ஐசிசி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வென்றது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சாதனையை இந்திய மகளிர் அணி பெற்றது. மேலும் இந்திய அணிக்கு நாட்டின் முக்கிய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியினருடன் இந்திய பிரதமர்  நரேந்திர மோடி கடந்த 05ஆம் தேதி (05.11.2025) இரவு கலந்துரையாடினார். 

Advertisment

இது தொடர்பான வீடியோவை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் போட்டியின் வெற்றி தருணங்கள், போட்டியின் சூழல், குழு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து வீராங்கனைகளிடம் பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். இந்த வீடியோக்க்ளை கிரிக்கெட் ரசிகர்களும், பாஜகவினரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையைக்  கைப்பற்றுவதற்கு ஹர்மன் பிரீத் கவுர் முக்கிய பங்காற்றியவர் ஆவார். இந்நிலையில் உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் இன்று (13.11..2025) சென்னை வருகை தந்துள்ளார். 

Advertisment

அதாவது சென்னையில்  நடைபெற உள்ள பல்வேறு நிகழ்வுகளில் ஹர்மன் பிரீத் கவுர் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளார். அதில் முதல் நிகழ்வாக முகப்பேரில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளியில் நடைபெற்று வரும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த இளம் விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் அவர்களுக்கான பாராட்டு விழாவில் ஹர்மன் பிரீத் கவுர் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக அவருக்குப் பள்ளி நிர்வாகம், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் ஹர்மன் பிரீத் கவுருவுக்கு ஆளுயர பிரமாண்ட மலர் மாலை அணிவிக்கப்பட்டு தனியார்ப் பள்ளியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்வில் ஹர்மன் பிரீத் கவுர் கலந்து கொள்ள உள்ளார்.