Advertisment

தீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம்! – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை

vairamuthu

இந்தியா மன்னிக்காது!

எப்படிச் சகிப்போம்?

காஷ்மீர் ரோஜாக்களில்

மாமிசம் வழிவதை!

எப்படிப் பொறுப்போம்?

சிம்லா பனிக்கட்டிகள்

சிவப்பாய் உறைவதை!

ஏ தீவிரவாதமே…

நீ புகுந்தது எல்லைப்புறத்தில் அல்ல;

கொல்லைப்புறத்தில்!

இந்திய வீரன் எவனும்

கள்ளச்சாவு சாகமாட்டான்!

எங்கள் மரணத்தின் வாசல்

நெஞ்சின் பக்கம் உள்ளது…

முதுகுப் பக்கமல்ல!

உயிரென்ற ஒரு பொருளே

உலகின் பெரும்பொருள்

அதனை மண்ணுக்கீந்த மாவீரர்களே…

விழுகிறது உங்கள் பாதங்களில்

வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்!

ஓயமாட்டோம்.. சாயமாட்டோம்…

எங்கள் தேசியகீதத்தில்

ஒப்பாரி ராகம் ஒட்டாது;

எங்கள் தேசியக்கொடி

அரைக்கம்பத்தில் நிற்காது!

அகிம்சாதேசம் பெயர்ப்பலகையை

அவிழ்த்து வையுங்கள்;

இந்தியா மன்னிக்காது இனியும்!

மாவீரர்களே…

உங்கள் கருகிய சீருடைகளால்

தீவிரவாதத்தின் மீது

சவத்துணி போர்த்துவோம்!

இந்தியாவின் கண்ணீரை

விரல்களால் அல்ல…

துப்பாக்கி முனைகளால்

துடைத்தெடுப்போம்!

நாய்கள் கனவு கண்டால்

எலும்பு மழை பெய்யும்.

நாங்கள் கனவு கண்டால்

ஆகாயம் அதிரும்; நட்சத்திரம் உதிரும்!

எங்கள் மாவீரர்களே…

உங்களின் அஸ்திகளை

கங்கை காவிரியில் அல்ல;

சத்ருக்களின் சாப்பாட்டில் கரைப்போம்!

சமாதானம் மட்டுமல்ல…

மரணம்கூட ஒருவழிப் பாதயைல்ல!

எம்முயிர் காக்க

தம்முயிர் தந்த தங்கங்களே…

இதோ...!

நூற்றுமுப்பது கோடி தலைகளின்

ஒற்றை வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்!

வீழ்க சூழ்ச்சி! வெல்க வீரம்!!

வாழ்க நாடு! சூழ்க வெற்றி!!

- கவிஞர் வைரமுத்து

indianarmy. pulwama attack Vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe