Poem for Pongal - aarur thamilnadan

மணக்கட்டும் தைப்பொங்கல்!

வெடித்துக் கிளம்பட்டும்

வீறுமிகும் இளைஞர் படை!

அடித்து முழக்கட்டும்

ஆதிநாள் தமிழ்ப் பறையை!

துந்துபி முழக்கத்தில்

திசையெட்டும் அதிரட்டும்

வந்தேறிக் கூட்டமெலாம்

வக்கற்றே ஓடட்டும்!

தமிழ்நாட்டின் வீரம்

தணியாது பொங்கட்டும்!

தமிழர் இனமானம்

தணலாகித் தங்கட்டும்!

காளைகளின் திமிரடக்கும்

காளையரின் விழிமுன்னே

கோழையரின் நிழல்கூட

குலைநடுங்கித் தெறித்தோடும்!

தோழமையாய் வருவோர்க்கு

நம்மிடத்தில் தோளுண்டு!

வீழவைக்க நினைப்பாரை

வீழ்த்துதற்கும் வாளுண்டு!

உலகின் கருவறையாய்

உதித்த இனம் நமதென்னும்

நிலைத்த புகழுக்கு

நிகராக ஏதுமிலை!

ஓசை முளைக்கும் முன்னே

உயிர்த்தமொழி தமிழென்று

ஆசையுடன் கொண்டாடி

அன்புணர்வைப் பொங்கவைப்போம்!

கொஞ்சுதமிழ் இசைபாடிக்

குளிர்ந்துவரும் இளந்தென்றல்

மஞ்சளிஞ்சிக் கரும்போடு

மணக்கட்டும் தைப்பொங்கல்!

-ஆரூர் தமிழ்நாடன்