ADVERTISEMENT

சாகித்ய விருதாளரை வன்மமாக விமர்சிப்பதா? - ஜெயமோகனுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

04:45 PM Aug 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2022ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கும் எழுத்தாளரும் ராணி இதழ் ஆசிரியருமான ஜி.மீனாட்சிக்கும், ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பொள்ளாச்சியைச் சேர்ந்த கவிஞர் ப.காளிமுத்துவுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களில் கவிஞர் ப.காளிமுத்துவுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதை எழுத்தாளர் ஜெயமோகன் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார். இது பலரின் கண்டனத்தைக் குவித்துவருகிறது. ஜெயமோகன் தன் முகநூல் பக்கத்தில் “இந்த இளைஞர் இவ்விருதால் ஓர் அவமதிப்பையே அடைந்துள்ளார். இதை அவருக்கு அளித்தவர்கள் அவரை சிறுமை செய்கிறார்கள். அவர் தன் எழுத்து பற்றிய போலியான நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள்" என்று சொல்லி இருப்பதோடு, “அவருக்கு முழுமையான புறக்கணிப்பே எஞ்சும்” என்றும் சாபம் விட்டிருக்கிறார்.

இது குறித்துப் பேசிய வட சென்னைத் தமிழ்ச் சங்கத் தலைவர் இளங்கோ “இது ஜெயமோகனின் மிகமோசமான மேட்டிமைப் பார்வை. ஆதிக்கத்துக்கு எதிராக எழுதக்கூடியவர் என்பதற்காகவும், அதிக அறிமுகம் ஆகாதவர் என்பதற்காகவும் தான் அவர் காளிமுத்து மீது ஆத்திரத்தைக் கொட்டி இருக்கிறார். சாகித்ய அகாடமி நிறுவனத்தின் நடுவர் குழுதான் இவ்விருதுகளைத் தீர்மானிக்கிறது. ஜெயமோகன் இந்தத் தேர்வுக் குழுவையும் மட்டரகமாகப் பேசியிருக்கிறார். அவர் ஒருவகையில் சாகித்ய அகாடமியில் இருக்கும் கவிஞர் சிற்பியை மறைமுகமாகக் சாடுகிறார் என்பது தெரிகிறது. ஒரு எளிய படைப்பாளி எந்தவித தனி முயற்சியும் இன்றி, விருது பெறுகிறார் என்றால் அவரைப் பாராட்ட வேண்டும். இல்லையென்றால் சும்மா உட்காரவேண்டும். அதை விடுத்து ஜெயமோகன் மட்டமாக விமர்சனம் செய்து தன் புத்தியின் அகோரத்தைக் காட்டி இருக்கிறார். இப்படிப்பட்ட வக்கிரத்தை வெளிப்படுத்துவதன் மூலம், ஜெயமோகன்தான், அம்பலப்படுகிறார்” என்கிறார் அழுத்தமாக.

எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான ஜே.மஞ்சுளாவோ தன் முகநூல் பக்கத்தில் ஜெயமோகனுக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் அவர், “அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, ஜே.மஞ்சுளாதேவி எழுதுவது. சாகித்ய அகாதமி, யுவபுரஸ்கார் விருது பற்றி நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான் இலக்கியவாதிகள், விஷ்ணுபுர விருது பெற்றவர்கள் மட்டும்தான் திறமையாளர்கள் என்று நீங்கள் நம்பலாம், தவறில்லை. ஆனால். அதை மற்றவர்கள் மீது திணிப்பதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை கொடுத்தார்கள்? விருதுபெற்ற ப.காளிமுத்துவை உங்களுக்கு எத்தனை நாளாகத் தெரியும்? விருது அறிவிப்பிற்குப் பிறகுதானே. எந்த தைரியத்தில் சொல்கிறீர்கள் இனிமேல்தான் அவர் எழுதவேண்டும் இனிமேல்தான் வாசிக்கவேண்டும் என்று. அவர் வாசிப்பது கிடக்கட்டும். நீங்கள் அதை வாசித்துத்தான் எழுதினீர்களா? ஒரு தனிமனிதன், படித்தான், படிக்கவில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் சார் உரிமை தந்தார்கள்.

