It is all love on the way...

வரும் வழியில்

ஒரு காதல் தன் காதலியின் கைபிடித்து,

Advertisment

சாலையில் பறந்து கொண்டிருந்தது

இன்னொரு காதல்

பேருந்து நிறுத்தத்தின் நிழலில்

Advertisment

தன் காதலன் தோளில் சாய்ந்து

உலகை மறந்து கொண்டிருந்தது

பிறகொரு காதல்

தன் காதலி தன்னை நினைப்பதாய் நம்பி

சிரித்துக் கொண்டே தும்மியது

அடுத்தொரு காதல்

பெற்றோர் எதிர்ப்பை எண்ணி

காதலன் மடியில் விம்மியது

கடற்கரையில் ஒரு காமம்

தன்னைக் காதல் என்று சொல்லிக் கொண்டது

தனியறையில் ஒரு காதல்

காமம் மறந்து பேசிக் கொண்டது

கைபேசியில் ஒரு காதல்

கண்ணீர் விட்டுக் கெஞ்சிக் கொண்டிருந்தது

கண்ணீர் காண்டத்தை கடந்த ஒரு காதல்

கல்யாணக் கனவுகள் கண்டு கொண்டிருந்தது

கல்யாணக் காண்டத்தைக் கடந்த ஒரு காதல்

குழந்தையிடம் எரிந்து விழுந்தது

இன்னும் சொல்லாததன் கனத்தை

சுமந்து தவித்தது ஒரு காதல்

சொல்லிமுடித்து விட்ட சுகத்தில்

மிதந்து குதித்தது ஒரு காதல்

நட்புக்குள் சிக்கி

குழம்பிக் கொண்டிருந்தது ஒரு காதல்

நட்பையும் தாண்டி

துணையாய் சென்றது ஒரு காதல்

இப்படி...

வழியெல்லாம் நிறைந்திருந்த

காதல்களைக் கடந்து

தனியே நடந்து வந்த என்னை

பார்த்து சிரித்தபடியே மெல்ல விலகி

தூரம் சென்று கொண்டிருக்கிறது...

என்னுள் இருந்து

ஒரு காதல் !!!