Advertisment

எல்லா மதத்தினரும் வழிபடும் தேவஸ்தான பொடையூர் ‘பசுபதீஸ்வரர்’!

Pashupatiswara is worshiped by all religions

எல்லா மதத்தினரும் அவரவர் வழிபாட்டு முறைகளைக் கொண்டு இறைவனை வழிபடுகிறார்கள். ஆனால் இறைவன் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை உறுதி செய்து வருகிறார். தேவஸ்தான பொடையூரில் கோவில் கொண்டுள்ள பசுபதீஸ்வரர். உலக உயிர்களைக் காக்கும் இறைவன் சிவலிங்க வடிவிலே தான் கோவில்களில் குடிகொண்டுள்ளார். சில கோவில்களில் விதிவிலக்காக இருக்கலாம். இங்கு எப்படி உருவானார் என்பதைப் பார்ப்போம்.

Advertisment

முற்காலத்தில் இப்பகுதி முட்கள் நிறைந்த சங்கஞ்செடிகள் நிறைந்த காடாக இருந்துள்ளது. அப்போது இங்கு இடையர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் நிறைய பசுக்களைக் கொண்ட பண்ணை வைத்திருந்தார். அந்த பசுக்களை இந்த சங்கங்காட்டிற்குத்தான் மேய்ச்சலுக்கு ஓட்டி வருவார். அவற்றுள் வெண்மை நிறம் கொண்ட பசுவொன்று கன்று ஈன்றது. ஆனால் அது கன்றுக்குப் பால் கொடுக்காமல் உதைத்துக்கொண்டே இருந்தது. அந்த இடையனுக்கு கோபம். தினசரி பசு இப்படியே செய்தது. மேய்ச்சலுக்குப் போகும் பசுக்கள் மடி நிறைய பாலோடு வரும். இந்த பசு மட்டும் மடி வற்றியே வந்தபடி இருந்தது. ஒருநாள் மேய்ச்சலுக்குப் போனபோது இடையன் அந்தப் பசுவை மட்டும் கண்காணித்தபடியே இருந்தான்.

Advertisment

அந்தப் பசு மட்டும் சங்கஞ்செடி நிறைந்த புதர்ப் பகுதிக்குள் சென்று மடியிலிருக்கும் பாலை கீழே சொரிந்தது. இதைக் கண்ட இடையன் கன்றுக்குக் கூட பால் தராமல் மண் தரையில் பால் சொரிவதைக் கண்டு கோபமுற்று, கீழே கிடந்த கற்களை எடுத்து பசு மீது எறிந்தான். கல்லடி பட்ட போதும் அது நகராமல் அங்கேயே நின்று பாலைச் சொரிந்த வண்ணமிருந்தது. மேலும் கோபமுற்ற இடையன் கையில் இருந்த தடியால் பசுவை அடிக்கப் பாய்ந்தான். பசு பயந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. அங்கே பால் சொரிந்த இடத்தில் பால் பட்டு மண் கரைந்து ஒரு சிவலிங்கம் தானே தோன்றியது. அந்த லிங்கத்தின் மீது இடையனின் கல்பட்டு ஏற்பட்ட காயங்கள் இருந்தன. (இப்போதும் சிவலிங்கம் கல்லடிபட்ட வடுக்களோடுதான் காட்சி தருகிறது. இதைக் கண்ட இடையன் அதிர்ச்சியடைந்தான். அதே நேரம், "அடேய் மனிதா... பசு என் மீது பால் சொரிந்து எம்மை இந்த உலகுக்கு வெளிக்காட்டவே இப்படிச் செய்தோம். அப்படிப்பட்ட பசுவை அடித்ததால் உன் பார்வை பறிபோகும்' என்றது ஒரு குரல். மறுகணம் இடையனின் பார்வை பறிபோனது. கதறியழுத இடையன், ‘அய்யனே, நான் அறியாமல் செய்த தவறு. இதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று வருந்தினான்.

அப்போது அசரீரி வாக்கு, ‘இந்த இடத்தில் எனக்கொரு ஆலயம் எழுப்பினால் உனக்கு பார்வை மீண்டும் கிடைக்கும்' என்றது. அதன்படி இடையன் இறைவனுக்குக் கோவில் எழுப்பினான். அவனது பார்வை மீண்டும் கிடைத்தது. அப்படிப்பட்ட இறைவனுக்கு பசுபதீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி என்றும் பெயர் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகள் பழமையான இவ்வாலயத்தை பல மன்னர்கள் அவ்வப்போது திருப்பணி செய்து முழுமையான கோவிலாக அமைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலேயே முதன்முதலாக தேர் செய்து சுவாமி வீதியுலா வந்த ஊர் இது. இந்த ஆலயம் மீண்டும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. இதைச் செப்பனிட்டுப் புதுப்பிக்க ஊர் மக்கள் முயற்சி செய்து வந்தனர்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த முஸ்லீம் கோழி வியாபாரி ஒருவர் காலையில் ஊர் ஊராகச் சென்று ‘கோழி இருக்கா... கோழி' என்று கூவி கோழி வியாபாரம் செய்பவர். முன்னிரவு நேரத்தில் இந்த ஊருக்கு சைக்கிளில் கோழிக் கூண்டோடு வருவார். அதிகாலை வரை இவ்வாலயம் அருகே படுத்துக்கொள்வார். காலை கோழி கூவும் நேரத்தில் இந்த ஆலய இறைவனை தம்மை அறியாமலேயே கும்பிட்டு, ‘இறைவா, இன்று வியாபாரம் பெருகி பணம் கிடைக்க அருள் செய்' என வேண்டிக் கொண்டு செல்வார். அந்த முஸ்லீம் கோழி வியாபாரி சகல வசதிகளும் பெற்றார். இதற்குக் காரணம் இவ்வாலய இறைவனே என உணர்ந்து, கோவிலுக்கு விளக்கெரிக்க எண்ணெய் உட்பட பல பெருட்களை வாங்கிக் கொடுத்து வந்தார். அதுமட்டுமா; சிதிலமடைந்து வரும் ஆலயத்தைப் புனரமைக்குமாறு ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து அடிக்கடி கோரிக்கை வைத்துள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவரே இறைவனின் அருமை பெருமையை உணர்ந்து, கோவிலுக்குத் தொண்டு செய்வதைக் கண்டு ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிறகென்ன... ஊர் கூடி கோவிலைத் தூய்மை செய்தனர். கோவில் திருப்பணிக் குழு அமைத்தனர். முஸ்லீம் வியாபாரியின் ஆதரவோடு பொருளுதவியும் செய்ய, இவர்களுக்கு உறுதுணையாக விருத்தாசலம் ஏகநாதர் கோவில் வழிபாட்டு மன்றமும் பெரும் பொருளுதவி செய்துள்ளது. சிவனடியார் போன்றோர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கோவில் புனரமைப்பில் ஈடுபட்டனர். ஊர் மக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்இக்கோவிலைப் புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற விருத்தாசலம் ஏகநாதர் வார வழிபாட்டு மன்றத் தலைவரும் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளருமான அகர்சந்த் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார் என ஊர்மக்கள் மனமகிழ்வோடு பாராட்டுகிறார்கள்.

ஆலயம் அமைந்துள்ள ஊருக்கு தேவஸ்தான பொடையூர் என எப்படி பெயர் வந்தது?தேவர்கள் படை படையாக வந்து இவ்வாலய இறைவனை வழிபட்டுச் சென்றனராம். அதனால் தேவர்கள் படையூர் என்றாகி, காலப்போக்கில் தேவஸ்தான பொடையூர் என்று அழைக்கப்படுகிறது. மன்னர்கள் காலத்தில் ஆங்காங்கே தேவஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊரில் தேவஸ்தானம் அமைக்கப்பட்டதால் தேவஸ்தான பொடையூர் என்று பெயர் உருவாகியுள்ளது என்றும் சொல்கிறார்கள் ஊர்மக்கள். இங்கு இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர் என மூன்று மதத்தினரும் வந்து வழிபடுகிறார்கள்.

ஆலயத்தில் பசுபதீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி தனிச் சந்நிதியில் அருள்கின்றனர். கம்பத்து விநாயகர், ஆறு முகம் கொண்ட முருகன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள், திருமால், நாகலிங்கேஸ்வரர், நடன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.

‘கண் பார்வைக் கோளாறு உள்ளவர்கள் இவ்வாலய இறைவனை வழிபட்டால் பார்வை சரியாகிறது. விநாயகர் சதுர்த்தியன்று வந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய காரியங்களை வெற்றியாக்கித் தருகிறார் கம்பத்து விநாயகர். வள்ளி, தெய்வானையுடன் உள்ள ஆறுமுகக் கடவுளை வழிபடும் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறுகிறது. அகிலாண்டேஸ்வரியை ஆடி வெள்ளிக் கிழமைகளில் வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கிறது. தலவிருட்சமாக வன்னி மரம் உள்ளது' என்கிறார் இவ்வாலய அர்ச்சகர் ஸ்ரீராம்குமார் சர்மா. மேலும், மாத சிவராத்திரியின்போது இவ்வாலய இறைவனை வில்வ இலை கொண்டு பூஜை செய்பவர்கள் சகல நலமும் பெறுகிறார்கள் என்கிறார் அர்ச்சகர்.

அமைவிடம்: சேலம் - கடலூர் சாலையில், விருத்தாசலத்திலிருந்து மேற்கே 12 கிலோ மீட்டரிலும்; வேப்பூரிலிருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது கண்டப்பங்குறிச்சி. இங்கிருந்து தெற்கே இரண்டு கிலோமீட்டரில் உள்ளது.

aanmeegam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe