Skip to main content

தமிழீழத்தின் துப்பாக்கி தூக்கா புரட்சிப் போராளி பாலசிங்கம்!

மார்ச் 4 - விடுதலைப்புலிகளின் மதியுக அறிஞர் ஆன்டன் பாலசிங்கம்

 


1938 மார்ச் 4ந்தேதி யாழ்ப்பாண நகரின் அடுத்த பரவெட்டியில் பிறந்தவர். படித்துமுடித்தவுடன் இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். பணியாற்றும்போதே திருமணம் செய்து வைக்கப்பட்டார். 5 ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் பாலசிங்கத்தின் மனைவி இறந்து போனதால் நொறுங்கி போய்விட்டார். அதிலிருந்து மாற நினைத்து லண்டனிலுள்ள சவுத்பாங் பல்கலைகழகத்தில் அரசியல் - விஞ்ஞானம் பற்றி ஆய்வு செய்துவந்தார். டாக்டர் பட்டத்திற்காக இந்த பல்கலைகழகத்தில் பகுதிநேர பகல்கலைகழக மேற்பார்வையாளராக பணிபுரிந்து தன் பண தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டார். இப்பல்கலைகழகம் தான் பாலசிங்கத்துக்கு புது வாழ்க்கைக்குள்ளும், புரட்சிகர வாழ்க்கைக்குள்ளும் தள்ளியது.

 

ஆய்வு படிப்பு மாணவராகயிருந்த பாலசிங்கத்தை அதே பல்கலைக்கழகத்தில் மருத்துவ(நர்ஸ்) படிப்பில் சேர்த்தார் அடேல். 1950 ஜனவரி 30ல் ஆஸ்திரேலியாவின் வரகல் நகரில் பிறந்தவர். 1978களில் சவுத்பாங் பல்கலைக்கழகத்தில் நர்ஸ்க்கான மேற்படிப்பில் சேர்ந்திருந்தார். அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிகமானோர் இடதுசாரிகளாகவும், இடதுசாரி அரசியல் கருத்தை உடையவர்களாகவும் இருந்தார்கள். மார்க்சியம் - லெனினியம் பேசிய பாலசிங்கம் அவர்களோடு ஒன்றிணைந்து கருத்து பரிமாற்றத்தில் இருந்தார். அதே கருத்துகளில் ஈடுபாடு கொண்டிருந்த அடேல் அடிக்கடி பாலாவை சந்திக்கச் செய்தார். இருவரின் எண்ண அலையும் ஒத்துபோனது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், இன விடுதலைக்காகவும் போராடிய ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ், ஜிம்பாபாவே ஆப்ரிக்க தேசிய ஒன்றியம், தென்மேற்கு ஆப்ரிக்க மக்கள் அமைப்பு, பாலஸ்தீன விடுதலை அமைப்புகளின் போராட்ட, பேரணி பொதுக்கூட்டங்களில் பாலசிங்கம் – அடேல் கலந்து கொண்டனர்.

 

BalaSingam

 


இவர்கள் வாழ்க்கையில் ஒன்றிணையலாம் என முடிவுசெய்து 1978 செப்டம்பர் 1ந்தேதி லண்டனிலுள்ள பிரிக்ஸ்டன் நகரத்தின் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் 5 நிமிடத்தில் திருமண சடங்கை முடித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் சிலர் செய்த பண உதவியை கொண்டு திருமணத்திற்கான “பீர் பார்ட்டி” தந்தது பாலசிங்கம் – அடேல் தம்பதி.

 


திருமணத்திற்கு பின்னும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டங்களில் தம்பதிகளாக கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்காக பேரணி நடத்தியது. அணு ஆயுத ஒழிப்பு இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தனர். அதே காலகட்டத்தில் 1977ல் இலங்கையில் நடந்த பொதுத்தேர்தலில் இருந்து தமிழர் பிரதேசங்களில் வன்முறை அதிகமானது. அது லண்டனில் வாழ்ந்த தமிழ் இளைஞர்களைத் தட்டி எழுப்பியது. தமிழ் அரசியல் அமைப்புகள் உருவாயின. பல்கலைகழத்திலிருந்த பாலசிங்கத்தை லண்டனிலிருந்த இலங்கை தமிழ் இளைஞனான ஞானசேகரன் சந்தித்து மக்களுக்கு அரசியல் ஆவணம் ஒன்றைத் தயாரித்து தருமாறு வேண்டினார். அதன்படி பாலாவும் தயாரித்து தந்தது லண்டன் தமிழ் மக்களிடையே பெரிய வரவேற்ப்பைப் பெற்றது. அந்த ஆவணம்தான் பாலா தம்பதி வாழ்வை மாற்றியது.

 


அந்த ஆவணத்தை படித்த விடுதலை புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ லண்டன் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், ராமச்சந்திரன் ஆகியோர் பாலாவை சந்திக்க ஆரம்பித்தார்கள். விடுதலைப்புலிகள் பற்றியும், அதன் தலைவர் பிரபாகரன் செயல்பாடுகள் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்கள். அதையெல்லாம் உன்னிப்பாக கேட்டுக்கொண்டார் பாலா. விடுதலைப்புலிகளின் லண்டன் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்காக தமிழ் தேசிய பிரச்சனை, சோசலிச தமிழீழத்தை நோக்கி... என இரண்டு தலைப்புகளில் நூல்களை எழுதித்தந்தார். அது பிரபாகரனை மிகவும் கவர்ந்தது. அதன்பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக மாற ஆரம்பித்தார்.

 


1979ல் பிரபாவை முதன்முதலாக காண பாலா-அடேல் தம்பதி லண்டனிலிருந்து சென்னை வந்தபோது அமைப்பின் ரகசிய தலைவர்கள், அமைப்பின் ரகசியங்கள், மேல்நாட்டு ரகசிய தொடர்புகள் அறிந்தவராக இருந்தார். பின் கள தளபதிகள், அமைப்பின் பூசல்கள், அதிகார போட்டிகள் போன்றவற்றைக் கண்டு ஆலோசனை தருபவராக, முடிவு எடுப்பவராக இருந்தார். 1983ல் இந்தியாவின் பார்வை, பயிற்சிகள் விடுதலைப்புலிகளுக்கு கிடைக்க வழி அமைத்து தந்தவர்களுள் முக்கியமானவர். புலி போராளிகளுக்கு, கள தளபதிகளுக்கு அரசியல் பயிற்சி தந்து வளர்த்தவர். அமைப்பில் மாற்றங்கள் கொண்டு வர அடித்தளமிட்டதன் மூலம் சிறந்த திட்டமிட்டாளர்  என்பதை நிரூபித்தார்


இந்தியா-புலிகள் பேச்சுவார்த்தைகள், இலங்கை அரசு-புலிகள் பேச்சுவார்த்தை, அமைதி ஒப்பந்தம், அமைதி கால பேச்சு வார்த்தைகளில்தான் ஒரு இராஜதந்திரி என்பதை நிரூபித்தார். எவ்வளவு பெரிய தலைவர்களிடம் பேசும்போதும் நிதானம் தவறாமல், கோபப்படாமல் தன் தரப்பின் நியாயத்தை எடுத்து வைத்து தன் தரப்பை விட்டுக் கொடுக்காமல் சாதித்தவர். அதனாலேயே இயக்க தலைமை அவரை சர்வதேச பேச்சுவார்த்தை தலைவராகவே வைத்திருந்தது.

 


சீட்டாட்ட பிரியரான பாலசிங்கம் சீட்டு கலைத்த பின் அந்த சீட்டு மாறி மாறி போவதைப் போல இந்தியா புலிகள் மோதலின் போது வடமராட்சி, கரவெட்டி, யாழ்ப்பாணம், முல்லை, நெல்லியடி என தன் மனைவி அடேலோடு வீடுகள் மாறி மாறி பதுங்கினார். காரணம் இந்திய அமைதிப்படை பாலா தம்பதியை வலைவீசி தேடியது. பாலாவுக்கு இரவில் கண்பார்வை மங்கல்; இதனால் மிகவும் சிரமப்பட்டார். ராணுவ தேடுதலின் போது இரவில் பயணமாகும்போது அடேல் தான் துணையே. இந்தியாவின் அமைதிப்படை விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது இயக்கத்தில் ஏகப்பட்ட உயிரிழப்பு. அப்படியும் அடேல், பாலா தம்பதிக்கு பாதுகாப்புக்கு சுக்ளா என்ற போராளி நிரந்தரமாக கூடவேயிருந்தார். அதேபோல் காயம்பட்ட பொட்டம்மன், நடேசன் ஆகியோர் மாறி மாறி துணைக்கு இருந்தார்கள்.

 


1987 டிசம்பர் 23ல் தமிழக முதல்வாகயிருந்த எம்.ஜி.ஆர் மறைந்தார். அதனால் இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட புலிகள் பாலா தம்பதியை படகு மூலம் தமிழகம் அனுப்பினார்கள். 10 மணிநேர கடல் பயணத்திற்கு பின் வேதாரண்யம் வந்தவர்கள், ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்தனர். தமிழகத்தில் அப்போது புலிவேட்டை தொடர்ந்ததால் அந்த தலைமறைவு நிலை. வேதாரண்யத்திலிருந்து திருச்சி வந்து தங்கியவர்கள் அங்கிருந்து பெங்களூர் ஜெயநகரில் வாடகை வீடு பிடித்து தங்கினர். தமிழகத்திலிருந்த இயக்க முன்னோடிகள் சிலர் பெங்களூர் போய்விட்டனர்.

 


சில நாட்களில் பிரபாவிடமிருந்து தகவல் உடனே லண்டன் பயணமாகுங்கள் என்று அப்போது விசா காலாவதியாகியிருந்தது. அதனால் சென்னை பயணமானார்கள். அதோடு சென்னை விமான நிலையம் மூலமாகவே செல்ல முடியும் என்ற நிலை வேறு. சென்னை வந்தவர்கள் ஏற்கனவே அறிமுகமான இந்திய புலனாய்வு துறையின் அதிகாரியொருவரின் உதவியை கேட்டார்.  அதற்கு சரியென்றவர் தமிழக க்யூபிராஞ்ச் போலிஸாரின் கண்களில் படாமல் இருக்குமாறு எச்சரிக்கை செய்தார். அந்த நிலையிலும் எதிரியின் குண்டு வீச்சால் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக சென்னை வந்திருந்த கிட்டுவை தமிழக போலிஸார் வீட்டு காவலில் வைத்திருந்தார்கள். இரண்டு அடுக்கு மாடி வீட்டில் மேல் மாடியில் கிட்டுவும், கீழே போலிஸாரும் தங்கியிருந்தனர். இரவில் கம்பி வேலியை நீக்கிவிட்டு போய் பாலாவை சந்தித்து விட்டு அதேபோல் திரும்பியவர் பின் அந்த அதிகாரி உதவியுடன் லண்டனுக்கு பறந்தார்கள் பாலா-அடேல் தம்பதியினர்.

 

BalaSingam

 


1989 மே 3ந்தேதி பிரமதேசா கட்சி காலத்தில் இலங்கைக்கு வருகை புரிந்தார்கள். அதன்பின் பேச்சுவார்த்தை, போர், அமைதி காலகட்டமென நடந்தபோது 1998 ஆகஸ்ட் மாதம் பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானது, படுத்த படுக்கையானார். நாட்கள் செல்லச்செல்ல உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்தியாவிடம் உதவி கேட்டார்கள் ராஜிவ்காந்தி கொலையால் போடப்பட்ட தடையை சுட்டி காட்டினார்கள். பின் நார்வேயிடம் உதவி கேட்கலாம் என முடிவு செய்து இலங்கையின் முன்னால் வெளிவிவகார அமைச்சரான ஐ.சி.ஏஸ்.ஹமீதுவை அணுகினார்கள். அவர் தனக்கு நெருக்கமான இலங்கைக்கான நார்வே தூதர் ஜோன் ஆவஸ்போக்கிடம் கேட்டார்; அவரும் சம்மதித்தார். நார்வே தூதரான ஜோன் அப்போது அதிபராகயிருந்த சந்திரிகா குமரதுங்காவிடம் பேசினார். பாலசிங்கத்தின் உயிர் புலிகளுக்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த சந்திரிகா புலிகளுக்கு நிபந்தனைகளை விதிக்க ஆரம்பித்தார். எல்லாமே ராணுவ நிபந்தனைகள் அதெல்லாம் முடியாது என ஒதுக்கியது புலிகள். அப்போது அனுமதியில்லயென்றார் சந்திரிகா. கவலையில்லையென என அறிவித்த புலி தலைமை உயிரோடு விளையாட தீர்மானித்தது. கடற்பயணம் அதுவும் ரகசிய பயணத்திற்கு திட்டம் போட்டார்கள்.

 


1999 ஜனவரி 23 நள்ளிரவி கடல் மார்க்கமான கடற்புலிகள் உதவியோடு படகு மூலம் அடேல்-பாலா தம்பதி ஏற்றப்பட்டார்கள். உடல்நிலை சரியில்லாத பாலா படுத்தபடியே வந்தார். அங்கிருந்த ஒரு சின்ன கப்பல் பின் நடுக்கடலில் சரக்கு கப்பலுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. புலிகளின் கப்பற்படை வீரர்கள் திறமையாக செயல்பட்டு பாதுகாப்பாக கப்பல் விட்டு கப்பல் மாற்றி அனுப்பி வைத்தார்கள். மோசமான உடல்நிலையோடு, மோசமான கடற்பயணம் பலநாள் தொடர்ந்து 1999 பிப்ரவரி மாதம் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் இறங்கினார்கள். அங்கு பாலாவுக்கு ரகசிய சிகிச்சை தரப்பட்டது. இடதுபுற சிறுநீரகம் வெட்டி எடுக்கப்பட்டது. உடல்நிலை தேறியது. பாலா, அடேல் விசா காலாவதியாகி ஆண்டுகள் உருண்டோடியிருந்து. பின் தெரிந்த மேல்மட்ட அதிகாரிகளிடம் பேசி விசா பெற்று லண்டன் போய் சேர்ந்தார்கள். உடல்நிலை தேறிய பின் நார்வேவுடன் சமாதான வார்த்தையில் ஈடுபட்ட அந்த அறிஞர் துப்பாக்கியே தூக்கா புரட்சி போராளி.

 


2006 டிசம்பர் 13ந்தேதி லண்டனில் காலமானார். குழந்தை செல்வம் இல்லாத பாலா தம்பதிக்கு. ஆனால் பாலா இறந்தபோது குழந்தையாய் மாறி தழீழமே கண்ணீர் விட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...