ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்பொழுது இந்திய அணியின் முன்னாள் வீரர் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை மட்டுமல்லாது பஞ்சாப் ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்காகவும் அஸ்வின் விளையாடியுள்ளார். 2010, 2011 ஆம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை வென்ற சென்னை அணியில் அஸ்வின் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஓய்வு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒவ்வொரு முடிவும் ஒரு ஆரம்பம். ஐபிஎல் வீரனாக எனது நேரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. அனைத்து அழகான நினைவுகள் மற்றும் உறவுகளுக்காக ஐபிஎல் உரிமையாளர்களுக்கு மிக்க நன்றி. இதுவரை எனக்கு அளித்த வாய்ப்புகளுக்காக ஐபிஎல் நிர்வாகம் மற்றும் பிசிசிஐக்கு எனது நன்றி' என தெரிவித்துள்ள அஸ்வின், 'அதே நேரம் மற்ற நாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாடுவேன்'என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் தனது ஓய்வு அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.