Skip to main content

தமிழுக்கு இவ்வளவு வல்லமையா? யோசிக்க வைக்கும் ஆண்டாள் பாடல்கள் - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ் வரலாறு

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

சமயகாலம் சந்தனத்தமிழின் பொற்காலம். அந்தக் காலத்தில் சமயாச்சாரியர்களின் கருத்துக்கு மனம் இருந்தது, குணம் இருந்தது. காலம் தன்னை எப்படி தோலுரித்துக்கொண்டாலும் சமயம் இந்த மண்ணில் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. அதிலிருந்து மீளவும் முடியாது. அன்றைக்கு மொத்தம் 12 ஆழ்வார்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் பெண். அவர்தான் ஆண்டாள். அந்த ஆண்டாள் பாடிய பாடல்களின் தொகையைப் பார்த்தால் பிற 11 ஆழ்வார்கள் பாடியதைவிட குறைவாகத்தான் பாடியிருக்கிறார். நாச்சியார் திருமொழியும் திருப்பாவையும் 30 பாடல்கள்தான். அந்த 30 பாடல்களிலேயே திவ்யபிரபந்தத்தை மேலே தூக்குகிறார் ஆண்டாள். நம்முடைய தாய் தமிழுக்கு இவ்வளவு வீச்சும் வல்லமையும் இருக்கிறதா என்பதை ஆண்டாளின் பாட்டைப் படிக்கிறபோது அறிந்துகொள்ள முடிகிறது. இறை நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஆண்டாளின் பாட்டைப் படிக்கிறபோது அதில் விழுந்துவிடுவார்கள். 

 

சின்னஞ்சிறு வயதில் கண்ணனைக் காதலிக்கிறார் ஆண்டாள். அவரது தந்தை பெரியாழ்வார் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்க்க நினைத்தபோது, நான் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்துவிட்டேன், கல்யாணம் செய்துகொண்டால் கண்ணனைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று உறுதியாகக்கூறி சபதம் எடுக்கிறார். மனிதர்கள் என்னை மணம் செய்துகொள்வது என்று ஒரு நிலை இருக்குமானால் நான் வாழமாட்டேன் என்பதை மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழகில் லேன் என்கிறார். 

 

"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்..." 

 

என்ற பாடலை எப்படித் தொடங்கினாரோ அதே வீச்சோடு முடித்திருப்பார் ஆண்டாள். ஆகவே, புலமை, திறமை, கல்வி, ஞானம் என்பது பெண்களுக்கும் உரியவைதான். பெண்கள் கல்வி கற்கக்கூடாது, பெண்கள் கல்விச்சாலைக்கு போகக்கூடாது என்று யார் சொன்னாலும் பிற 11 ஆழ்வார்களுக்கும் இணையாக சமவெளியில் நின்று பாடுகிறார் ஆண்டாள். அர்த்தமுள்ள இந்து மதத்தில், ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று கண்ணதாசன் பதிவு செய்துள்ளார். புலமையும் திறமையும் பெண்ணுக்கும் உரியவைதான் என்று பாரதி சிந்திப்பதற்கு முன்னால், பாவேந்தர் ஒப்புக்கொள்வதற்கு முன்னால், உலகம் ஏற்றுக்கொள்வதற்கு முன்னால், பெண் குளத்தின் சார்பாக ஒரு பெண் நிரூபித்தார் என்றால் அவர் பெயர் ஆண்டாள். அந்த நாள் தமிழகத்தை 30 பாடல்களில் சித்தரித்தார். அந்த நாள் வாழ்க்கை முறையை 30 பாடல்களில் சொல்லிவைத்தார். 

 

நேற்றுவந்த சவால், இனி வரக்கூடிய அறைகூவல் என இரண்டையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சல் என்னிடம் உள்ளது என்று அவர் பதிவுசெய்துள்ளார். இன்றைக்கு தன்னம்பிக்கை கருத்தரங்குகள் நாடெங்கும் நடக்கின்றன. இன்றைக்கு நாம் பேசும் தன்னம்பிக்கையை அன்றே தமிழுக்கு தந்தார் ஆண்டாள் நாச்சியார். நேர்த்தியாக எழுப்பப்படுகிற மாளிகையைப்போல தன்னுடைய பாடல்களில் அழகான சொற்களைப் பெய்து அருந்தமிழுக்கு கொடையாக இருந்தார், விடுதலைக்கு விடையாக இருந்தார் ஆண்டாள்.