இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் டி20 தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி மோதியது. அப்போது, இந்திய கேப்டனும், பாகிஸ்தான் கேப்டனும் கை குலுக்க மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்காக கை குலுக்கவில்லை என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து சூப்பர் 4 சுற்று கடந்த 21ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதின. கடந்த லீக் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.
இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப், இந்திய அணியின் ரசிகர்களை பார்த்து ‘6-0’ என்று சைகை காட்டி கேலி செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரின் போது 6 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவதை பிரதிபலிக்கும் விதமாக ஹாரிஸ் ரவூப் 6-0 என்று சைகை காட்டி கேலி செய்ததாக கூறப்பட்டது. மேலும், விமானம் பறப்பது போல் காட்டியும் அதனை சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை காட்டி இந்திய அணி ரசிகர்களை அவர் கேலி செய்தார். அதே போல், பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அரை சதம் அடித்த போது துப்பாக்கி போன்று பிடித்து சுடுவதை போல் சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த இரண்டு காட்சிகளும் இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் அசெளகரியத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்தது.
இந்த நிலையில், மைதானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர்களான ஹாரிஸ் ரவூப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புகார் அளித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், ரசிகர்களை பார்த்து இது போன்று செயல்களில் ஈடுபடுவது என்பது விதிமுறைக்கு புறம்பானது. எனவே இவர்கள் இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.