடித்தமானவர்களை இந்த மண்ணிலிருந்து திருடிக்கொண்டோடும் காலத்தின் கால்களில் சக்கரங்கள் கட்டியிருக்கும் போலும்; எவ்வளவு வேகமெடுத்து ஓடுகிறது. ஜூன் 2-ஆம் தேதி கவிக்கோ அப்துல்ரகுமானின் நான்காமாண்டு நினைவு தினம். நினைக்கையிலேயே நெஞ்சு விம்முகிறது. அவர் தனது எண்பதாவது அகவையைத் தொடவிருக்கும் வேளையில், எதிர்பாரா நேரத்தில் நிறுத்தமொன்றில் சட்டென இறங்கிப்போகும் பயணியைப் போல முடிந்துபோனது கவிக்கோ அப்துல்ரகுமானின் வாழ்வு. ஆனாலும், தமிழ்க் கவிதையின் முகமாக இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு நினைவு கூரத்தக்க கவியாளுமைகளுள் முதன்மையானவர் கவிக்கோஅப்துல்ரகுமான் என்பதில் மறுகருத்திருக்க முடியாது.

 

‘மானுடம் பாடிவரும் வானம்பாடிகள்’ எனும் முழக்கத்தோடு 1970-களில் கோவையிலிருந்து வெளிவந்த வானம்பாடிக் கவிதைக் குழுவோடு இணைந்து நின்று, புதுமைப் பாடும் கவிஞராகத் தனித்து அறியப்பட்டவர் அப்துல்ரகுமான். 1937 நவம்பர் 2 அன்று மதுரையிலுள்ள கிழக்குச் சந்தைப்பேட்டையில் பிறந்த அப்துல்ரகுமானுக்கு இளமையிலேயே கவிதையெழுதும் ஆர்வம், அவரது தந்தையின் வழியே வாய்த்தது. தந்தையார், பாட்டனார் இருவருமே உருதுக் கவிஞர்கள். அவரது தந்தையார் சையது அகமத், ‘மஹி’ எனும் பெயரில் உருது கவிதைகளை எழுதுவதில் புகழ்பெற்று விளங்கியவர். பள்ளிப் பருவத்திலேயே கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றார் அப்துல்ரகுமான். மேற்படிப்பில் விருப்பமில்லாமல் இருந்தவர், மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழைப் பாடமாகப் படிக்கலாம் என்கிற ஆர்வத்தினால் சேர்ந்தார்.


அப்துல்ரகுமானுக்கு உருது இலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்பு தந்தையின் வழியே கிடைத்தது என்றால், அவரது பேராசிரியர்களாக இருந்த தமிழறிஞர்களின் வழியே தமிழிலக்கியங்களை ஆழ்ந்து கற்றார். தனது முதுகலைப் படிப்பை முடித்துவிட்டு, ‘புதுக்கவிதையில் குறியீடு’ எனும் தலைப்பிலான முனைவர் பட்ட ஆய்வினைச் செய்தார். பின்னர் 1961-இல் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் சிற்றுரையாளராகப் பணியில் சேர்ந்த அப்துல்ரகுமான், வகுப்புகளுக்கு உள்ளேயும் வெளியேயும் எண்ணற்ற மாணவர்களுக்கு கவிதைப் பயிற்றுவிக்கும் ஆசானாகத் திகழ்ந்தார். மாணவர்களிடம் துளிர்க்கும் கவிதை ஆர்வத்தில் நீர் வார்த்து வளர்த்தார். ‘ஏதேன் தோட்டம்’ எனும் அமைப்பை நிறுவி, அதில் கவிதை வகுப்புகளை எடுத்தார்.

 
புதியவர்களின் கவிதைகள் அரங்கேற மேடையமைத்துத் தந்தார். கவிக்கோ அப்துல்ரகுமானைச் சுற்றி எப்போதும் இளைய கவிஞர்களின் பட்டாளமொன்று வலம்வந்தது. மரபுக் கவிதையெனும் இலக்கணக் கட்டுகளை உடைத்து, புதுக்கவிதை புதுப் பிரவாகம் எடுக்கத் தொடங்கிய காலத்தில், வழக்கமான கவிதைப் பாணியைத் தவிர்த்து, புது உத்தியில் தனது கவிதைகளைப் படைத்தார் அப்துல்ரகுமான். வார்த்தைச் செறிவும், கவித்துவமும் மிளிரும் அப்துல்ரகுமானின் கவிதைகளில் உவமைகளும், உருவகங்களும், படிமங்களும் அதிகமாக இடம்பெற்றன. வாசித்து முடித்தும் வெறுமனே கடந்து போகா வண்ணம் வாசகனைச் சற்று நேரம் யோசிக்க வைக்கும் கவிதைகளாக கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகள் விளங்கின.

 

மீமெய்ம்மையியல் எனப்படும் சர்ரியலிஸ கவிதைகளை (பால்வீதி-1974)யும், கஸல் எனப்படும் காதல் கவிதைகளை (மின்மினிகளால் ஒருகடிதம்-2004)யும் முதன்முதலாகத் தமிழில் எழுதியவர் கவிக்கோ அப்துல்ரகுமான் என்பதைப் பலரும் அறிவர். அதேபோல், மகாகவி பாரதி எழுதிய ‘ஜப்பானிய கவிதை’ (சுதேசமித்திரன் – 16.10.1916) எனும் குறுங்கட்டுரை வழி தமிழில் அறிமுகமான ஹைக்கூ கவிதைகளை, நேரடியாக தமிழில் முதன்முதலாக எழுதியவரும் கவிக்கோ அப்துல்ரகுமான் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை அவ்வப்போது தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததோடு, வெகுசன இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் வழியே தமிழ் வாசகர்களிடத்தில் ஹைக்கூவைப் பரவலாகக் கொண்டு சேர்த்த பெருமையும் கவிக்கோவையே சாரும்.


1972-ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின வெள்ளி விழா கவியரங்கில் பங்கேற்க சென்ற கவிக்கோ, அங்குள்ள புத்தகக்  கடையொன்றில் ஜப்பானிய ஹைக்கூ தொடர்பான ஆங்கில நூல்களை வாங்கி வாசிக்கிறார். மூன்று வரிகளில் செறிவும், காட்சியழகும் நிறைந்த ஹைக்கூ கவிதைகள் அவரை ஈர்க்கின்றன. கவிக்கோவும் ஹைக்கூ கவிதைகளை எழுதினார். ஆனால் அவற்றிற்கு ஹைக்கூ எனப் பெயரிடவில்லை. முன்னரே தமிழில் மூன்று வரிப் பாக்கள் ‘சிந்து வெண்பா’வென இருப்பதால், ‘சிந்தர்’ எனத் தலைப்பிட்டு, 5 ஹைக்கூ கவிதைகளை மட்டுமே எழுதினார். அவரது ‘பால்வீதி’ (1974) கவிதை நூலில் அவை இடம்பெற்றுள்ளன.


* இரவெல்லாம்    
 உன் நினைவுகள்
 கொசுக்கள்

 

* பனித்துளி இல்லாப்
பூவின் இமைகளில்
 வீழ்ந்ததென் கண்ணீர் 

 

* இளவேனில் இரவு
நட்சத்திர முள்ளில்
விரக நிலவு

 

* மயான வாயிலில்   
பழுதாகி நின்றது  
ஈனில் ஊர்தி

 

* முட்டை கொண்டு
திட்டை ஏறும் எறும்புகள்
 அவள் எழுத்துக்கள்  (பக்கம்:27)

 

