108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கிய தளமாக விளங்கிவரும் மதுரை அழகர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி அன்று வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆடி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதில் 9ஆம் நாளில் நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த தேரோட்டத்தில் மதுரை  திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வர்.

இந்நிலையில் கள்ளழகர் கோவிலின் ஆடி பெரும் திருவிழாவானது கடந்த 1ஆம் தேதி (01.08.2025) கோவிலில் உள்ள தங்ககொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னம், கருடன், அனுமார் மற்றும் தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கோவில் வளாகத்தில் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். இந்த விழாவின் 9ஆம் நாளான இன்று (09.08.2025) சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் காலை 7 மணி அளவில் 60 அடி உயரம் கொண்ட தேரில் எழுந்தருளினார். 

அதனை தொடர்ந்து காலை 08:45 மணி அளவில் பக்தர்களின் “கோவிந்தா.... கோவிந்தா....” கோஷம் முழங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக பக்தர்களின் பாதுகாப்பிற்காகத் தென் மண்டல காவல்துறைத் தலைவர் தலைமையில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திண்டுக்கல், மதுரை, மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.