Skip to main content

இந்த ஊரில் காலம்காலமாக யாருமே புகைப்பிடிப்பதில்லை…

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

பொத்தப்பி நாடு வேடர்கள் நிறைந்த மலைநாடு. அங்கு வேடர்குலத் தலைவன் நாகனும் அவன் மனைவி தத்தையும் மலைகிராமமான உடுப்பூரில் வாழ்ந்தனர். அவர்களுக்கு நீண்டகாலமாக மகப்பேறில்லை. அவர்கள் குலப்பெண்ணான வள்ளியின் மணாளன் முருகன் என்பதால், அவனை குலதெய்வமாக வணங்குபவர்கள்.அந்த முருகனிடம் அவர்கள் மனமுருகி வேண்ட, அவனருளால் அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு திண்ணப்பன் என்று பெயர் வைத்து, பாராட்டி சீராட்டி வளர்த்தனர். அவன் வளரவளர அவனுக்கு வேட்டைப் பயிற்சி, வேல், வாள் போன்ற பயிற்சிகள் என சகலமும் கற்றுக்கொடுத்தனர். அவனது தந்தை நாகனுக்கு வயது முதிர்ச்சியடைந்ததையடுத்து, திண்ணப்பனையே வேடர்குலத் தலைவனாக நியமித்தனர். தினசரி தன் ஆட்களுடன் சென்று காடுகளில் பன்றி, மான் முதலிய விலங்குகளை வேட்டையாடிக் கொண்டுபோய் மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து, வேடர்குலத் தலைவன் என்பதை நிரூபித்தான் திண்ணப்பன். வழக்கப்படி ஒருநாள் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற திண்ணப்பன் மிகப்பெரிய காட்டுப்பன்றியை வேட்டையாடிக்கொண்டு புறப்படும்போது நாவறட்சிக்கு தண்ணீர் தேடினர்.
 

temple

வனத்தில் ஓடிய பொன்முகலியாற்றில் நீரை முகந்து குடித்தனர். அதனருகே திருக்காளத்தி மலையின் அழகிய சோலையில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டிருந்த திண்ணப்பனுக்கு, இப்போது அங்கே செல்ல மனம் விரும்பியது. இனம்புரியாத காந்தம் போன்ற ஈர்ப்பில் எம்பெருமானைக் காண காளத்திமலைமீது ஏறினான் திண்ணப்பன். வேட்டையாடும் கொலைத் தொழில்புரியும் இனத்தில் பிறந்திருந்தாலும்கூட, முற்பிறவியில் அவன் செய்த நற்பலன் இறைவன் இருக்குமிடம் நாடிச்செல்ல வைத்தது. இந்த நிலையில் சிவகோசரியார் எனும் ஒரு தவமுனிவர், காலையில் பொன்முகலி நதியிலிருந்து நீர் கொண்டுபோய் சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்து, காட்டுப்பழங்கள், பூக்களைப் பறித்து சமர்ப்பித்து தான் கொண்டுபோன பொங்கலைப் படையலிட்டு வழிபாடு செய்துவிட்டுத் திரும்புவார். இது அவரது தினசரி பணி. முனிவர் பூஜை முடித்துச்சென்ற பிறகுதான் திண்ணப்பன் மலையேறி சிவலிங்கத்தைக் கண்டான். இனம்புரியாத ஆனந்தம் பெருகியது. வெட்டவெளியில் லிங்கம் இருப்பதைக்கண்டு, "இறைவன் வெயிலிலும் மழையிலும் கிடப்பதா... துணையாக யாருமில்லையே' என்று கண்ணீர்விட்டுக் கதறினான்.

முன்பு முனிவர் படையலிட்டிருந்ததைப் பார்த்து, "இது என்ன அலங்கோலம்' என்று கருதி அவற்றை அப்புறப்படுத்தினான். மலையிலிருந்து வேகமாக இறங்கிஓடி, பொன்முகலி நதிக்கரையில் தான் வேட்டையாடிப் போட்டிருந்த பன்றியின் சுவையான பகுதிகளைச் சுட்டு வேகவைத்தான். சுவையுள்ளதா என்று மென்று பார்த்து, அதை எடுத்து இலைகளில் வைத்துக் கொண்டான். இறைவனைக் கழுவி சுத்தம் செய்ய பாத்திரங்கள் இல்லாததால், தன் வாய்நிறைய நீரை நிரப்பிக்கொண்டான். இறைவனை அலங்கரிக்க காட்டுப் பூக்களைப் பறித்துத் தன் தலையில் செருகிக்கொண்டு, மீண்டும் வேகமாக மலை ஏறினான். தன் வாயில் நிரப்பிய நீரால் இறைவனைக் கழுவினான். தலையில் கொண்டுவந்த மலர்களை எடுத்து அலங்கரித்தான். தான் ருசிபார்த்த பன்றி இறைச்சித்துண்டுகளை படையலிட்டான். இறைவனைத் தொழுதான்; கட்டிக்கொண்டு அழுதான். நடந்தவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்த அவனது நண்பர்கள், "என்னாச்சு நம் தலைவனுக்கு' என வியந்தனர்.பூஜை முடிந்ததும் திண்ணப்பனிடம், ""இனி ஊருக்குப் போகலாம். பொழுதும் சாய்ந்துவிட்டது. அப்பா, அம்மா, மனைவி, மக்கள் எல்லாரும் நமக்காகக் காத்திருப்பார்கள்'' என்று திண்ணப்பனை அழைத்தனர். "நான் இனி இங்கிருந்து வரமாட்டேன். இறைவன் யார் துணையும் இல்லாமல் உள்ளார். இந்த காட்டுப் பகுதியில் விலங்குகளால் இறைவனுக்கு ஆபத்து வரும். அவரைத் தனியாக விட்டுவிட்டு வரமாட்டேன்'' என்று திண்ணப்பன் உறுதியாகச் சொல்லிவிட்டான். வேறுவழியின்றி அவனது நண்பர்கள் ஊருக்குச் சென்று அவனது பெற்றோரிடம் விவரத்தைச் சொல்ல, மறுநாளே வந்து மகனை அழைத்தனர். பெற்றோர் அழைத்தும் போகமறுத்த திண்ணப்பன், தினசரி காட்டு விலங்குகளை வேட்டையாடி சுட்டு அதனை இறைவனுக்குப் படையலிட்டு வழிபட்டு வந்தான். காட்டுக் கொடிகளால் பந்தல்போட்டு இறைவனைப் பாதுகாத்து வந்தான்.

இப்படி தினசரி திண்ணப்பன் இறைவனின் பூஜைக்கு வேட்டையாடப் போகும் நேரம் முனிவர் வந்து பார்த்து, "இது என்ன அபச்சாரம். மாமிசத்தை இறைவனுக்குப் படையலிடுவதா? யார் இதுபோன்று செய்தது' என்று அதை அப்புறப்படுத்திவிட்டு தமது பொங்கலை வைத்து வழிபடுவார். அவர் சென்றபிறகு தனது பூஜைப்பொருட்களோடு வரும் திண்ணப்பன், "இது என்ன படையல்' என்று அப்புறப்படுத்தி "யார் இப்படிச் செய்தது' என்று கோபப்படுவான்.இப்படி தினசரி வேடன் திண்ணப்பனும் முனிவரும் அவரவர் வழிமுறைப்படி மாறிமாறிப் பூஜைசெய்து வந்தனர். காற்று, மழை, இடி, மின்னல் என கொட்டிய போதும் திண்ணப்பன் இரவு பகல் பாராமல் இறைவனைப் பாதுகாத்துப் பூஜை செய்துவந்தான். நாட்கள் கடந்தன. ஒரு நாள் இரவு முனிவர் உறங்கும்போது இறைவன் அவர் கனவில் தோன்றி, "வேடன் செய்யும் கள்ளங்கபடமற்ற பூஜையில் உண்மையன்பு உள்ளதால் அதை ஏற்றுக்கொள்கிறேன். அவனது அளப்பரிய அன்பு எத்தகையது என்பதை நாளை காலை மறைந்திருந்து பாருங்கள்' என்று சொல்லி மறைந்தார்.