எண்பதுகளின் தொடக்கத்தில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் சிற்றிதழ்களில் வெளிவந்தன. அவற்றை வாசித்துவிட்டு, பள்ளி மாணவர்களான நாங்கள் நடத்திய ‘விடியல்’ இதழில், நானும் சில கவிதைகளை எழுதத் தொடங்கினேன். அவை ஹைக்கூ கவிதைகளாக இல்லாமல், வெறும் மூவரி கவிதைகளாக இருந்தன. ஹைக்கூ நூல்களைத் தேடிப்படிக்கும் ஆர்வத்திலிருந்த என் பார்வையில் பட்டது ‘இன்றிரவு பகலில்...’ (டிசம்பர்-1985) எனும் கவிக்கோ அப்துல்ரகுமானின் கட்டுரை நூல். 

 

அந்த நூலின் முதல் கட்டுரையின் தலைப்பு ‘மின்மினிகள்’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் அப்துல்ரகுமான் ஹைக்கூ பற்றிக் கூறியிருந்த பல செய்திகள், எனக்கு ஹைக்கூ பற்றிய புதிய பார்வையைத் தந்தன. ‘உலகக் கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது ‘ஹைகூ’தான். அது சின்னதாக இருக்கும் பெரிய அற்புதம். வடிவத்தைப் பார்த்தால் வாமனன் மாதிரி; ஆனால் தாரை வார்த்தாலோ விசுக்கென்று விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விசுவரூபமெடுத்து மூவுலகையும் அளந்துவிடும். திரிவிக்கிரமன் மாதிரி, ‘ஹைகூ’வுக்கும் மூன்றடிதான்’ (பக்கம்:6) என்று எழுதியது என் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது. மேலும், சில ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையும் அந்தக் கட்டுரையில் மொழி பெயர்த்துத் தந்திருந்தார்.


* யாராவது எனக்கு நீர் கொடுங்களேன்
   என் கிணற்றைப் பிடித்துக்கொண்டது...
   பூத்த இளங்கொடி.  
                          - சியோனி

 

* இந்த அழகிய பூக்களிடையே
   ஒரு மரங்கொத்தி தேடுகிறது...
   செத்த மரத்தை.
                          - ஜோசோ

 

* மெதுவாக என் தோளைப் பற்றிய
   இறந்த நண்பனின் கை போல்...
   இந்த இலையுதிர்கால வெயில்
                          - குசடாஓ


ஹைக்கூ கவிதைகள் பற்றிய எனது புரிதலை ஆழப்படுத்தியதோடு, ஹைக்கூ தொடர்பான என் தேடலையும் அதிகப்படுத்துவதாக இந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் அமைந்திருந்தன. 1984 நவம்பரில் வெளிவந்த கவிஞர் அறிவுமதியின் ‘புல்லின் நுனியில் பனித்துளி’ ஹைக்கூ நூலில், ‘வாமனர்களுக்கு ஒரு வரவேற்பு’ எனும் தலைப்பில் எழுதிய சிறிய முன்னுரையிலும்கூட ஹைக்கூ பற்றி உறுதியான சில முன் வரைவுகளைப் பதிவு செய்தார் கவிக்கோ. அதில், “ஹைகூவைத் தமிழுக்குக் கொண்டு வருகிறபோது அதன் எல்லா மரபுகளையும் தூக்கிக்கொண்டு வரவேண்டியதில்லை. ஜென் பார்வையில்தான் நாமும் இந்த உலகத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கட்டாயமில்லை. எந்தத் தத்துவப் பட்டையும் போட்டுக்கொள்ளாமல், எந்தக் கோட்பாட்டுக் கண்ணாடியையும் அணிந்து கொள்ளாமல் படைப்பாளன் சுதந்திரமாக, நேராக இந்த உலகத்தைப் பார்க்கலாம். அப்போதுதான் வாழ்க்கையின் அறியாத பக்கங்களின் புதிய தரிசனங்களைக் காண முடியும். அறிந்த பக்கங்களுக்கும் புதிய அர்த்தங்களைப் பெறமுடியும்” என்று கவிக்கோ போட்டுத் தந்த ஹைக்கூ தடத்தில்தான் இன்றைக்கு தமிழ் ஹைக்கூ பயணித்துக் கொண்டிருக்கிறது. 

 

தான் எழுதுவதோடு நில்லாமல் பிறரையும் எழுதத் தூண்டும் பேருள்ளம் வாய்த்தவர் கவிக்கோ. தன்னிடமிருந்த ஹைக்கூ தொடர்பான ஆங்கில நூல்களை டாக்டர் தி.லீலாவதியிடம் கொடுத்து, தமிழாக்கம் செய்யுமாறு கூறினார். கவிக்கோவின் தூண்டுதலால் அந்த நூல்களை டாக்டர் தி.லீலாவதி மொழிபெயர்த்தார். ஜப்பானிய ஹைகூ (டிசம்பர்-1987, அன்னம் வெளியீடு), இதுதான் ஹைகூ (செப்டம்பர்-1990, பூங்கொடி பதிப்பகம்)  என இரு நூல்களாக அவை வெளிவந்து, தமிழ்மண்ணில் ஹைக்கூ கவிதைக்கான நிலைத்த இடத்தைப் பிடித்தன.


1974-இல் வெளியான தமிழின் முதல் சர்ரியலிஸக் கவிதை நூலான கவிக்கோவின் ‘பால்வீதி’ கவிதை நூலை, பத்தாண்டுகள் கழித்து, பள்ளி மாணவனாக இருந்த நான் வாசித்தேன். கவிதையின் தலைப்பு, தாகம்:

தாகம்:

‘வேலிக்கு வெளியே  தலையை நீட்டிய என்
   கிளைகளை வெட்டிய
   தோட்டக்காரனே!
   வேலிக்கு அடியில்
   நழுவும் என் வேர்களை
   என்ன செய்வாய்?’


இந்தக் கவிதை எனக்குள் புதிய திறப்புகளைக்  கிளறி விட்டன. ஒவ்வொரு வாசிப்பிலும் வேறு பல அர்த்தங்களைச் சுரந்தன. 1985-ஆம் ஆண்டின் டைரியின் முதல் பக்கத்தில் இந்தக் கவிதையை அப்படியே பதிந்துகொண்டேன். எனக்குள்ளேயே ஊறிக்கிடந்த இந்தக் கவிதையை சரியாய் 25 ஆண்டுகள் கழித்து, 2010-ஆம் ஆண்டில் சமச்சீர்ப் பாடத்திட்டத்தின் பாடக்குழுவில் இருந்தபோது, ஆறாம் வகுப்பு பாடநூலில் சேர்த்தேன். (பின்னாள் வந்த அரசு, அந்தக் கவிதையை நீக்கியது அதுவொரு தனிக்கதை). 


வேலிக்கு அடியில் நழுவும் வேரெனத் தன் கவிதைகளைத் தமிழ் மண்ணில் ஆழப் பதியமிட்டிருக்கும் கவிக்கோவின் கவிதை வரிகள் காலங்கடந்தும் பூத்துக் குலுங்கிக்கொண்டே இருக்கும். புது வாசத்தை வீசிக்கொண்டே இருக்கும்.‘கவிக்கோ எனக்கு ஆண் தாயாக வாய்த்ததை நினைத்து நினைத்து நெகிழ்கிறேன்’ என கட்டுரையொன்றில் அண்ணன் கவிஞர் அறிவுமதி குறிப்பிட்டிருப்பார். அண்ணனுக்கு மட்டுமல்ல, எண்ணற்ற இளைய கவிஞர்களுக்கு ஆண் தாயாக விளங்கிய கவிக்கோ, இன்றைக்கு தமிழில் செழித்து வளர்ந்திருக்கும் ஹைக்கூ கவிதைகளையும் ஈன்றவர் என்பதை வரலாறு என்றென்றும் நினைவில் பதிந்திருக்கும்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !