முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
55 வயதுமிக்க கணவன் மனைவி இரண்டு பேருமே அரசு ஊழியர்கள். ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில், தனது கணவருக்கு 3 பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அதற்கு ஆதாரம் வேண்டும் எனவும் மனைவி என்னிடம் வந்து கூறினார். தற்போது மனைவி, கணவனோடு சண்டை போட்டுவிட்டு வெளியே தங்கி வருகிறார். வேறு பெண்களுடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க கணவன் சொல்லியதன் பேரில், இவர் என்னிடம் வந்துள்ளார். கணவன் தொடர்பில் இருந்த பெண்கள் 3 பேரும், தான் வசித்து வந்த பிளாட்டில் இருந்ததாகவும், அதில் இரண்டு பெண்கள் வேறு இடத்திற்கு சென்று விட்டதாகவும், அங்கு உள்ளே செல்வதற்கான வழிமுறையும் அவரே சொல்லிவிட்டார். அந்த பெண்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட 50,55 வயது இருக்கும் என்று சொன்னதை கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
அதனை தொடர்ந்து, இந்த வழக்கை கையில் எடுத்து மூன்றாவது பெண்ணை பின் தொடர்ந்தோம். ஒரு மாதம் கழித்து அந்த பெண்ணும் பிளாட்டை விட்டு வெளியேறிவிட்டார். பல நாட்கள் அந்த பெண்ணை பின் தொடர்ந்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஓய்வு பெற்று சந்தோஷமாக இருக்கும் காலத்தில் மனைவி, கணவன் மீது இப்படியான குற்றச்சாட்டை வைக்கிறாரே என்று மீண்டும் அவரிடம், நன்றாக விசாரித்தோம். கணவன் யாரிடமாவது பேசினால் கூட இவர் தவறுதலாக நினைத்திருக்கலாம் என்று விசாரித்தோம். அப்போதும் அதே குற்றச்சாட்டை மனைவி வைத்தார். அதன் பின்னர், 40 நாட்களாக கணவனைப் பற்றி துப்பு துலக்கினோம். அப்போதும் கூட, கணவன் அந்த பெண்களுடன் தொடர்பில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
அதன் பின்னர், மனைவியை அழைத்து நாங்கள் பார்த்தவரை உங்கள் கணவர் எந்தவித தொடர்பிலும் இல்லை, அதனால் அவரை தவறாக நினைக்காமல் அவர் கூட சேர்ந்து வாழுங்கள் என்று ஆலோசனை வழங்கினோம். நாங்கள் சொன்னதை கேட்டுக் கொண்டு அவரும், அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டார்.