temple 1

மறுநாள் முனிவர் வழக்கம்போல மலைக்குச்சென்று திண்ணப்பனின் பூஜையை அப்புறப்படுத்திவிட்டு, தமது பூஜைகளைச் செய்துவிட்டு புதரில் மறைந்துகொண்டார். சிறிது நேரத்தில் திண்ணப்பன் வாயில் நீரோடும், தலையில் காட்டுப் பூக்களோடும் கையில் வாட்டப்பட்ட மாமிசங்களோடும் லிங்கத்திருமேனி முன்பு வந்து நின்றான்.அப்போது லிங்கத்தின் கண் போன்ற பகுதியிலிருந்து ரத்தம் வழிய, அதைக்கண்டு பதறித்துடித்தான் திண்ணப்பன். பூஜைப் பொருட்களையெல்லாம் போட்டுவிட்டு ஓடிவந்து ரத்தம் வழிவதைத் துடைத்தான். ஆனால் ரத்தம் வழிவது நிற்கவே இல்லை. பலமுறை முயற்சி செய்தும் நிறுத்த முடியவில்லை. பதட்டத்துடன் யோசித்த திண்ணப்பன், தன் கூரிய வாளால் தனது ஒரு கண்ணைத் தோண்டியெடுத்து ரத்தம் வழிந்த பகுதியில் வைத்து அழுத்தினான். என்ன அதிசயம்! ரத்தம் வழிவது நின்றது. ஆனால், அதன் பக்கத்திலேயே மீண்டும் ரத்தம் வழியத் தொடங்கியது. அதை நிறுத்த வேண்டுமானால் தனது இன்னொரு கண்ணையும் தோண்டி வைக்க வேண்டும் என்று எண்ணிய திண்ணப்பன், அடையாளத்திற்காக தனது கால் பெருவிரலால் ரத்தம் வழியும் இடத்தை அழுத்திக்கொண்டு வாளால் தனது இன்னொரு கண்ணையும் தோண்டப் போனான்.

பக்தனின் தன்னலமில்லாத அன்பையும் பக்தியையும் கண்ட இறைவன், "கண்ணப்பா, நிறுத்து' என்றார். அதோடு தமது திருக்கரங்களால கண்ணைத் தோண்டப்போன கண்ணப்பனின் கைகளையும் பிடித்துத் தடுத்தார். அங்கே கண்ணப்பனுக்கு தமது வெள்ளெருது வாகனத்தில் காட்சி கொடுத்து அருள் வழங்கினார் இறைவன். இந்த காட்சிகளைக் கண்ட முனிவர் இறைவனையும் திண்ணப்பனின் பக்தியையும் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர். அப்போதுமுதல் திண்ணப்பன் கண்ணப்பர் என அழைக்கப்பட்டான்.
வேடர்குலத் தலைவர் கண்ணப்பர் வழிபட்ட ஈசனே திருக்காளத்திமலை மீதுள்ள திருக்காளத்தீஸ்வரர். இவருக்கு மேற்கே மகாவிஷ்ணு திருப்பதி மலைமீது வேங்கடேசப்பெருமாளாக அருளாசி வழங்கிவருகிறார். பக்தர்கள் இரண்டு கோவில்களுக்கும் ஒரேநாளில் சென்று தரிசித்து வருகிறார்கள். அந்த தெய்வங்களின் பெயர்களோடு ஏழு செம்பொன் என்னும் ஊரில், ஊருக்கு மேற்கில் தென்திருவேங்கடப் பெருமாள் என்ற பெயரோடு மகாவிஷ்ணு கோவில் கொண்டுள்ளார். ஊருக்கு கீழ்ப்பகுதியில் தென்திருக்காளத்தீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் உள்ளது ஏழு செம்பொன் கிராமம். சுமார் 5000 மக்கள் வாழும் இந்த ஊர் கற்றோர்கள் அதிகம் வாழும் ஊர்களில் ஒன்று. இந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்த காரணத்தை ஊர் முக்கியஸ்தர்களான பெரியவர் சக்கரவர்த்தி கலியபெருமாள், சுப்பிரமணியன், பாண்டுரங்கன், பன்னீர்செல்வம், துளசிதாஸ் அய்யப்பன் ஆகியோர் கூறினார்கள்.

""எங்கள் ஊரைத் தலைநகராகக்கொண்டு ஏழிசை மோகன் என்ற சிற்றரசன் சிறப்பாக ஆட்சிசெய்துள்ளார். அவர் காலத்திற்கு முன்பே இங்கு பெரிய சிவாலயம், பெருமாள் ஆலயங்கள் இருந்துள்ளன. மோகன் மிகுந்த இசைப்புலமை பெற்றவர். ஏழுசுரங்களையும் இசைக்கக்கூடியவர். மற்றவர்களையும் பாடச்சொல்லி ரசித்துக்கேட்பவர். ஏழிசை மோகன் என்னும் அவரது பெயரே ஊருக்கு அமைந்து, காலப்போக்கில் அது மருவி ஏழு செம்பொன் என்று ஆனதாக எங்கள் முன்னோர் சொல்லியுள்ளனர். இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இங்குள்ள விஷ்ணு, சிவாலயங்கள் முஸ்லிம்கள் படையெடுப்பின்போது சிதிலமாக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு அவ்வளவு பெரிய கோவிலை எடுத்துக்கட்ட முடியவில்லை. அந்த கோவில்களுக்கு அடியில் ஏழு செம்பொன்னாலான குடங்களில் புதையல் இருப்பதாக அந்தக்காலம் முதல் சொல்லிவருகிறார்கள். அதனால் இந்த ஊருக்கு ஏழு செம்பொன் என்று பெயர் உள்ளதாக செவிவழித் தகவல்களும் உள்ளன. அப்படிப்பட்ட பாரம்பரியப் பெருமைமிக்க பெருமாள் ஆலயத்தைப் புதுப்பித்துக்கட்டி கும்பாபிஷேகம் நடத்தி முறையான வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதேபோல சிவாலயத்தையும் புதுப்பித்து எழுப்ப ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து முயற்சி செய்து வருகிறோம். பல தடைகள் ஏற்பட்டுவருகின்றன. அந்த எம்பெருமானே எங்களுக்கு வழிகாட்டி, ஆலயம் எழுப்ப உதவிட வேண்டும்'' என்கிறார்கள் மேற்கண்ட ஊர் முக்கியஸ்தர்கள்.

ஏழு செம்பொன் இந்திய கிராமங்களுக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது. ஆம்; இந்த ஊரில் காலம்காலமாக யாருமே புகைப்பிடிப்பதில்லை. ஊருக்குள்வரும் வெளியாட்களும் புகைக்கமாட்டார்கள். ஊருக்குள் எப்படிப்பட்ட அதிகாரிகள் வந்தாலும் ஊரின் கட்டுப்பாட்டைக் கேள்விப்பட்டு அவர்களும் புகைக்கமாட்டார்கள்.அப்படிப்பட்ட ஊரில்தான் விநாயகர், திரௌபதையம்மன், மாரியம்மன், சிவன், பெருமாள், காளியம்மன், முருகன் என அனைத்து தெய்வங்களும் தனித்தனியாகக் கோவில் கொண்டுள்ளனர். தென்திருக்காளத்தீஸ்வரருக்கு ஆலயம் எழுப்பத் தயாராகிவருகிறார்கள் ஊர்மக்கள். இறைத்தூய்மை, புறத்தூய்மை (புகை), மனத்தூய்மை பெற்றுள்ளவர்களாக விளங்கிவருகிறார்கள். இந்த கிராமம் விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், சூரப்பட்டு பஸ்டாப்பிலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டரில் உள்ளது. அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. வித்தியாசமான ஏழு செம்பொன்னுக்கு போய்வரலாமே.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.