விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல விதமான சிலைகளை வைத்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வேலூர் மாநகர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் கொண்டாடிவரும் விநாயகர் சதுர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிவரும் பாலாஜி நகர் இளைஞர்கள் இம்முறை காவல் நிலையம் போன்று செட் அமைத்து அதில் விநாயகரே காவலர் போல் இருப்பது போன்று வடிவமைத்துள்ளனர்.
தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் தமிழ்நாடு காவல் நிலையம் போன்று தத்ரூபமாக சுற்றுச்சுவர், ஆர்ச், பெயர் பலகை உள்ளிட்டவையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முகப்பில் இரண்டு காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்பிற்கு நிற்பது போன்று இரண்டு விநாயகரை நிற்க வைத்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தால் ஒரு விநாயகரே ரைட்டர் ஆக அமர்ந்துள்ளார் அவர் அங்கு வரும் பொதுமக்களிடம் புகாரை பெறுவது போன்று கையில் பேனா மற்றும் நோட்டோடு அமர்ந்துள்ளார். மேலும் இந்த காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் சிறைச்சாலை அமைத்து அதில் சுண்டெலியை கைதியாக்கி வைத்துள்ளனர். பரிதாபமாக சிறைச்சாலையின் கம்பியை பிடித்தவாறு நின்றிருக்கிறது அந்த சுண்டெலி. விநாயகரிடம் இருந்த லட்டை திருடியதால் இதன் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக தெரிவிக்கிறார்கள்.
நாள், கிழமை பாராமல் அயராது 24 மணி நேரமும் உழைத்து வரும் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடிவு செய்து காவல் நிலையம் போன்று வடிவமைத்து கொண்டாடி வருகின்றனர். மேலும் சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் போன்று விநாயகர் வடிவமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஆறுபடை வீட்டுக்கு மத்தியில் அமைந்துள்ளது போன்ற வடிவமைக்கப்பட்டுள்ளது.