உங்களை ஆசான் என்று கொண்டாடுபவர்களுக்குத்தான் பரிசைத் தர வேண்டும் என்று நீங்கள், பதிவு பண்ணாத உங்கள் அமைப்பின் விருதுக்கு வேண்டுமானால் முடிவு செய்யலாம். ஆனால் அரசின் அமைப்பு விருது ஒற்றை நபரால் முடிவு செய்யப்படுகிறது என்று நீங்கள் நினைப்பது உங்கள் அறியாமையைத்தான் காட்டுகிறது. இது உங்களுக்கு வயதாகிவிட்டதன் அறிகுறி. இன்றைய இளைஞர்கள், 'போங்க பூமர்' என்று சொல்லிவிடுவார்கள் சார். கவனமாக இருங்கள். இவ்விருது, போட்டி அல்ல.. வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக அளிப்பது என்பதை மறந்துவிடுகிறீர்களே.



தமிழில் நாவலே இல்லை என்று பரபரப்பைக் கிளப்புவீர்கள், நாவலைப் படம் ஆக்கும் பணிக்கு உங்களைச் சேர்த்துக்கொண்டதும் அது பற்றி எழுதிய கட்டுரைகளை அழிப்பீர்கள். இதெல்லாம்தான் நவீன இலக்கியவாதியின் அடையாளம் என்றால், பாவம் காளிமுத்துவால் இதை எல்லாம் எப்போதும் செய்யமுடியாது.


நீங்கள் எழுதியதன் உச்சபட்ச வன்மம், பொள்ளாச்சி பற்றிக் குறிப்பிட்டதுதான். “பொள்ளாச்சியில் இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும்” என்று எழுதியதற்கு என் கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். எந்த அர்த்தத்தில், யாரைப் புண்படுத்த நினைத்து இதைச் சொல்லியிருந்தாலும் சரி, இவ்வரிகள் உங்களின் தரத்தைபாதாளத்தில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எதைப் பற்றியும், ’சில காலங்கள்" என்று காலத்தை நிர்ணயம் செய்ய நீங்கள் யார், கடவுளா? உங்கள் காலம் எவ்வளவு என்று நிர்ணயிக்க உங்களால் முடியுமா? அறுபது ஆண்டுகள் கொண்டாடியிருக்கிறீர்கள். அறுபத்தாறு என்று பதட்டம் வேண்டாம். பணிசெய்யும் படத்தின் 2,3,4,5 என்று எண்ணற்ற பாகங்களிலும் பணிசெய்து நூறாண்டு வாழுங்கள்.


எங்கள் பொள்ளாச்சிப் பகுதியில் திட்டும்போது கூட, 'நாசம் அத்துப் போனவனே' என்பதுதான் எங்கள் பண்பாடு.’ என்று செவிட்டில் பளீர் பளீர் என்று அறைந்திருக்கிறார். கோவையைச் சேர்ந்த கவிஞர் சோழ நிலாவோ “பொள்ளாச்சி மண்ணின் ஆர்ப்பாட்டமில்லாத அர்ப்பணிப்பு மிக்க எளிய கிராமத்து இளைஞர் கவிஞர் ப. காளிமுத்துவைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? பிரபலமானவர்களும் கோடிகளில் புரளுபவர்கள் மட்டும்தான் விருது வாங்க வேண்டுமா..? தமிழ் அர்ப்பணிப்பு மிக்க ஒரு எளிய கவிஞர் விருது வாங்கினால் ஏன் வெந்து புலம்பிச் சாகுறீங்க? கவிதை எழுத சங்க இலக்கியம் தேவையில்லை. வானத்தைப் பார்த்து எழுத வேண்டிய எந்த அவசியமும் இல்லை. மண்ணையும் மக்களையும் படித்தால் போதும். அறம் என்று தொகுப்பு விட்டால் மட்டும் பத்தாது அறமும் இருக்கவேண்டும்.

அதெல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது? மாவு கடையில அறமே இல்லாமல் சண்டை போட்ட ஆளாச்சே நீ. இதுதான் கவிதை இது கவிதை என்று தீர்மானிக்க நீ யாரு? எந்தக் கொம்பனாலும் தீர்மானிக்க முடியாது. சமீபகாலமாகத்தான் எளிய படைப்பாளிகளைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறது சாகித்திய அகடாமி. அது உனக்கு பொறுக்கலையா? எனக்கு நிறைய வேலை இருக்கு. இன்னும் கோவப்பட்டா ரொம்ப மோசமாப் பேசிடுவேன். வன்மையான கண்டனத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். உனக்கும் பொன்னியின் செல்வன் முடியும் தருவாயில் இருக்கிறது. அதற்கான வேலையை போய்ப் பாரு. குறை சொல்றத விட்டுட்டு” - என்று ஜெயமோகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

ஜெயமோகன் தனது விமர்சனத்தின் மூலம் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார்.


இலக்கியன்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT