Skip to main content

சிதம்பர நடராஜர் மீதான காதல்... சலவை தொழிலாளி காலில் விழுந்து வணங்கிய சேர மன்னன்!

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், சேர மன்னன் சேரமான் பெருமாள் நாயனார் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

“சேரர் காலம், பாண்டியர் காலம், சோழர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் தமிழகத்தின் பொற்காலம் என்று சொல்கிறோம். 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர மன்னன் சேரமான் பெருமாள் நாயனார் இருக்கிறார். இன்றைக்குத் திருச்சூருக்குப் பக்கத்தில் வஞ்சிக்குளம் என்ற ஊர் உள்ளது. அன்றைக்கு இந்த ஊர் அஞ்சைக்குளம் என்றழைக்கப்பட்டது. அங்கு ஒரு சிவன் கோவில் உள்ளது. அங்குள்ள சிவனுக்கு அஞ்சைக்குளத்தப்பன் என்று பெயர். சேரமான் பெருமாளின் அரண்மனையும் அதே ஊரில்தான் இருந்தது. சேர மன்னனான சேரமான் பெருமாள் தன்னுடைய அலுவல்களை முடித்துவிட்டு தில்லை கூத்தர் சிதம்பர நடராஜனை தினசரி அந்த அரண்மனையில் பூஜை செய்வார். அதை அவர் வழக்கமாகவே வைத்திருந்தார். ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்’ என தொல்காப்பியம் தமிழ்நாட்டின் எல்லையை வரையறை செய்வதற்கு முன்பாகவே சேரனின் ஆட்சி அங்கேவரை இருந்துள்ளது. அந்த சேர மன்னன், இறைவனை தன்னுடைய தோழனாகப் பார்த்த சமயக்குறவர் ஆலால சுந்தருக்கு உற்ற நண்பனாக இருந்தார். இரவு உறங்குவதற்கு முன்பாக கண்ணுறக்கம் வருகிறவரைக்கும் நடராஜரை அனுதினம் பூஜை செய்வார். ஒருகட்டம் வரும்போது அவருடைய காதில் ஒரு சிலம்பொலி கேட்கும். அந்த ஒலி கேட்டவுடன் இறைவன் என்னுடைய பூஜையை ஏற்றுக்கொண்டான் என்று பூஜையை நிறுத்திவிடுவார். 

 

ஒருநாள் களைத்துப்போகிற அளவிற்குப் பூஜை செய்தும் அவருடைய காதில் சிலம்பொலி கேட்கவில்லை. மிகுந்த கவலைப்பட்ட அவர் மூர்ச்சித்து கீழே விழுந்துவிடுகிறார். நான் என்ன குற்றம் செய்தேன், யார் வீட்டில் எரிந்துகொண்டிருந்த விளக்கை அணைத்தேன், யார் வயிற்றுச் சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டேன், யார் பாதையில் முள்ளை எறிந்தேன், எனக்கேன் இன்று உங்கள் சிலம்பொலி கேட்கவில்லை என அவர் கதறி அழுகிறார். உடனே தில்லை நடராஜர் அவருக்குக் காட்சி தந்து நீ எந்தக் குற்றமும் இழைக்கவில்லை என்கிறார். இறைவன் காட்சி தந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் கவலையுடன், ஏன் எனக்கு தாமதமாக இந்த சிலம்பொலி கேட்டது. இதற்கான காரணத்தை நான் அறிந்துகொள்ளலாமா எனக் கேட்கிறார். அதற்கு, ‘ஒன்றும் இல்லை சேரமான்... உன் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னுடைய அருளுக்குப் பாத்திரமான உனக்கு என் கருணை எப்போதும் இருக்கும். ஆலால சுந்தரர் அழகான தமிழில் பாடி என்னைப் பருகிக்கொண்டிருந்தார். அந்தத் தமிழ் கேட்டு மயங்கிவிட்டேன். அதனாலேயே உனக்கு சிலம்பொலி தருவதில் தாமதமாகிவிட்டது’ என்று சேரமான் பெருமாள் நாயனாருக்கு சிவபெருமான் கூறுகிறார்.  ஆலால சுந்தரரின் தமிழ் கேட்டு உனக்கு சிலம்பொலி தருவதில் தாமதம் ஏற்பட்டது என தில்லைக்கூத்தர் கூறினார் என்றால் அன்றைக்குத் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இப்படியெல்லாமா இருந்தது தமிழ்நாடு... இப்படியெல்லாமா இருந்தது தமிழுக்கு மரியாதை என்று நினைக்கும்போது உள்ளம் மயங்குகிறது.  

 

ஆனால், இன்றைக்குத் தில்லைக்கூத்தர் சன்னதியிலேயே தேவாரம் படிப்பதற்குத் தமிழர்களுக்கு உரிமை இல்லை. இன்றைக்குத் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்றாலும் செய்வதற்கு யாருக்கும் மனமில்லை. இவ்வளவு பெரிய கருவூலங்களைத் தமிழர்களுக்கு சமயக்குறவர்கள் தந்தபோதிலும் தமிழர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. சேரமான் பெருமாள் நாயனார் பற்றி இன்னொரு செய்தியையும் உங்களுக்குக் கூறுகிறேன். 

 

ஒருநாள் சலவைத் தொழிலாளி ஒருவர் தலையில் உவர்மண் சுமந்துகொண்டு வருகிறார். அப்போது திடீரென மழை பொழிந்துவிடுகிறது. அந்த மழையில் உவர் மண் கரைந்து அவர் உடல்முழுவதும் நிரவியிருந்தது. அது பார்ப்பதற்கு உடல் முழுவதும் திருநீறு பூசியதுபோல இருந்தது. அதை திருநீறு என்று நினைத்த சேரமான் பெருமாள் நாயனார், அவர் காலில் விழுந்து வணங்கினான். 63 நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் சேர மாமன்னன், திருநீறு பூசப்பட்ட திருமேனியாகத் தெரிந்த சாதாரண சலவைத் தொழிலாளியைக் கண்டு அவர் காலில் விழுந்து வணங்கினான். ஒரு மன்னன், சலவைத் தொழிலாளி காலில் விழுந்து வணங்கினான் என்றால் மேடும் பள்ளமும் இல்லாத சமூகமாக இந்த தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதை சமயங்களின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்டான், அடிமை என்று பேசுகிற இந்த உலகத்தில், சேர மன்னன் சலவைத் தொழிலாளி காலில் விழுந்து, அவன் திருநீறு பூசியிருந்தான் என்ற காரணத்திற்காக வணங்கினான் என்றால் சமயம் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியுள்ளது.”