குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
ஞானவேல் என்பவருடைய வழக்கு இது. கடந்த 2000 ம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இது இரண்டாவது திருமணம் அவருக்கு மட்டும் அல்ல அவரது மனைவிக்கும் சேர்த்து தான். இருப்பினும் நல்லபடியாக நடந்த இந்த திருமணத்தில் அவருக்கும் மகிழ்ச்சி தான். அவர் அவரது மனைவியின் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். மனைவியை வெளியில் அழைத்து செல்வது, அவருக்கு தேவையானவற்றை வாங்கித்தருவது என நல்லபடியாக மனைவியை பார்த்துக்கொண்டார். மேலும் அவர் தன் மனைவிக்கு 32 பவுன் தங்க நகையும் வாங்கிக் கொடுத்துள்ளார். குழந்தைகள் மீது அதீத பாசம் கொண்டிருந்தார். தனது முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டாவது மனைவியின் ஒரு குழந்தை என மூன்று குழந்தைளிடமும் அன்பாக இருந்தார். இந்த மூன்று குழந்தைகளையும் நாம் நல்லவிதமாக பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தன் மனையிடம் சொல்லியிருந்தார்.
இருப்பினும் இரண்டாவது மனைவிக்கு முதல் தாரத்தின் குழந்தைகளைப் பிடிக்காத காரணத்தினால், அந்த குழந்தைகளிடம் வெறுப்புடன் நடந்துகொள்வார். ஒருமுறை கணவர் பிள்ளைகளுக்கு படம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவர் திட்டினார். "அறிவு இருந்தால் அவர்கள் படித்து கொள்ளட்டும் நீங்கள் ஏன் சொல்லித்தருகிறீர்கள்" என கோவப்பட்டார். அதற்கு கணவர் நம் பிள்ளைகளுக்கு நாம் தானே சொல்லித்தரவேண்டும் என கூறினார். கடுப்பாகிய மனைவி இந்த பசங்க வந்தாலே ரொம்ப தொல்லையா இருக்கு எனக் கூறி அலுத்துக்கொண்டார். தொடர்ச்சியான குழந்தைகள் மீதான இந்த வெறுப்பு குழந்தைகளுக்கு புரிய ஆரம்பித்தையடுத்து, குழந்தைகள் தந்தையிடம் தாங்கள் பாட்டி வீட்டிலேயே இருந்து படிக்க விரும்புவதாக கூறுகின்றனர். ஆனால் தந்தை நீங்கள் நம் வீட்டிலேயே இருந்து படியுங்கள் என கூறிவிட்டார். இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நான்கைந்து ஆண்டுகளாக இந்த மனக்கசப்பு தீராத நிலையில், மனைவியின் செல்போனுக்கு அடிக்கடி கால் வருவதை கவனித்த கணவர், என்ன உன் போனுக்கு அடிக்கடி கால் வருதே என கேட்டார், சரி உனக்கு இனிமேல் போன் தேவையில்லை, நீ யார்கிட்ட பேசணும் அப்படினாலும் என் போன்லேயே பேசு எனக்கூறினார். அதனால் ஆத்திரமடைந்த மனைவி இதை சொல்ல நீங்க யாரு, நீங்க ஏன் இதையெல்லாம் கேக்குறீங்க என கத்தினார். இதற்கு கணவன் நான் சொல்லாமல் வேற யாரு சொல்வாங்க எனக்கூறினார். மீண்டும் ஒருநாள் மனைவியின் கையில் புதிய மொபைல் போன் இருப்பதைக்கண்ட கணவர், இந்த போன் எப்படி வந்தது என கேட்டார். மனைவி எப்படியோ வந்தது, போன் வாங்க என்கிட்டே காசு இருக்காதா ? இல்லையெனாலும் கைல இருக்கிற வளையலை வித்து கூட வாங்குவேன் அதையெல்லாம் உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார். இதைகேட்டு திகைத்துப்போன கணவர் எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்.
மனைவியின் போனுக்கு அடிக்கடி கால் வரும் நம்பரை எடுத்து, இது யாருடைய நம்பர் என கணவன் ஆராய்ந்ததில், அது அந்த பகுதியில் உள்ள முன்னாள் கவுன்சிலரின் நம்பர் என தெரிய வந்தது. பின்பு கவுன்சிலரும் மனைவியும் அடிக்கடி சந்திப்பது, அவர்கள் ஜோடியாக வெளியே செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறிந்த கணவன் மனைவியை இது போல நடந்துகொள்ள வேண்டாம் என கண்டிக்கிறார். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாத மனைவி, வழகக்கத்திற்கு மாறாக உடை அணிவது, கவுன்சிலருடன் வெளியே செல்வது என தொடர்ந்து நடக்கும் இந்த மோசமான செயல்களைக் கண்ட கணவரின் நண்பர்களும் அவரிடம் வந்து சொல்ல அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இதைப் பற்றி மனைவியிடம் கேட்டால் நீங்க பார்த்திங்களா எதுக்கு என்ன தேவையில்லாம கேள்வி கேக்குறீங்க என கோபமடைந்தார் மனைவி. எனவே மனைவிக்கு தெரியாமல் வீட்டில் கேமரா ஒன்றை வைத்தார். அதில் கவுன்சிலர் வருவது,அவர்கள் வெளியே செல்வது போன்ற அனைத்துக் கட்சிகளும் பதிவாகியிருந்தன.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்ற அவர் மனைவிடம் கையை ஓங்கிவிட்டார். பின்னர் ஒருநாள் குழந்தையுடன் மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அம்மா வீட்டிற்குத் தானே செல்கிறாள் என யதார்த்தமாக கணவன் விட்டுவிட்டார். பின்னர் அவரது மாமியார் வீட்டிற்கு கால் செய்து குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு குழந்தை உங்க வீட்டில் தானே இருக்கிறது எங்களிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டல் நாங்கள் என்ன சொல்வது என அவர்கள் கேட்டதால், அவள் அங்கே செல்லவில்லை என்பதை உணர்ந்த கணவன் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார் .
பின்னர் நேரடியாக கவுன்சிலரின் வீட்டிற்கு சென்று பார்த்த போது மனைவி அங்கே குழந்தையுடன் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு மனைவியை வா வீட்டிற்கு போகலாம் என அழைத்ததற்கு அவர் வர மறுத்துவிட்டார். பின்னர் கவுன்சிலரின் உறவினர்கள் இவரை அந்த வீட்டில் இருக்கக் கூடாது வெளியே போ என்று விரட்டியதால் கணவர் வந்துவிட்டார். பின்னாளில் மனைவி வீட்டிற்கு வந்து தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு கவுன்சிலரின் வீட்டிற்கே சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். பின்னாளில் தான் தெரியவருகிறது, அந்த கவுன்சிலர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் கவுன்சிலருக்கு பல வீடுகள் உள்ளது என்றும் அந்த வீடுகளில் ஒன்று தான் அவரின் மனைவி வாழும் இந்த வீடு என்பதும்.
எனவே மனம் வெறுத்துப்போன கணவர் விவகாரத்துக்காக 2009 ஆம் ஆண்டு வழக்கறிஞரை சந்திக்கிறார். இவரின் விருப்பத்துக்கேற்ப விவாகரத்து வழக்கை பதிவு செய்த வழக்கறிஞரிடம், விவாகரத்து மட்டுமல்ல எனது குழந்தைகளும் எனக்கு வேண்டும் எனக் கணவர் கூறினார். இதையறிந்த மனைவி முதல் தாரத்தின் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக்கொண்டார். இந்த வழக்கில் இரண்டு வாய்தா முடிந்து மூன்றாவது வாய்தாவில் அரசியல் அதிகாரத்தின் காரணமாக மனைவிக்கு சாதகமான ஒரு தீர்ப்பு வருகிறது . அதில் விவகாரத்துடன், மனைவிக்கு மாதம் 15000 தரவேண்டுமெனவும் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணத்தையும் கணவர் தர வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த வழக்கில் தனக்கான கால அவகாசம் தராமல், ஒரு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்டதால் மீண்டும் இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என கணவர் மனு அளித்தார். இந்த வழக்கின் போது மனைவி கணவனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார். இதனை கணவர் ஏற்கவில்லை. எனவே சில நபர்கள் இந்த வழக்கை சீக்கிரம் முடித்துவிடு இல்லை என்றால் உன் கடையை அடித்து நொறுக்கு விடுவோம் என அடிக்கடி மிரட்டி வந்தனர். வழக்கறிஞரை சந்தித்த கணவர் சிலர் இந்த வழக்கு சம்பந்தமாக என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறினார். பின்பு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பின்பு கவுன்சிலர் காவல்நிலையத்தில் எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறிவிட்டுச் சென்றார். பின்னர் நீண்ட நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கின் முடிவில் முதல் தாரத்தின் குழந்தைகள் கணவரிடம் வந்துவிட்டது. இரண்டாவது மனைவியின் குழந்தைக்கு, கணவர் தாமாக முன்வந்து பள்ளிக்கட்டணத்தை ஏற்றுக்கொள்வதோடு மனம் ஒத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/santhakumari-2026-01-10-10-34-30.jpeg)