Advertisment

அதிசயம் நிகழ்த்தும் சோழதரம் அங்காள பரமேஸ்வரி !

 solatharam angala parameswari temple

Advertisment

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்தி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அகிலத்தைப் படைத்த ஆதிசக்தி சிவனை கணவராக அடைந்தாள். அதனால்தான் 'சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்கிறோம். இருவரும் இணைந்தால்தான் உலக இயக்கமே நடைபெறும். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்ததுதான் சிவசக்தி. அதனால்தான் உலகம் சமநிலையுடன் இயங்கி வருகிறது.

உலகின் அடித்தளமே சக்தி வடிவமாய் அமைந்துள்ளது. உலகெங்கும் வாழும் அனைத்துயிர்களுக்கும் உயிர் கொடுத்து வாழ வைப்பது சக்தி. மனிதர்கள், 'நான் அதைச் செய்தேன் இதைச் செய்தேன்; அதை சாதித்தேன் இதை சாதித்தேன்; உழைத்தேன் உயர்ந்தேன்' என்று பேசுவதைக் காண்கிறோம். ஆனால் அப்படிச் செய்ய ஊக்கப்படுத்துவது சக்திதான் என்பதைப் பலரும் அறிவதில்லை. யோகம், தியானம், இறை வழிபாடு என ஆன்மீகப் பாதையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்குத் தங்களை இயக்குவது சக்தியென்பது புலப்படும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களையும் செய்து வரும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருமே ஆதிசக்தியின் அம்சமாகவே கருதப்படுகின்றனர்.

ஒவ்வொரு மனித உடலும் சக்தியால் தான் இயங்குகிறது. உடலை விட்டு சக்தி வெளியேறிவிட்டால் உடல் சவமாகி விடுகிறது. எனவேதான் ஆதிசக்தி வடிவமான பெண் தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். ஒரு குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரும் மிகுந்த மரியாதையளிப்பார்கள். அந்தக் குடும்பத்தில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும், பிறந்த வீட்டுப் பெண்ணை வேறிடத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கூட அவர்களை வரவழைத்து குடும்ப நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கச் சொல்வார்கள். திருமணச் சடங்கு நடைபெறும்போது மணமக்களுக்குப் பின்புறம் கையில் விளக்கேந்தி பிறந்த வீட்டுப் பெண் நின்றிருப்பாள். இப்படித்தங்கள் வீட்டில் பிறந்த பெண்ணை முதல் தெய்வமாக முன்னிருத்தி வருகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களை சக்தி வடிவமாகப் பார்ப்பதுதான்.

Advertisment

ஆதிசக்தி அநீதிகளைச் செய்யும் அரக்கர்களை அழிக்க பல்வேறு உருவங்களில் தோன்றியுள்ளாள். அப்படிப்பட்ட பராசக்தியை அங்காளம்மன், மகிஷாசுரமர்த்தினி, துர்க்கை, காளி, மாரியம்மன், எல்லையம்மன், பிடாரியம்மன், சுடலையம்மன், அகிலாண்டேஸ்வரி, கருமாரியம்மன், வெக்காளியம்மன் எனப் பல்வேறு வடிவங்களில்,பெயர்களில் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பொதுவாக ஆதிசக்தி பீடங்கள் 108 என்பார்கள். ஆனால் அதையும் தாண்டி தமிழகமெங்கும் அம்மனுக்குப் பல்வேறு பெயர்களில் கோவில்கள் உள்ளன. மலேசியா, மியான்மர் போன்ற கடல் கடந்த நாடுகளிலும் அம்மன் கோவில்கொண்டு பக்தர்களைக் காத்து வருகிறாள்.

ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர் வழிபட்டு வந்த கோவில்கள்பல்வேறு அரசர்கள் நாடு பிடிக்கும் ஆசையால் படையெடுத்துச்சென்று போர் நடத்தியதன் காரணமாகவும், பூகம்பம் போன்ற பேரழிவுகளாலும் பல கோவில்கள் அழிந்து போயின; பூமிக்குள் புதையுண்டன. அப்படிப்பட்ட கோவில்களில் இருந்த தெய்வங்கள் தங்களை எப்போது வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் - தங்களை மக்கள் வழிபட வேண்டுமென்று எண்ணுகிறார்களோ, அப்போது அவர்கள் மக்களின் பார்வைக்கு வெளிப்பட்டே தீருவார்கள். பல்வேறு பணிகளுக்காக மக்கள் நிலத்தைத் தோண்டும்போது தெய்வச் சிலைகள் பூமியிலிருந்து கிடைக்கப்பெற்று கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப்படித்தான் அங்காள பரமேஸ்வரியம்மன் பூமிக்குள்ளிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டுள்ளாள். கடலூர் மாவட்டம், சோழதரம் என்னும் ஊரில் இந்த அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

இந்த ஊரின் மையப் பகுதியில் பூமிக்குள் புதையுண்டும், செடி கொடிகளில் சிக்குண்டும் கிடந்த தெய்வங்களை வெளியே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து, சிறிய அளவில் கோவில் எழுப்பி வழிபாடு நடத்தி வருகிறார் பெரியவர் ஜெயராம கொண்டியார். அதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது "ஆதிமனிதன் கல்லையெடுத்து வேட்டையாடினான். அடுத்த மனிதன் காட்டையழித்து ஊராக்கி, தான் வாழ்ந்த இடத்தில் கோவிலைக் கட்டினான்.

 solatharam angala parameswari temple

அந்த தெய்வங்களுக்கு விழா எடுத்தார்கள். தாலாட்டு பாடினார்கள். கொண்டாடினார்கள். அப்படிப்பட்ட தெய்வங்களில் ஒன்றான அங்காள பரமேஸ்வரி இந்த ஊரில் கோவில் கொண்டிருந்திருக்கிறாள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் ஒன்று இப்பகுதியில் புதையுண்டு கிடந்துள்ளது. இங்கு பூமிக்கடியில் தெய்வங்கள் இருப்பது எனக்குத் தெரிய வந்ததே ஒரு அதிசயம்.

சில ஆண்டுகளுக்குமுன்பு என் கனவில் செவ்வாடை கட்டி அம்மன் உருவில் வந்த பெண் ஒருவர், 'இந்த இடத்தில் பூமிக்கடியில் புதையுண்டு கிடக்கும் என்னையெடுத்து வழிபாடு செய்; உன்னையும் எம்மை வணங்கும் மக்களையும் பாதுகாப்பேன்' என்று கூறிவிட்டு மறைந்தார். அது கனவா நனவா என புரியாமல் தவித்தேன். கனவில் அம்மன் கூறியபடி இந்த இடத்திற்கு வந்தேன். பாழடைந்து புதர் மண்டிக்கிடந்த இடத்தை எந்திரம் கொண்டு தூய்மை செய்யும்போது, கனவில் அம்மன் கூறியபடியே தெய்வங்களின் சிலைகள் கிடைத்தன. அவற்றை ஓரிடத்தில் வைத்துப் பிரதிஷ்டை செய்தேன். பல்வேறு தொந்தரவுகளுக்கு இடையிலும் தெய்வச் சிலைகளைப் பாதுகாத்தேன். வெளிச்சமில்லாமல் இரவு நேரத்தில் படுத்திருந்தபோது என் மீது பாம்புகள் ஊர்ந்து சென்றன. தேள், பூரான் போன்ற விஷ ஜந்துகள் நடமாடின. அவற்றிடமிருந்து அங்காளம்மன் கருணையால் உயிர்பிழைத்தேன்.

