Advertisment

அமுதா தமிழ்நாடனின் ‘நிலாக் கூடை’ கவிதை நூல்! -ஆன்லைனில் வெளிட்ட பிரபலங்கள்!

கவிஞர் திருமதி. அமுதா தமிழ்நாடன் ‘நிலாக்கூடை என்ற கவிதை நூலைப் படைத்திருக்கிறார். வண்ணமயமாக பொலிவுடன் உருவாக்கப்பட்ட இந்த நூல் தமிழ் கூறு நல்லுலகின் பார்வைக்காக அமேசான் கிண்டிலில் ஏற்றப்பட்டிருக்கிறது.

Advertisment

பெண்ணுரிமை, கிராமியம், கிராமிய மக்களின் அன்புசூழ் வாழ்க்கை, ஏழ்மை, குடியின் கொடுமை, கரோனா நெருக்கடி, குடும்ப உறவுகளின் மேன்மை என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தக் கவிதைதொகுப்பை, ஆன்லைனில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் அரங்கேறின.

Advertisment

முன்னதாக நிலாக்கூடை நூலின் முதற்படியை, கவிஞரின் சொந்த ஊரான நாகை மாவட்ட திருவாய்மூரில், கவிஞரின் தாயார் சின்னம்மாள் உவகையோடு வெளியிட, அதைக் கவிஞரின் சகோதரி சுபாஷினி ராமதாஸ் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.

அமுதா தமிழ்நாடனின் நிலாக் கூடைத் தொகுப்பை, இயக்குநரும் நடிகருமான யார் கண்ணன் சென்னையில் வெளியிட்டு அறிமுகம் செய்ய, அதை அவர் மகளும் உதவி இயக்குநருமான மீரா திரிபுரசுந்தரி மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.

அதேபோல் பிரபல நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரியின் தாயார் திருமதி அமலோற்பவம் அம்மாள் தேனியில் நிலாக்கூடை நூலை வாழ்த்தி மகிழ்ந்து வெளியிட, அதை நடிகர் ஜோ மல்லூரி பெற்றுக்கொண்டார்.

அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிதயாரிப்பாளரும், நெறியாளரும், எழுத்தாளருமான பத்மா நிலாக் கூடையை உற்சாகமாய் வெளியிட, அவர் கணவரும் திரைப்படப் பாடலாசிரியருமான அருண்பாரதி மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.

குடும்ப உறவுகளைக் கொண்டாடும் நிலாக்கூடையைத் திரைப்பிரபலங்கள் குடும்ப சகிதமாக வெளியிட்டு சிறப்பித்தது, கூடுதல் சிறப்பாகும்.

இதேபோல் இலக்கிய உலகின் சார்பில், மதுரையில் நிலாக்கூடை நூலை, ’பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டலத் தலைவர்’ பாவலர் பொற்கைப்பாண்டியன் வெளியிட்டு மகிழ்வுடன் அறிமுகம் செய்ய, அதனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநரின் நேர்முகசெயலாளரும் ’மகிழ்ச்சி’ இதழின் ஆசிரியருமான சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.

மலைக்கோட்டை மாநகரான திருச்சியில்,கவிஞரும் அரசியல் பிரபலமுமான திருமதி கவிசெல்வா, நிலாக்கூடையை உள்ளார்ந்த வாழ்த்துக்களோடு வெளியிட, அதை அவரது மகன்பரமாத்மிகன் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார். நிலாக்கூடை நூல் குறித்துத் தம் மன்முவந்த வாழ்த்தைத் தெரிவித்த பாவலர் பொற்கைப்பாண்டியன்....

”கவிதாயினி அமுதா தமிழ்நாடனின் நிலாக்கூடை, தமிழ்கூறும் நல்லுலகால் பேசப்படும் நூல். ஒரு ஓவியக் கூடத்தையே முதுகில் சுமந்து பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சியாய் நான் நூலுக்குள் நுழைந்து பறந்து திரிந்தேன். எல்லாக் கவிதைகளிலும் உயிர் உலாவுகிறது. அப்பாவின் முத்தமாய்ச் சில கவிதைகளில் மனசு தொலைந்துபோனது. எட்டுக்குடித் திருவிழாவில் தொலைந்து போன கால் கொலுசாய்.. கருக்காய், கருக்கரிவாள் போன்ற கிராமத்துச் சொல்லாடல்களில் வயலில் இறங்கி உழவு செய்த காலமும், கதிர் அறுத்த காலமும், ஆடுமேய்த்த காலமும் உணர்ந்து அனுபவித்தேன்.

நமக்கான வாழ்க்கையை வாழாத ஏக்கத்திலும் ஞாயிற்றுக்கிழமைத் தவிப்பிலும் மனம் குலைந்தேன். நண்பர்களும் உறவினர்களும் வராத இல்லம் செங்கல் சூளை என்ற சொல்லாடல் தூங்கவிட வில்லை. அம்மாவின் சேலையைக் கிழித்து தாவணி கட்டிய நினைவுகளாய்க் கவிதைகள் மணக்கின்றன. அன்புத் தங்கை அமுதா தமிழ்நாடனைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொண்டு கொண்டாடும். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்” என்று தன் வாழ்த்தைத் தெரிவித்தார்.

http://onelink.to/nknapp

ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட முதல் தமிழ்க்கவிதை நூல் என்ற பெருமையையும், ஒரே நேரத்தில் பல ஊர்களில் அறிமுகம் செய்து வெளியிடப்பட்ட நூல் என்ற பெருமையையும் அமுதா தமிழ்நாடனின் ’நிலாக்கூடை’ பெற்றிருக்கிறது.

release online celebrities books poetry arur tamilnadan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe