Advertisment

"நீண்ட நாள் வாழ இந்த சைவத் திருமுறை படியுங்கள்" - நாஞ்சில் சம்பத் பகிரும் திருமூலரின் திருமந்திர மகிமை

nanjil sampath

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், திருமந்திரம் குறித்தும் அதை எழுதிய திருமூலர் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

Advertisment

"சித்தர்கள் குறித்து தற்போது மிகப்பெரிய விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது. மொத்தம் 18 சித்தர்கள் இருந்ததாக சித்தர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். சித்தர் ஜீவசமாதியான இடம் என்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் 10 நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டால் நெஞ்சில் நம்பிக்கையும் கண்களில் ஒளியும் பிறக்கிறது என்று பலர் நம்புகிறார்கள். இந்தச் சித்தர்களுக்கெல்லாம் ஒருவர் தலைவராக இருந்தார் என்றால் அவர்தான் திருமந்திரத்தை தந்த திருமூலர். கற்பனை உலகில் சஞ்சரித்துக் கிடந்த மக்களை நிஜ உலகத்திற்கு அழைத்து வந்தவர் அவர். வாழ்க்கை என்பது மாயம் என்று சொல்லக்கூடியவர்கள் மத்தியில் வாழ்க்கை வாழ்வதற்கே என்று வரையறுத்துச் சொன்னவர் திருமூலர்.

Advertisment

ஒரு யானை சிற்பம் இருக்கிறது. அதைப் பார்த்த ஒரு குழந்தை, அப்பா யானை... அம்மா யானை என்று கூறி அஞ்சி நடுங்குகிறது. ஆனால், அந்த யானை சிற்பத்தை ஒரு சிற்பி பார்க்கும்போது அதை அவர் சிற்பமாகவே பார்க்கிறார். ஒரு சிற்பத்தை சிற்பி பார்ப்பதற்கும் குழந்தை பார்ப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. இதை,

"மரத்தை மறைத்தது மாமதயானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே"

என்று திருமூலர் பாடினார். இன்பத்தமிழில் எத்தனையோ இலக்கியங்கள் இருந்தாலும், இன்பத்தமிழில் எத்தனையோ காப்பியங்கள் இருந்தாலும் சொல்லுகிற சொல்லை கல்வெட்டுபோல சொல்கிறவர் திருமூலர். அதனால்தான் யுகங்கள் தோறும் திருமூலர் பேசப்படுகிறார்.

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று இன்றைக்கு மனிதன் ஆசைப்படுகிறான். ஆரோக்கியமாக இருப்பதற்கு எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான். தான் தேடிய செல்வத்தின் பெரும்பகுதியைக் கொட்டிச்செலவழித்து தன்னுடைய உடலைப் பேணுவதற்காக அவன் ஏங்குகிறான். இன்றைய இளைஞர்கள் ஜிம்மிற்குச் செல்கிறார்கள், விளையாட்டு மைதானத்திற்குச் சென்று பல்வேறு விதமான பயிற்சிகளைச் செய்கிறார்கள். இதற்கான அகரம் எழுதியவர் திருமூலர்தான். அவர்தான் 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார். உன்னுடைய உயிர் உன்னுடைய உடம்பை பொறுத்தது என்று சமகால அறிவியலை அன்றே சொன்னார்.

இன்றைக்கு வழிபாட்டின் பெயரால் கருத்து வேறுபாடுகளும் காழ்ப்புணர்ச்சியும் காலூன்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார் திருமூலர். ரத்தம் சிந்தி சாதிக்க முடியாத புரட்சியை ஒரு மந்திரத்தில் சொல்லி இம்மண்ணை பொன்னாக்கியவர் அவர். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதை அண்ணா சொல்லியதாகப் பலர் நினைக்கிறார்கள். அதைச் சொல்லியவர் திருமூலர். திருமந்திரத்தில் உள்ள மாணிக்கச் சொல்தான் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது. திருமூலரின் திருமந்திரத்தை பின்பற்ற ஆரம்பித்தோமேயானால் உடம்பும் வளரும் உயிரும் வளரும். நீண்ட நாள் வாழ்வதற்கு காயகல்பத்தை தேடிப்போகாமல், திருமந்திரத்தைத் தேடிப்போங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும்".

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe