Advertisment

மழையில் கதவை தட்டியவருக்கு விதைத்த நெல்லை தோண்டியெடுத்து சமைத்துக்கொடுத்த நாயன்மார் - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

Nanjil Sampath

Advertisment

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

காலங்காலமாக கட்டிக்காத்து வந்த பண்பாடு கண் முன்னாலே உடைந்து சிதறிக்கொண்டு இருக்கிறது. யாசிப்பவனுக்கு யாசகம் கொடுப்பதில் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், விளம்பரம் தேடக்கூடாது. அப்படியான மனிதர்களைத்தான் இன்றைக்கு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் ட்யூப் லைட்டில் அதன் வெளிச்சத்தை அடைக்கக் கூடிய அளவிற்கு அதை வாங்கிக்கொடுத்தவரின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. சராசரி மனிதர்கள்கூட விளம்பரப்பிரியர்களாக மாறிவிட்ட சூழலில் இந்த நிலை நேற்றும் இருந்ததா என்று பார்த்தால், இல்லை.

சேதுபதி சீமையில் நெல்வயல், கழனி சூழ்ந்த திருத்தலம் இளையான்குடி. அந்த இளையான்குடியில் 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் இருந்தார். அனைத்து நாயன்மார்களுக்கும் தனித்தனி பெருமை இருக்கிறது. அந்த வகையில், இளையான்குடி மாறநாயனார் தமிழ்ப்பண்பாடான விருந்தோம்பலில் பேரும்புகழும் பெற்றவர். விருந்து சமைப்பதையும் விருந்தை அடியார்களுக்கு பரிமாறுவதையுமே தன் வாழ்க்கையாக கொண்டு வாழந்தவர் இளையான்குடி மாறநாயனார். விதைநெல்லை சமைத்துப்போடும் அளவிற்கு நெருக்கடியான தருணம் ஏற்பட்டபோதுகூட அதை மகிழ்ச்சியோடு செய்தார்.

Advertisment

ஒருநாள், மழை பொழிந்து கொண்டிருக்கும் நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது. கதவைத் திறந்து பார்த்தால் எனக்கு சோறு வேண்டும் என்று கேட்டு ஒரு சிவனடியார் நிற்கிறார். இளையான்குடி மாறநாயனார் தன் மனைவியிடம் சென்று விஷயத்தைக் கூறுகிறார். சமைப்பதற்கு வீட்டில் நெல் இல்லை. உடனே மனைவி, கழனிக்குச் செல்லுங்கள். நேற்றுதானே விதைத்தீர்கள் எப்படியும் இந்நேரம் முளைத்திருக்காது. விதைத்த நெல்லை எடுத்து வாருங்கள் என்கிறார். அந்தக் கொட்டும் மழையில் ஓடிச் சென்று இளையான்குடி மாறநாயனார் விதைத்த நெல்லை எடுத்துக்கொண்டு வருகிறார். அதை உலர்த்தி, அரிசியாக்கி சமைப்பதற்கு ஆயத்தமாகிறார் இளையான்குடி மாறநாயனாரின் மனைவி.

சமைப்பதற்கு எல்லாம் தயாராகிவிட்டாலும்கூட, கொட்டும் மழையில் காய்ந்த விறகு கிடைக்கவில்லை. உடனே வீட்டின் கூரையில் இருந்த கட்டையை உருவி அதைச் சமைப்பதற்கு பயன்படுத்துகிறார். உணவு தேடி வந்தவருக்கு சமைக்க விதை நெல், அடுப்பெறிக்க கூரை விறகு என்று உடனடியாக ஏற்பாடு செய்து சமைத்துக்கொடுத்தார்கள் இளையான்குடி மாறநாயனாரும் அவரது மனைவியும். தமிழர்களின் விருந்தோம்பல் பண்பிற்கான உதாரணமாக வாழ்ந்தவர் இளையான்குடி மாறநாயனார். இதை பெரியபுராணத்தில் தெய்வச்சேக்கிழார் பதிவு செய்துள்ளார்.

சேக்கிழாரின் பெரியபுராணத்தை படிக்கிறபோது அதில் பக்தி மட்டும் இல்லை; தமிழர்களின் பண்பாடு, விருந்தோம்பல், ஈரம், வீரம் இருக்கிறது. இப்படியாநம்மவர்கள் வாழ்ந்தார்கள் என்று நினைக்கும்போது நமக்குள் பெருமை குடிகொள்கிறது. அன்றைக்கு கொடுப்பதை அறமாக கருதினார்கள். இப்படிப்பட்ட பண்பாட்டை உலக நாகரிகத்தில் எங்கேயும் பார்க்க முடியாது. தோண்டத் தோண்ட புதையல் கிடைப்பது மாதிரி, தோண்டத் தோண்ட தங்கக்கட்டி கிடைப்பது மாதிரி பெரிய புராணத்தை தோண்டத் தோண்ட தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றில் இப்படியான தித்திப்பான செய்திகள் எல்லாம் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe