இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் 2026 தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் மினி ஏலமும் டிசம்பர் 2025-ல் நடைபெற்றது. இதில் உள்நாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பாரபட்சம் இல்லாமல் வீரர்களை போட்டி போட்டுகொண்டு அணைத்து அணிகளும் வாங்கின. ஆனால் அதில் இப்போது ஒரு அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா அணி, வங்கதேச வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மானை 9.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் தற்போது அந்த வீரரை விடுவிக்கும்படி பிபிசிஐ நிர்வாகம் கொல்கத்தா அணிக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த வீரருக்கு பதிலாக மாற்று வீரரை ஒப்பந்தம் செய்துகொள்ளவும் அனுமதியளிக்கப்டும் எனவும் பிபிசிஇ தெரிவித்துள்ளது. 

Advertisment

வேகப்பந்து வீச்சாளரான முஸ்தாபிசுர் ரஹ்மான் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர். சிறந்த பந்து வீச்சாளரான இவர், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில், இவரை நீக்க உத்தரவிட்டிருப்பது கொல்கத்தா அணிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு தற்போதைய அரசியல் சூழல் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா  செய்தியாளரிடம் பேசுகையில், “வங்கதேசத்தின் சர்வதேச வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிக்குமாறு உரிமையாளர் அணிக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் மாற்று வீரரைக் கேட்டால், அந்த மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய பிசிசிஐ அனுமதிக்கும். தற்போதைய அரசியல் சூழ்நிலையின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது எதிர்வரும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக முன் கூட்டியே எடுக்கப்படும் நடவடிக்கை அவ்வளவு தான்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் அரசியல் ரீதியாகவும், கொல்கத்தாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் வங்கதேச வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் கௌஸ்தவ் பக்ஷி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, முஸ்தாபிசுர் சேர்க்கப்பட்டது தொடர்பான சர்ச்சை தீவிரமாக மாறியது. அவரது கருத்துக்களைத் தொடர்ந்து பல தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. சிலர் ஏலத்தில் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்த கே.கே.ஆர் அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான் மீதும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

Advertisment

இருப்பினும், அரசியல் ரீதியாக பிசிசிஐ க்கு நேரடியாக எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்றும், எதிர்வரும் காலத்தில் எந்தவித  சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் இது என்றும் பிசிசிஐ சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கதேசத்தில், இந்தியாவிற்கெதிரான பிரச்சாரங்களும், போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.