இப்படி கடும் சிரமத்துக்கிடையே இந்த தெய்வங்களை ஒருசேர அமைத்து, ஊர்மக்களின் உதவியோடும், குலதெய்வமாக வழிபடும் குடும்பத்தினரின் ஆதரவோடும் வழிபாடு நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் அம்மனின் அருளால் இந்தக் கோவிலை நவீனப்படுத்துவார்கள். அவர்களுக்கு அன்னை அங்காள பரமேஸ்வரி அதற்கான சக்தியைக் கொடுப்பார்.

அங்காள பரமேஸ்வரிக்கு பரிவார தெய்வங்களாக பாவாடைராயன், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரசாமி, பேச்சியம்மன், குழந்தையம்மன், பொம்மியம்மா ஆகிய தெய்வங்கள் வெளிப்பட்டன. அவர்களே இங்கு கோவில் கொண்டுள்ளனர். அங்காள அம்மனின் அருளைத் தெரிந்துகொண்ட பக்தர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவதோடு, அம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடைபெறுவதற்கும், அமாவாசை, பௌர்ணமி பூஜைகளின்போது அன்னதானம் வழங்கவும் உதவிகளைச் செய்துவருகிறார்கள். எந்தவொரு தெய்வமும் பக்தர்களைக் காக்க யார் மூலமாகவோ தங்களை வெளிப்படுத்தியே தீருவார்கள். அப்படிதான் இங்குள்ள அங்காள பரமேஸ்வரியும் அவரது துணை தெய்வங்களும் தோன்றியுள்ளனர்'' என்றார்.

இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனை குலதெய்வமாக வழிபடும் வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ரங்கநாதன், "இந்த அம்மனை குலதெய்வமாக வழிபட்டுவந்த எங்கள் முன்னோர்கள் சோழநாட்டின் மையப் பகுதியிலுள்ள இந்த ஊரில் வாழ்ந்து வந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு சோழமாநகரம் என்று பெயர் இருந்தது. காலப்போக்கில் மருவி சோழதரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வாழ்ந்த எங்களது முன்னோர்கள் காலத்தில், சோழநாட்டின்மீது அந்நியர் படையெடுப்பால் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். அப்படிச் சென்றவர்கள் மேலத்தத்தூர், திருமூலஸ்தானம், பொய்யூர், பொன்னன் கோவில், வலசக்காடு, நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருச்சி, கடலூர், சிதம்பரம் என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த காலங்களில் எங்கள் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரியை வழிபட முடியாமல் தவித்துவந்தனர்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் எங்கேயோ இருந்த ஜெயராமன் கொண்டியார் கனவில் அம்மன் தோன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அப்போது முதல் குலதெய்வ வழிபாடு செய்யும் எங்களது வம்சாவளியினர் பல்வேறு ஊர்களிலிருந்தும் இங்குவந்து அம்மனையும் அவரது பரிவார தெய்வங்களையும் வழிபட்டுச் செல்கிறார்கள். இந்த தெய்வங்களுக்கு ஒரு கோவில் எழுப்பி அதில் புதிதாகப் பிரதிஷ்டை செய்ய முயற்சித்து வருகிறோம்.

இங்குள்ள தெய்வங்களை வழிபடுவோருக்கு இடர்கள், சிக்கல்கள் அனைத்தும் சிதறியோடும். திருமணத்தடை உள்ளவர்கள் திருமணமாகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். மகப்பேறில்லாத தம்பதிகள் அம்மனை வழிபட்டு குழந்தைப் பேறு கிடைத்துள்ளது. பல்வேறு மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துவைத்துள்ளார் அங்காளம்மன்'' என்றார். பொதுவாக தெய்வங்களை "மூர்த்தி பெரிதா கீர்த்தி பெரிதா' என்பார்கள். இங்குள்ள அம்மனின் கீர்த்தி மிகப்பெரிய அளவில் பக்தர்களிடையே பரவிவருகிறது.

அமைவிடம்: விக்கிரவாண்டி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாத்தோப்பு உள்ளது. அங்கிருந்து தெற்கே சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் சோழதரம் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகில் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது.

aanmeegam temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe