ADVERTISEMENT

அறிந்துக்கொள்வோம் தினம் ஒரு வரலாறு பிப்.14 – புதுவை விடுதலை வீரர் சுப்பையா

01:43 PM Feb 14, 2018 | Anonymous (not verified)

ஆசியாவிலேயே 8 மணி நேரம் வேலை என்கிற சட்டத்தை முதன்முதலில் அமல்படுத்தியது பாண்டிச்சேரியில் தான். பிரெஞ்ச் அரசாங்கம் ஆட்சியின் கீழ் புதுவை மாநிலம் இருந்தபோது அதனை செய்ய வைத்தது சுதந்திர போராட்ட வீரர், தொழிற்சங்கவாதி வ.சுப்பையா.

1911 பிப்ரவரி 11ந்தேதி பாண்டிச்சேரியில் வெள்ளாழர் வீதியில் வசித்த வரதராஜிலு – ராஜபங்காரு தம்பதியரின் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் கைலாசசுப்பையா என்பதாகும். நவதானிய வியாபாரியாக இருந்தார் வரதராஜிலு. கலவை உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தனது 14வது வயதில் இருந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொள்ள துவங்கினார்.

1927ல் கடலூர் வந்த காந்தியை போய் பார்க்க தனது நண்பர்களோடு சைக்களில் புதுவை சென்றார் சுப்பையா. அதன்பின் 16வது வயதில் சக காங்கிரஸ் தலைவர்களுடன் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்கு புதுவையில் இருந்து சென்றார். சங்கு சுப்பிரமணியம் என்கிற சுதந்திரபோராட்ட வீரர் சென்னையில் நடத்திய சுதந்திரசங்கு என்கிற பத்திரிக்கை அலுவலகம் செல்வார் அவரை சந்திக்க. அப்போது தான் அவருக்கு சொந்மாக பத்திரிக்கை தொடங்க வேண்டும் என்கிற ஆசை வந்து புதுவையில் சுதந்திரம் என்கிற பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார்.

1929ல் புதுவையில் நட்புறவுக்கழகம் என்கிற இலக்கிய அமைப்பை உருவாக்கினார். 1933ல் அரிஜன சேவா சங்கத்தை தொடங்கினார். அரிஜன மக்களின் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி உரிமைகள் பெற வழி செய்தவரின் மிக முக்கிய சாதனையே தொழிலாளர்களுக்கான போராட்டங்கள் மூலம் கிடைத்த வெற்றிகள் தான். புதுவையில் பிரெஞ்ச் இந்திய வாலிபர் சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களான சிங்காரவேலர், சுந்தரய்யா அறிமுகம் இவரை தொழிற்சங்கவாதியாக அடையாளம் பெற வைத்தது.

ADVERTISEMENT


புதுவையில் இயங்கிய பல பஞ்சாலைகள் தொழிலாளர்களை நசுக்கி அவர்களின் உழைப்பை உறிஞ்சியது, அதற்கான ஊதியத்தை வழங்கவில்லை. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை வேலை வாங்கியது, பெண்களை கொத்தடிமைகளாக நடத்தியது, குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக ஈடுப்படுத்தப்பட்டனர், பேறுகால விடுமுறை கிடையாது. இதை எதிர்த்து தனது சுதந்திரம் என்கிற பத்திரிக்கையில் தொடர்ச்சியாக எழுதிவந்தார் சுப்பையா. இதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இவரை வந்து சந்தித்து பேசுவார்கள். இதனால் தொழிலாளர்களின் ஆலோசராக இருந்தார்.

1934 பிப்ரவரி 17ந்தேதி அதே சுப்பையா காந்தியை அழைத்து வந்து புதுவையில் கூட்டம் நடத்தினார். இது அவர் வாழ்வில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது.

புதுவையில் பிரெஞ்ச் முதலாளிகளால் நடத்தப்பட்ட பெரும் பஞ்சாலைகள் சவானா பில், ரோடியர் மில், கப்ளே மில். இவை எதற்கும் அடங்காமல் இருந்தன. தொழிலாளிகளை மிரட்டின. இதனால் பெரும் போராட்டம் நடைபெற்றது. 89 நாட்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. 1936 ஜீலை மாதம் புதுவையில் பஞ்சாலை தொழிலாளர்களின் பெரும் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்றது. 12 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். இதில் அதிர்ச்சியான பிரெஞ்ச் அரசாங்கம் இராணுவத்தை கொண்டு போராட்டத்தை கலைக்க உத்தரவிட்டது. இராணுவ வீரர்கள் போராடிய தொழிலாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். 12 தொழிலாளர்களை சுட்டுக்கொன்றது இராணுவம். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் அமலோற்பவநாதன், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி, ஜெயராமன், சுப்பராயன், சின்னையன், பெருமாள், வீராசாமி, மதுரை, ஏழுமலை, குப்புசாமி, ராஜகோபால் ஆகிய 12 பேர் ஆவர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இது உலக அரங்கில் பிரெஞ்ச் அரசாங்கத்தை தலைகுனிய வைத்தது.

ADVERTISEMENT


1937 ஏப்ரல் 6ந்தேதி பிரெஞ்ச் அரசாங்கம் இந்தியாவுக்கான தொழிற்சங்க சட்டத்தை இயற்றியது. அதில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும், 8 மணி நேர வேலை என்கிற விதியை உறுவாக்கி சட்டமாக்கியது. தொழிலாளர்களின் போராட்டத்துக்கு வ.சுப்பையா தலைமை தாங்கினார். நேரு உதவியுடன் அவரே பிரெஞ்ச் அரசாங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பாரிஸ் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு மேற்கண்ட சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தாலும் சுயமரியாதை கட்சியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார். புதுவை முரசு ஆசிரியர் பொன்னம்பலனார், பெரியாரின் தளபதி குத்துஊசி குருசாமி, மருத்துவர் நடேசமுதலியார் போன்றவர்களுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டு அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து கூட்டங்களை நடத்தினார்.

1954ல் புதுச்சேரி இந்தியாவோடு இணைக்கப்பட்டன. அப்போது அவரை நாடு கடத்தி வைத்திருந்தது பிரெஞ்ச் அரசாங்கம். 1955ல் புதுவைக்கு வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர். அதன்பின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை எதிர்கட்சி தலைவர், கூட்டணி அமைச்சரவையில் 1969 முதல் 1973 வரை விவசாயத்துறை மந்திரியாக என பதவி வகித்தார். பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு என்கிற தலைப்பில் அவரே நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

1993 அக்டோபர் 12ந்தேதி மறைந்தார். அவருக்கு புதுவையில் ஆளுயுற சிலை வைக்கப்பட்டது, அவரது இல்லம் காட்சியகமாக அரசு மாற்றியது. மக்கள் தலைவர் என புகழப்படும் அவருக்கு அவரது நூற்றாண்டு விழா ஆண்டான 2011ல் அவரது உருவம் தாங்கிய தபால் தலை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது. இவரது மனைவி சரஸ்வதி. அவரும் சுதந்திர போராட்ட காலத்தில் பெரிய போராட்டவாதியாக திகழ்ந்தார்.

- ராஜ்ப்ரியன்

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT