ADVERTISEMENT

புத்தகச் சாதனையில் கலக்கும் பெண் கவிஞர் மரிய தெரசா!

12:37 PM Jul 19, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடவே படாதபாடு படவேண்டிய இந்த கரோனா நெருக்கடிக்கு நடுவிலும், ஒரே நேரத்தில் 20 புத்தகம், 30 புத்தகம் என்று எழுதி வெளியிட்டு இதுவரை நூறு புத்தகத்துக்கு மேல் வெளியிட்டு கின்னஸை நோக்கிப் பயணிக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் மரியதெரசா. இவர் கதை, கவிதை என எழுதிக் குவித்து, அவற்றை நூற்றுக்கணக்கான நூல்களாக வெளியிட்டு தமிழ் இலக்கிய உலகில் சாதனை பெண்ணாக வலம் வருகிறார். அவரைப் பற்றிய சாதனைத் தகவல்களை அவரது குரலிலேயே கேட்போம்.

”எனக்குச் சொந்த ஊர் காரைக்கால். அப்பா ரெபேர் சேழான். அம்மா பிளான்ஷேத் சேழான். எனக்கு இரண்டு சகோதரிகளும், ஒரு சகோதரனும் இருக்கிறார்கள். தமிழில் எம்.ஏ., பி.எச்.டி, இந்தியில் இரண்டு எம்.ஏ., மற்றும் இரண்டு பி.எட்., ஆங்கிலத்தில் எம்.ஏ., படித்துள்ளேன். சென்னையில் தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக 32 வருடங்கள் பணிபுரிந்தேன். பணி ஓய்வு பெற்று சில வருடங்களாகிறது. என்னுடைய அம்மா கவிதைகள் எழுதுவதில் ஆர்வமாக இருந்தார்கள். அவருடைய படைப்புகளை நூலாக வெளியிட்டோம். அம்மா வழி தாத்தாவும் கவிதைகள் எழுதுவாராம். அந்த வழியில் ஈடுபாடு ஏற்பட்டு நானும் கவிஞராக, எழுத்தாளராக உருவாகியிருக்கிறேன்.

98-ம் வருடம் 'நிழல் தேடும் மரங்கள்' என்ற புதுக்கவிதை நூலினை வெளியிட்டேன். அதன்பின்னர் இதுவரை மரபுக் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், சிறுவர் கதைகள், சிறுவர் பாடல்கள் என ஒரே மேடையில் 20 நூல்கள், 40 நூல்கள் என இதுவரை 100 நூல்களை வெளியிட்டுள்ளேன். இதையடுத்து மேலும் 100 நூல்களை எழுதி முடித்து, அதுவும் வெளியிட தயாராக இருக்கிறது. கரோனா ஊரடங்கு காலம் முழுமையாக முடிவுக்கு வந்தபின் விழா நடத்தி அவற்றை ஒரே மேடையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறேன். இதுவரை பெண் படைப்பாளிகள் எவரும் இத்தனை நூல்களை ஒரே நேரத்தில் வெளியிட்டதில்லை என்றுசொல்லி பலரும் பாராட்டுவது எனக்கு மகிழ்வைத் தருகிறது.

மேலும் இன்னொரு 50 நூல்களை எழுதத் தொடங்கி, அந்த எல்லையையும் நெருங்கிவிட்டேன். அந்த வகையில் 250 நூல்கள் எழுதிய முதல் பெண் படைப்பாளி என்ற பெருமையை விரைவில் எட்டுவேன். கவிஞர்கள் பலரும் மூன்று வரிகளில் துளிப்பா, ஹைக்கூ, சென்ரியூ என வகைப்படுத்தி எழுதுவது வழக்கம். நானும் அவ்வகை கவிதைகள் எழுதியுள்ளேன். மேலும், மோனைக்கூ, எதுகைக்கூ, மூன்றியோ, பழமொன்ரியூ, போதனைக்கூ, முரண்கூ, குறள்கூ, நெடில்கூ, குறில்நெடில்கூ என புதுவகை கவிதைகளையும் நான் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன். மோனைக்கூ, எதுகைக்கூ அந்தாதி, தன்முனை அந்தாதி, மோனைக்கூ அந்தாதி, நெடில்கூ அந்தாதி, குறில்நெடில்கூ அந்தாதி எனவும் வகைப்படுத்தி எழுதி வருகிறேன். அவ்வகை நூல்கள் அச்சில் இருக்கின்றன. இந்த வகை நூல்களும் கவிதை வடிவத்தில் எனது புது முயற்சி!

பெரும்பாலும், சமூகத்தில் நடக்கும் அநீதிகள்தான் என்னை எழுதத் தூண்டுகின்றன” என்று தன்னம்பிக்கை மிளிரச் சொல்லும் கவிஞர் மரியதெரசா....

”இதுவரை எனது நூல்களை 18 மாணவர்கள் ஆய்வு செய்து எம்.பில். மற்றும் பி.எச்.டி., பட்டம் பெற்றுள்ளார்கள். பொள்ளாச்சியிலுள்ள கல்லூரியொன்றின் பாடத்திட்டத்தில் எனது கவிதைகள் இடம்பெற்றுள்ளது. இதுபோல் இன்னும் சில பெருமைக்குரிய அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. பல்வேறு அமைப்புகளிடமிருந்து கவியருவி, கவிமாமணி விருது, கம்பன் விருது, பாரதிதாசன் விருது என இதுவரை ஏறத்தாழ 150 விருதுகள் பெற்றிருக்கிறேன். இலக்கியவாதிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் 'தமிழ்ச் செம்மல்’ விருதையும் பெற்றுள்ளேன். இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மலேசியா, அந்தமான், துபாய் என சில வெளிநாடுகளுக்கும் சென்று திரும்பியுள்ளேன். என் அனுபவத்தில் சொல்கிறேன்...பெண்கள் சாதிக்க நினைக்கும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்ப்புகள் வரக்கூடும். வீட்டிலிருந்தும் முட்டுக்கட்டை விழலாம். அதையெல்லாம் பொறுமையான சமாளித்து, எடுத்துக் கொண்ட லட்சியத்தில் உறுதியாக இருந்தால் கண்டிப்பாக ஒருநாள் நினைத்ததை சாதிக்கலாம்” என்கிறார் தமிழகத்தின் சாதனைப் பெண் படைப்பாளியான மரியதெரசா.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT